pATal39
pATal38.html
pATal39.html
pATal40.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
39. ஏற்றத்தின் சிறப்பு.
39. ஏற்றத்தின் சிறப்பு.
காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே.
(இ—ள்.) காற்று — காற்றினுடைய உதவியினால், மேல் — வானத்தின்மீது, வருகின்ற — சஞ்சரிக்கின்ற, கார் - வானமானது, விடினும் — (மழைபெய்யாது) விட்டாலும், கடல் சுவறி — கடல் நீரும் வற்றி, யாற்று நீர் அற — நதியின் நீரும் வற்றிவிடுமாறு, வெள்ளியரசனும் — சுக்கிரபகவானும், தெற்கு ஆயிடினும் — தெற்கே யிருந்தாலும், நாளும் — ஒவ்வொருதினமும், ஏற்றமேகொடு — ஏற்றத் தினையே கருவியாகக்கொண்டு, இறைத்துஉம் — (நீரை) இறைத்தேனும், உலகம் விளைவித்து — உலகத்திலே (பயிரை) விளையச்செய்து, காத்து — பாதுகாத்து, உயிர் வளர்த்தல் — உலகத்துயிரை வளரச் செய்தல், காராளர் தம் கடனே — வேளாளரின் கடமையான ஒழுக்கமாம்; (எ - று.)
இதனால், மழைபெய்யாத காலத்தும், வேளாளர் நீர்ப்பாங் குள்ள கிணறு முதலியவற்றில் ஏற்றத்தைக் கொண்டு இறைத்துப் பயிரையுண்டாக்கி உலகத்தாரை ஓம்புமாறு கூறப்பட்டது. வானத்திலே கார் சஞ்சரிப்பது காற்றின் பிரேரணையினாலேயே யாதலால் “காற்றுமேல் வருகின்ற கார்” என்றார். சுவறி=சுவற என்ற எச்சத்தின் திரிபாகக் கொள்ளினுமாம். அரசன் — தலைமைப் பொருளுணர்த்திற்று. வெள்ளி தெற்கேயாயிடின் பஞ்சமுண்டா மென்பது கீழ் 30-ஆஞ்செய்யுளிலும் வந்துள்ளது. காத்துமே, உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது; ஏ - இசைநிறை. — (39)