pATal38
pATal37.html
pATal38.html
pATal39.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
38. பயிர்வளர்தற் சிறப்பு.
38. பயிர்வளர்தற் சிறப்பு.
சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வள வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே.
(இ—ள்.) கடல் சூழ்ந்த — கடலினாற்சூழப்பட்ட, பார் — பூமியிலே, வளரும் — தோன்றியுள்ள, இசை வளரும் — பெரும்புகழ் படைத்த, காராளர் — வேளாளரின், பயிர்—, வளரும் — வளர்கின்ற, திறத்தாலே — தன்மையாலே, சீர் வளரும் மறை — சிறப்புப்பொருந்திய வேதம், வளரும் — வளர்ச்சிபெறும்; திறல்வேந்தர் முடி — வெற்றி வேதரின் கிரீடம், வளரும் — செழித்துத்தோன்றும்; பேர் வளரும் வணிகர்க்கு — பெருமைமிக்க வணிகசாதியார்க்கு, பெரு நிதியம் — பெருஞ்செல்வம், மிக வளரும் — மிகுதியாகவுண்டாகும்; ஏர் வளரும் திரு வளரும் — அழகுமிக்க (கல்விகேள்வி முதலிய) செல்வமும் செழித்துத் தோன்றும்; (எ - று.)
பயிர் வளர்ந்து விளைதலே, உலகத்தில் வேதமோதுதல் முதலியன நிகழ்தற்கு ஏதுவா மென்றவாறு. மறைக்குச்சிறப்பு — மனிதராற் செய்யப்படாமை, தன்னுட்கூறியபொருள் பொய்படாமை, ஐயந்திரிபுகளைக் கொண்டு கூறாமை முதலியன. “இசைவளரும், கடல் சூழ்ந்தபார் வளரும்” என்ற இரண்டு தொடரையும் வினை முற்றாகக்கொண்டு, காராளர் பயிர் வளருந்திறத்தாலே மறைவளரும் ;..... திருவளரும்; இசைவளரும்; பாரும் வளரும் என முடிப்பினும் அமையும். வளருமென்றசொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது — சொற்பொருட்பின்வருநிலையணியாம். — (38)