pATal37 pATal36.html pATal37.html pATal38.html ஏரெழுபது மகாகவி கம்பர் 37. பயிர்முதற் சிறப்பு.
பொருளடக்கம் | 36. பயிர்விளைத்தற் சிறப்பு. | 38. பயிர்வளர்தற் சிறப்பு. | அகெடமி

பயிரின் முதன்மையைச் சிறப்பித்துக் கூறுவது. 37. பயிர்முதற் சிறப்பு. அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல் முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில் வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல் செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. (இ—ள்.) அந்தணர்க்கு — பிராமணர்க்கு, முதல் — முதன்மையாகச் சிறந்திருப்பது, வேதம் — வேதமேயாகும்; அரசருக்கு—, முதல், வெற்றி — (பகைவரை) வெல்லுதலேயாம்; முந்திய சீர் வணிகருக்கு — முற்பட்ட புகழையுடைய வணிகர்கட்கு, முதல்— ஆயம் முதல் —ஆதாயத்திற்குக் காரணமான மூலதனமாம்; உலகில் வந்த — இவ்வுலகத்திற் பிறந்த, உயிர்தமக்கு எல்லாம் — உயிர்கட் கெல்லாம், மருந்து ஆக வைத்த — மருந்தாகவைத்துள்ள, முதல் — முதலாவதோ, செந்தமிழ்க்கு முதல் ஆய — செந்தமிழைப் பயில்வதிலே தலைமைபெற்ற, திருவாளர் — சீமான்களாகி உழவுத்தொழிலைப் புரிபவரான வேளாளரின், செய்முதல் —விளைவயலின்கணுள்ள பயிர்முதலேயாம்; (எ-று.) அந்தணர்க்கு வேதமும், அரசர்க்குவெற்றியும், வணிகர்க்கு மூலதனமும் முதலாகும்; இங்ஙனம் ஒவ்வொருசா தியார்க்கு முதலா கும் வேதம் முதலியனபோல் வல்லாமல், திருவாளர் செய்முதல், உலகிலுயிர்க்கெல்லாம் மருந்தாகின்ற முதலாகு மென்க. செய் முதலை மருந்து என்றது-பசிநோய் உடலை வருத்தாது காத்தல் பற்றியாகும். திருவுக்கு உழவே காரணமா மாதலால், அத்தொழி லைப்புரியும் வேளாளரை 'திருவாளர்' என்றது. இங்கு அந்தணர் முதலிய ஒவ்வொருசாதியார்க்கே முதலாகும் வேதம் முதலியவற் றைவிட, வேளாளர் செய்முதல் உலகத்துயிர்க்கெல்லாம் முதலா கும் என அதற்கு மேன்மைதோன்றக்கூறியது - வேற்றுமையணி யின்பாற்படும். ஆயம் - வடசொல்; ஆதாயம், இலாபமென்பது, பொருள். "முதலிலார்க்கூதிய மில்" என்பது, இங்குக் காணத் தக்கது. — (37)
பொருளடக்கம் | 36. பயிர்விளைத்தற் சிறப்பு. | 38. பயிர்வளர்தற் சிறப்பு. | அகெடமி