pATal35 pATal34.html pATal35.html pATal36.html ஏரெழுபது மகாகவி கம்பர் 35. நடவுமுனைச் சிறப்பு.
பொருளடக்கம் | 34. கைப்பாங்கின் சிறப்பு. | 36. பயிர்விளைத்தற் சிறப்பு. | அகெடமி

நடவுமுனையாவது — ஒருபக்கம்உழ ஒருபக்கம் நட இவ்வாறு இரண்டும் சேர்ந்துநிகழும் இடம். 35.நடவுமுனைச் சிறப்பு. உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர் அலறத்திண் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர் சிலவருழச் சிலவர் நடும் அவையன்றோ திருமுனையே. (இ—ள்.) உலகத்தில் — இவ்வுலகத்திலே, பகடு உழக்கும் — யானை மீதேறிச் செலுத்துகின்ற, ஓங்கு முடி திறல் வேந்தர் சிறந்த — கிரீடத்தையணிந்த வலிமையையுடைய அரசர், அலற — (தமது) பகைவர் கதறும்படி, திண் பகடு உழக்கும் — வலியயானைகளைச் செலுத்தவல்ல, அதுவும் — அந்தப்போர்முனையும், ஒரு முனை ஆமோ — முனையென்று சொல்லுதற்கு உரியதாகுமோ? உலகத்தில் —, பகடு — கடாக்களை, உழக்கும் — (வயலிலே) செலுத்துகின்ற, உயர் முடி கொள் — (நடுமாறு) சிறந்த நாற்றுமுடிகளைக் கொண்ட, வேளாளர் — வேளாளரில், சிலவர் — சிலர், உழ — உழுது கொண்டிருக்க, சிலவர்—, நடும் — (நாற்றுமுடிகளை) நடுகின்ற, அவை அன்றோ — அவையல்லவா, திருமுனை — சிறந்த முனையென்று சொல்லுதற்குத் தக்கது? (எ - று.) உலகத்து உயிர்களெல்லாம் வாழ்வுபெறுமாறு வேளாளர் புரியும் நடவுமுனையே முனையென்று சொல்லத்தகுமே யன்றி, உயிர்கள் நாசமடைவதற்குக் காரணமான போர்முனையை முனை யென்று பாராட்டிச் சொல்லுதலேற்குமோ? ஏலா தென்றவாறு. திருமுனையென்று சொல்லத்தகா தென்றகருத்தை “அலறத்திண் பகடுழக்கும்” என்ற விசேஷணம் தெரிவித்தலால், கருத்துடையடை மொழியணியாம். முதலடியில் பகடுழக்கும் என்ற தொடர்க்கு — காளைபோல் திரிகின்ற என்று பொருள் கொள்ளினுமாம்; உழக்கும், உழக்குபகுதி. — (35)
பொருளடக்கம் | 34. கைப்பாங்கின் சிறப்பு. | 36. பயிர்விளைத்தற் சிறப்பு. | அகெடமி