pATal34
pATal33.html
pATal34.html
pATal35.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
34. கைப்பாங்கின் சிறப்பு.
இத்தொடர்-நாற்றுநடுவதிற் கைப்பழக்கத்தாலான சிறப்பு எனப்பொருள்படும். கைப்பாங்குஎன்பதற்கு - கையிலெடுத்துக் கொண்ட பங்கு என்பாருமுளர்.
34. கைப்பாங்கின் சிறப்பு.
மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்து நடக் கற்றாரே கற்றாரே.
(இ—ள்.) மெய் — உண்மைப்பொருளாகிய கடவுள், பாங்கு பட — நன்றாக உணரப்படுமாறு, கிடந்த — (அக்கடவுளின் தன்மையைச் செவ்வனே) கூறுகின்ற, வேதம் நூல் — வேதநூலை, கற்றால் என் — படித்தலினால் (பிறருக்கு) யாதுபயன்? பொய் பாங்கு பட — பொய்த்தன்மை கெட [மெய்யாக], பிறரை — அயலாரை, புகழும் — புகழ்கின்ற, நூல் — நூலை, கற்றால் என் — கற்பதனால்தான் (பிறர்க்கு) யாதுபயன்? செய் பாங்கு பட கிடந்த — வயலிலே இட்ட உரத்தினாலே நன்றாக முளைத்தெழுந்த, செழு — வளப்பமுள்ள, சாலி — செந் நெல்லின், நல்நாற்றை — சிறந்த நாற்றை, கைப்பாங்கு — கைத்திறமையினாலே, பகுந்து நட — பிரித்து நடுதற்கு, கற்றாரே — கற்றவர்களே, கற்றார் — (உலகோர் பயன்பெறும் வழியைக்) கற்றவராவர்; (எ - று.)
கற்றற்குப்பயன் பிறர்க்கு உதவிசெய்வதே யாதலால், கைப்பாங்குபெற நாற்றை நடுமாறு கற்றோர்போல உலகோர்க்கெல்லாம் பயன்விளையக் கற்றவர் பிறரில்லை யாகலால், “கைப்பாங்குபகுந்து நடக்கற்றாரே கற்றார்” என்றார்: இதனால், வேளாளரின் கல்வி போல் மற்றையோர் கல்வி பயன் விளைக்காது என்றவாறு. இவ்வண்ணம் மற்றையோரின் கல்வியையிழித்து வேளாளரின் கல்வியைச் சிறப்பித்துக் கூறியது, அவ்வேளாளரின் தொழிலை மேன்மைப் படுத்தவேணு மென்னுங் கருத்தினாலாகும்: மற்றையோரின் கல்வியை இழித்துரைக்கவேணு மென்னுங் கருத்தினாலன்றென்க. இச்செய்யுளிற் கூறியது — முக்குழிப்பாய்ச்சி நடவு, பத்தி நடவு, கலக்க நடவு, நெருக்க நடவு முதலியவாக நடப்படும் கைப்பாங்கினையாகும்.