pATal31 pATal30.html pATal31.html pATal32.html ஏரெழுபது மகாகவி கம்பர் 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 30. நாறுபறித்தற் சிறப்பு. | 32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு. | அகெடமி

பறித்த நாற்றை நடுதற்காக எடுத்துச்செல்லுதல், நாற்றுமுடி சுமந்து செல்லுத லெனப்படும். 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு. மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல் சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. (இ—ள்.) பை கோலம் முடி — பசிய அழகினையுடைய நாற்று முடியை, (நடுமாறுஎடுத்து), பெருக்காளர் — வேளாளர், பேணி விரும்பி, சுமவார் ஏல் — சுமந்துசெல்லாவிட்டால், சேணுக்கும் திசைப்புறத்தும் — வெகுதூரம்வரையிலுமுள்ள திசைகளினெல்லை முழுதும், செங்கோன்மை செல்லாது — (அரசருடைய) செவ்விய அரசாட்சி நடவாது; (ஆதலால்), மாணிக்கம் முதல் ஆய மணிஅழுத்தி தொழில் சமைத்த ஆணி பொன் முடி வேந்தர் அணி — மாணிக்கம்முதலிய மணிகளையழுத்தித் தொழில்சமைத்த சிறந்த பொன்னினாற்செய்த கிரீடத்தையணிந்த அரசரணிகின்ற, முடியும், முடி ஆமோ — (நாற்று முடிக்குமுன்னே சிறப்பித்துச் சொல்லக்கூடிய) முடியாகுமோ? (எ - று.) அரசர் செங்கோல் எங்கும் இனிது செல்லுதற்கு நாற்று முடியே பரம்பரைக் காரணமா மாதலால், அரசர்முடியும் நாற்று முடிபோலச் சிறப்பித்துக் கூறப்படமாட்டாதென்றபடி. அரசர் முடியிடத்து முடித்தன்மையை மறுத்து, நாற்றுமுடியில் அதனை ஏற்றிக்கூறியது — ஒழிப்பணியின்பாற்படும். வேந்தன் என்பதை இரட்டுறமொழிதலாகக்கொண்டு, தேவேந்திரனுடையசெங்கோல், சேணுக்கு — வானிலே, செல்லாது; இப்பூவுலகத்து வேந்தன்கோல் திசைப்புறத்துச் செல்லாது எனக் கூறுவாருமுளர். பேணி என்பதன்பின் “இருக்கும்” என ஒருசொல் வருவித்து, பெருக்காளரோடு இயைத்து, அரசரென்பார் பகையரசரையும் குற்றஞ்செய்தாரையும் ஒறுத்தலும் மற்றையோரைப் பேணுதலு முடையர்: இந்த வேளாளரோ யாவரையும் ஒருநிகராகப் பேணு தலையுடையவ ரென்று கருத்துக் காண்பாரு முளர். ஆணிப்பொன் — மாற்றறிதற்குக்கொள்ளும் உயர்தரப்பொன்: இதற்குமேல் மாற்றில்லை யென்னும்படி மாற்றுயர்ந்த பொன். முடியும், உம்மை-உயர்வுசிறப்பு. — (31)
பொருளடக்கம் | 30. நாறுபறித்தற் சிறப்பு. | 32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு. | அகெடமி