pATal30 pATal29.html pATal30.html pATal31.html ஏரெழுபது மகாகவி கம்பர் 30. நாறுபறித்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 29. நாற்றங்காற் சிறப்பு. | 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு. | அகெடமி

நாற்றை நடுமாறு பிடுங்குதல், நாறுபறித்தலெனப்படும். 30. நாறுபறித்தற் சிறப்பு. வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென் குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர் மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப் பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. (இ—ள்.) வெறுத்துசினங்கொண்டு, மீன் — மீனராசிக் கண்ணே, சனி — சனியென்னுங்கோள், புகில் என் — பிரவேசித்தால் தான் என்ன? வெள்ளி — சுக்கிரன், தெற்கே — தென் திசைக்கண்ணே, ஆயிடில் என் — வந்திருந்தால்தானென்ன? குறித்த நாள் வரம்பு அழியா — குறித்தநாளின் எல்லை தவறாது பெருக்கெடுத்து வருகிற, குலம் பொன்னி — சிறந்தகாவிரிநதி பாயப்பெற்ற, திருநாடர் — சிறந்த சோழநாட்டை யுடையவரான வேளாளர், நின்ற வளம் வயலினிடை — நிலைபெற்ற வளப்பத்தையுடைய வயலிலுள்ள நாற்றை—, பறித்து மறித்து நாட்டிட — பிடுங்கி மீண்டும்நடுமாறு, நாள் கொண் டதன்பின் — நாளைக் குறித்துக்கொண்ட பிறகு, பார் — இவ்வுலகத் துயிர், பசிக்கமாட்டாது — பசித்திராது; (எ - று.) இரண்டாமடியில் “குறித்தநாள் வரத்தொழியா” என்று பாடமிருப்பின் நலம். மீனத்திற் சனிபுகுதலும், வெள்ளி தெற்கேஆதலும் பஞ்சம் வருவதைத் தெரிவிக்குமென்க. அங்ஙனம் பஞ்சம் நேர்ந்தாலும், தவறாது நீரைப்பெருக்குகின்ற காவிரி பாயும் சோணாட்டு வேளாளர், விளைவை யுண்டாக்க முயன்றால் உலகம் பசியாதென்றவாறு. மீன் — பன்னிரண்டாம் ராசியாகிய மீனம்: அந்த ராசியிற் சனி பகவான் பிரவேசிப்பானாயின் தீமை விளையுமென்பது, சோதிட நூல்களிற் பிரசித்தம். இனி, மீன் — இடபம், சிங்கம், மீனம் என்னும் கோள்கட்கு உரிய நட்சத்திரங்களைக் குறிக்குமெனினுமாம்: “கரியவன்புகையினும் புகைக்கொடிதோன்றினும்; பெயல் வளஞ்சுரப்பக் காவிரிப்புதுநீர்க்கடுவரல்” என்ற சிலப்பதிகாரமும், “கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னும் இவற்றினோடுமாறுபடினும்” என்று அங்கு அடியார்க்குநல்லா ருரைத்திருப்பதும் காண்க: இனி, “வெறுத்து மீன் சனிபுகிலெ னென்பதற்கு” — சனிக்கோள் மாறுபாடுகொண்டு காணாக்கோள்களுள் ஒன்றாகிய தூமகேதுவைச் சேர்ந்தாலென்? என்று பொருள் கொள்ளலுமொன்று: “கரியவன் புகையினும்” என்று தொடங்குஞ் சிலப்பதிகார அடிகட்கு அரும்பதவுரையாசிரியர் “சனி தூமனோடு கூடினும்” என்று உரைத்திருத்தல் இதற்கு மேற்கோளாகத் தக்கது. “வறிதுவடக்கிறைஞ்சிய சீர்சால்வெள்ளி” என்றவாறு சிறிதுவடக்குப்புறஞ் சாய்ந்தாற்போல இருத்தல் மழைக்கோளாகிய வெள்ளிக்கு இயல்பாதலால் அது அந்நிலைமாறித்தென்புறத்தி லிருந்தாலும் என்பது “வெள்ளி தெற்கேயாயிடில்” என்பதன் பொருள். “மைம்மீன் புகையினுந் தூமந்தோன்றினும், தென் றிசைமருங்கின் வெள்ளியோடினும்; பெயல்பிழைப்பறியா”, “அலங்குகதிர்க்கனலி நால்வயிற்றோன்றினும், இலங்குகதிர் வெள்ளி தென்புலம்படரினும், அந்தண்காவிரி வந்துகவர் பூட்ட” என்ற புறநானூறும், “வசையில்புகழ் வயங்கு வெண்மீன், திசை திரிந்துதெற்கேகினும், … … புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, … … காவிரி” என்ற பட்டினப்பாலையும் இங்குக் காணத்தக்கன. இக்காலத்தும் காவிரியில் பதினெட்டாம் பெருக்கு என்று வழங்கப்பட்டு ஆடியின் பதினெட்டாந்தெய்தியிற் காவிரிப் பெருக்குத் தவறாது வருதல் காண்க. மறித்து — தண்ணீரைக்கட்டி என்றும், தெற்கு — கன்னிராசி யென்றும் பொருள்கூறினாரு முளர்: பொருந்துமேற் கொள்க. “கன்னிச்செவ்வாய் கடலும் வற்றும்” என்ற பழமொழியே சோழநாட்டில் வழக்கிலுள்ளது. — (30)
பொருளடக்கம் | 29. நாற்றங்காற் சிறப்பு. | 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு. | அகெடமி