pATal29 pATal28.html pATal29.html pATal30.html ஏரெழுபது மகாகவி கம்பர் 29. நாற்றங்காற் சிறப்பு.
பொருளடக்கம் | 28. முளையின் சிறப்பு. | 30. நாறுபறித்தற் சிறப்பு. | அகெடமி

நாற்றங்கால் — நாற்று விடப்பட்டிருக்கும் இடம். 29. நாற்றங்காற் சிறப்பு. ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின் ஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோ வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின் நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. (இ—ள்.)ஏறு வளர்த்திடு முகில்உம் — (தன்னிடத்து) இடியை மிகுதியாகவுண்டாக்குகின்ற (நீர்கொண்ட) காளமேக்மும், இசை வளர்க்கும் — (கைம்மாறுவேண்டாமல் மழைபெய்து உலகத்துயிர்களைப் பாதுகாத்துக்) கீர்த்தியை மிகுதியாகக்கொள்ளும்,” என உரைப்பின் — என்றுகூறினால், (அம்மழைநீராற் பெருகுகின்ற), ஆறு-நதி, சென்றுவளர்த்திடுவது— அலைகடலை தான் அன்றோ — (நீர்) அலையுந்தன்மையைக்கொண்ட கடலையேயல்ல வோ? (ஆகையால்), வளர்ப்பனவேறுகிடப்ப — (உலகத்துயிர்களை) வளர்ப்பவையென்று சொல்லப்படுகின்றவேறுபொருள்கள் கிடக்கட்டும்: வேளாளர் — வேளாளர்கள், விளை வயலின் — விளைகின்ற வயலிலே, நாறு வளர்த்திடில் அன்றி — நாற்றை நன்கு வளர்த்தா லல்லாமல், ஞாலம் — இவ்வுலகத்தில், உயிர் — பிராணிகள், வளராது — வளரமாட்டா; (எ - று.) மழைநீர்பெய்தாலும் வேளாளர் நன்குவிளையுமாறு நாற்று விடாவிட்டால், உலகத்துயிர்கட்கு உணவுப்பொருள்கிடைக்கா தாதலால், மழை முதலியன உலகத்துயிர்கள் வளர்தற்கு நேரே காரணமாகா வென்க. மழைபெய்து ஆற்றிலே வெள்ளம்வருதலே உலகத்துயிர்வாழ்தற்குக் காரண மென்பாரை நோக்கி, அவ்யாற்று நீர் கடல்வளர்வதற்குக் காரணமாவதன்றி, உலகத்துயிர்கள் வாழ்வதற்கு நேரே காரணமன் றென்று மறுத்தவாறு. ஒன்றை வளர்ப்பவ ரென்று சொல்லப்படுவார். தாம் உடனிருந்து பாதுகாக்கப்படும்பொருட்கு யாதோரிடையூறும்வராது காத்தலே முறைமையாதலின், அங்ஙனம் உடனில்லாது மழையாற்பெருகும் யாற்றின் நீர் கடலிற்சென்று விழுந்திடுதலால், “ஆறுசென்று வளர்த்திடுவது அலைகடலைத் தானன்றோ” என்றது. “கிடப்ப”“அகர வீற்றுவியங்கோள்”: “கிடக்க” என்ற பாடம், நன்கு பொருந்தும். இனி, “கிடப்ப” என்பதைச் செயவெனெச்சமாக்கொண்டு உரைத்தலும் ஒன்று. உயிர் —சாதியொருமை: ஆதலால், ஒருமை முற்றைக் கொண்டது. — (29)
பொருளடக்கம் | 28. முளையின் சிறப்பு. | 30. நாறுபறித்தற் சிறப்பு. | அகெடமி