pATal28 pATal27.html pATal28.html pATal29.html ஏரெழுபது மகாகவி கம்பர் 28. முளையின் சிறப்பு.
பொருளடக்கம் | 27. வித்துவிளைத்தற் சிறப்பு. | 29. நாற்றங்காற் சிறப்பு. | அகெடமி

விதைத்தபின் விதைத்த அவ்வித்தினின்று எழும் முளையின் சிறப்பைக் கூறுவது. 28. முளையின் சிறப்பு. திறைமயங்கா தருள்விளங்குஞ் செயன்மயங்காத் திறல்வேந்தர் நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள் மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின் முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. (இ—ள்.) உலகத்தின் — இவ்வுலகத்திலே, முறை மயங்காதவர் — (தம்முடைய) குலவொழுக்கத்தினின்று மாறுபடாத வேளாளர் வித்திய, வயலின் — வயலிலே, முளை — விதையின்முளை, மயங்கா — மழுங்கு தலையடையாது நன்குதோன்றிய, திறத்தாலே — தன்மையாலே, அருள் விளங்கும் செயல் மயங்கா — தயையோடு தோன்றுகின்ற செயலை (உலகோர்க்குத்) தவறாதுசெய்கிற, திறல் வேந்தர் — வெற்றியினையுடைய அரசர்களின், திறை — திறைப்பொருள், மயங்காது — தவறாது கிடைக்கும்; வணிகேசர் — சிறந்த வைசியரின், நிறை — துலாக்கோலின் நிறையும், மயங்கா — மாறுபடாது நடக்கும்; அந்தணர்கள் நிலை — பிராமணர்க்கு உரியஒழுக்கமும், மயங்கா — மழுக்க மடையா; மறை மயங்காது —; [வேதம் எங்கும் ஓதப்படும் என்றபடி]; ஒருநாளும் மனு மயங்காது — வேதமந்திரமும் தவறாது எப்போதும் பலிக்கும்; (எ - று.) முளை தவறாது பலிக்குமாறு தோன்றுமாயின், எல்லாவருணத்தவரும் தத்தமக்குஉரிய குலவொழுக்கத்தை மேற்கொண்டு நிகழ்த்துவ ரென்க. மனுமயங்காது என்பதற்கு — (உலகில்) மநுநெறி தவறாமல் எங்குந் தழைத்தோங்கு மெனினுமாம். திறையை உலகத்தோரிடம் மன்னவர்வாங்குவது தாம் இன்பம் நுகரவேணு மென்ற கருத்தினாலல்லாமல் உலகோர்க்குப் பொதுவாகவுள்ள பல நன்மைகளைச் செய்யும் பொருட்டேயாமென்பார் “திறைமயங் காதருள் விளங்குஞ் செயன்மயங்காத் திறல்வேந்தர்” என்றார். “வணிகேசர்” என்பது குணசந்திபெற்றுவந்தது. மயங்கா என்ற சொற்களுள், முதலதும் ஈற்றதும் — ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்; மற்றவை — முற்று. மயங்காதவர்வினையாலணையும் பெயர். — (28)
பொருளடக்கம் | 27. வித்துவிளைத்தற் சிறப்பு. | 29. நாற்றங்காற் சிறப்பு. | அகெடமி