pATal27
pATal26.html
pATal27.html
pATal28.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
27. வித்துவிளைத்தற் சிறப்பு.
வித்தை முளைக்கும்படி நிலத்திலிடுஞ் சிறப்பைக் கூறுவது.
27. வித்துவிளைத்தற் சிறப்பு.
பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவிளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே.
(இ—ள்.) பெருக்கு ஆளர் — (பொருளைப்) பெருக்க வல்லவராகிய வேளாளர், வித்து விளைத்து இடில் அன்றி — விதையை முளைக்குமாறு நிலத்திலிட்டாலல்லாமல், பத்தி விளைத்திடும் — பக்தியை (த் தமக்கு) உண்டாக்குகின்ற, தெய்வம் — கடவுளை, பணிவார்க்கும் — வணங்குமவர்க்கும் [பக்தியோக நிஷ்டர்க்கும்], தற்பரம் ஆம் முத்தி விளைத்திடும் — அந்தக்கடவுளின் (சாயுச்சியத்தை) அடைவதற்கு உரிய முத்தியைத் தரக்கூடிய, ஞானம் — ஞானயோகத்தைக் கைக்கொண்டுள்ள, முதல்வருக்கும் — சிறந்த ஞானியர்க்கும், இன் அமுதம் வைத்து விளைத்திடுவார்க்கும் — இனிய அமுதத்தை யுண்டாக்கி அதனையே மேன்மேற் பெருகச் செய்திருக்கும் யோகியர்க்கும், வல்லவர்க்கும் (பலவகைக் கருமங்களையும்) செய்யவல்ல கருமயோக நிஷ்டர்க்கும், வேண்டுவன — இன்றியமையாது வேண்டுவனவாகிய அருள் கொடை முதலியன, விளையா — தோன்றாவாம்; (எ - று.) — “பத்திவிளைத்திருந் தெய்வம்” என்ற பாடம், இனிது. பொருள்பட்டுச் சிறக்கும்.
கடவுளை யடையவேணுமென்று கருதி முயல்கின்ற எவ்வகைப்பட்டவர்க்கும் உணவு இன்றியமையாத தாதலால், “வித்து விளைத் திடிலன்றி வேண்டுவன விளையா” என்றார். முதலடியிற் கூறப்பட்டவர் — பக்தியினாற் கடவுளைப் பெற விரும்புபவர்: பிரபத்தி யென்னும் உபாயமும் இதில் அடங்கும். இரண்டாமடியிற் கூறப்பட்டவர் — ஞானயோகத்தினாற் கடவுளைப் பெற விரும்புபவர். இன்னமுதம் வைத்து விளைத்திடுவார் எனப்பட்டவர் — யோகியர். வல்லவர் என்றது — கருமயோகத்தைச் செய்யவல்ல திடம்பூண்டவர். யோகியரென்பார் — சமாதியிலிருந்து இதயபுண்டரீகத்தைத் திரும்பச்செய்து அங்கிருந்து மேன்முகமாக எழுகிற சோதியினாற் பிரமகபாலத்தினின்று பெருகுகிற அமுதத்தையே உணவாகக் கொள்பவ ராதலின், அன்னார்க்கும் விளையுளாலாகும் உணவைக் குறித்து ஆகவேண்டியதில்லையேயெனின்? — அன்னார் வேறு உணவை வேண்டாவிடினும் உலகத்திற் பசிமிகின் ஆங்குள்ள பிராணிகளைநோக்கி எழுந்த கருணையினால் அவ்வுயிர்களின் பசியைப் போக்க வழிதேடவேண்டிவரு மாதலின், அவ்யோகியரின் யோகமும் இனிது நடவாததாகுமென்க. “ஞாநாந்மோக்ஷ” என்று நூல்கள் கூறுவதனால், “முத்தி விளைத்திடு ஞானம்” என்றார். விளைத்து=விளைக்க: எச்சத்திரிபு. இனி, இச்செய்யுட்கு — பத்தி விளைத்திடுந் தெய்வம்பணிவார்க்கும் — சரியாபாதநிஷ்டர்க்கும், தற் பரமா... ஞானமுதல்வர்க்கும் — ஞானபாதநிஷ்டர்க்கும், இன் அமுதம் வைத்து விளைத்திடுவார்க்கும் — இனியஉணவை (அடியவர்க்கு) இட்டு நன்மைசெய்யும் க்ரியாபாதநிஷ்டர்க்கும், வல்லவர்க்கும் — யோகபாத நிஷ்டர்க்கும், வேளாளர் விளைத்திடினன்றி வேண்டுவன விளையாஎனக் கூறலும்பொருந்தும். இப்பொருளில், செய்யுளாதலின் ஞானக்கிரியைகள் மாற்றிக்கூறப்பட்டன வென்க. வித்துவிளைத்திடினல்லால் — விதையானது விளைவை யுண்டாக்காவிட்டால் என்று பொருள்கூறுவாரும், விளைந்த நெல்லிற் சிறு பகுதியை வித்தாகச் செய்துகொள்ளாவிட்டால் எனக்கூறுவாரும் உளர். இச்செய்யுளுக்கு வேறுவகையாகப் பொருள் கூறுவது சிறக்குமாயிற் காண்க. — (27)