pATal26 pATal25.html pATal26.html pATal27.html ஏரெழுபது மகாகவி கம்பர் 26. பரம்படித்தற்சிறப்பு.
பொருளடக்கம் | 25. சேறுசெய்தற்சிறப்பு. | 27. வித்துவிளைத்தற் சிறப்பு. | அகெடமி

சேடைவைத்த செய்யில் நிலம் சமனாகுதற் பொருட்டுப் பரம் புப்பலகையை யிழுத்தலின் சிறப்பைக் கூறுவது. 26.-பரம்படித்தற்சிறப்பு. வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறுங் குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி உரம்படிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. (இ—ள்.) வரம்பு அடிக்க — செய்வரம்பில் மோதுமாறு, மலர் பரப்பி — மலரைப் பரவச்செய்து, வயல் அடிக்க — (நீர் வெள்ளம்) வயலில் மோதிக்கொண்டிருக்க, வரம்பு தொறும் — (அந்தச்செய்யின்) வரம்புகள்தோறும், குரம்பு அடிக்க — மற்றொருவரம்பு தோன்றுமாறு, மணி கொழிக்கும் — முத்துக்களைக் கொழிக்குந் தன்மையை யுடைய, குலம் பொன்னி — சிறந்த காவிரிநதிபாயப்பெற்ற, திரு நாடர் — அழகிய சோணாட்டையுடையரான வேளாளர், பரம்பு அடிக்க — பரம்புப் பலகையைச் செலுத்துவதனால், உடைந்து — (மண் கட்டிகள் ) விண்டு, அளைந்த — குழம்பிய, பழனம் சேறு — கழனிகளில் தோன்றிய சேறாகிய, உரம் அன்றி — (நிலவுரமே யாவர்க்கும்) உரமாவதன்றி, உரம் படிப்ப — உரமென்று சொல்வதற்கு, பிறிது — வேறொன்று, உண்டோ — உள்ளதோ? உண்டு ஆயின் — இருக்குமாயின், உரையீர் — (நீங்கள்) சொல்லுங்கள்; கழனியிற் பரம்படித்ததனாற் குழம்பிய சேற்றுரம் உலகோ ரெல்லாம் பசியாம லுண்ணுமாறு நிலத்திடும் பயிர் நன்கு விளைதற்குக் காரணமாகி, யாவர்க்கும் உரத்தை விளைக்கும்: ஆகையால் பரம்படித்த சேற்றுரம் உரமேயன்றி உரமாக வேறொன்றும் சொல்லப்படா வென்றவாறு. “சேற்றூர மன்றி வேற்றுரம் வேண்டா” என்ற பழமொழி இங்குக் கருதத்தக்கது. முன்னிரண்டடி சோணாட்டு வேளாளரைக் குறித்தது. “வரம்படிக்க கொழிக்கும்” என்ற தொடர், பொன்னிக்கு விசேடணம். சோழநாட்டில் கழனிவரம்பே தனக்கு வரம்பாகக் காவேரி தன்னிடம் மலர்களைக்கொண்டு பாய்கையில், இருகரையிலும் கொழிக்கப்பட்ட முத்துக்கள் செய்வரம்புக்கு அடுத்தாற்போற் குவிந்து மற்றொரு வரம்புபோல் தோன்று மென்பது, முன்னிரண்டடிகளிற் கூறிய விஷயம். பொன்னிக்கு மலர்கள் தான் வரும் வழியிடையே தன்னிருகரைகளிலுமுள்ள மலர்ச்சோலையினின்று சிந்தியவை. வரம்படிக்க மலர் பரப்பி வயலடிக்க வரம்பு தொறும் குரம்படிக்க என்பதற்கு — மலரைப் பரப்பி (த் தத்தமக்கு ஏற்பட்ட) வரம்புவரையிலும் செய்களை யுழுவதனால் வரம்புதோறும் சேற்றாலியன்ற சிறு கரையை (உழவர்) அமைக்க என்று உரைத்தலுமாம்: இப்பொருளில், முதலில் உழுகையில் நிலமகளை வழிபடுவதை “மலர்பரப்பி” என்றதனால் விளக்கினரென்க. இனி, முதலிரண்டடிகட்கு — (தன்னிரு) கரைகளும் கரைந்திடும்படி நீரைப்பரப்பிக்கொண்டு வயல்களில்(தான்) பாய்கையில் கரைக்கப்பட்ட வரம்புகளிலிருந்த இடத்தில் செய்கரை தோன்றுமாறு மணியைக்கொழித்துக்கொண்டு காவிரி பாயப் பெற்ற சோணாட்டு வேளாள ரெனப் பொருள் கூறுவாருமுளர். இப்பொருளில், மலரென்பது — கமலமென்ற சொல்லைப்போல நீரை யுணர்த்திற் றென்க. — (26)
பொருளடக்கம் | 25. சேறுசெய்தற்சிறப்பு. | 27. வித்துவிளைத்தற் சிறப்பு. | அகெடமி