pATal25 pATal24.html pATal25.html pATal26.html ஏரெழுபது மகாகவி கம்பர் 25. சேறுசெய்தற்சிறப்பு.
பொருளடக்கம் | 24. எருக்கூடைச் சிறப்பு. | 26. பரம்படித்தற்சிறப்பு. | அகெடமி

பயிர் செய்வதற்கு உரிய குப்பையெரு நிறைந்த செய்யில் நீரைப்பாய்ச்சி, தழை முதலியவற்றை அதிலிட்டு எருவாகுமாறு அழுகவைத்து அந்நிலத்தைச் சேறாகுமாறுசெய்தல் சேறுசெய்த லெனப்படுமென்பர்: இது, சேடைவைத்த லெனவும் வழங்கப்படும். 25. சேறுசெய்தற்சிறப்பு. வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற் செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. (இ—ள்.) வேளாளர் —, மெய் ஆக — உண்மையே பரவுமாறு, வெறுப்பது எல்லாம் —, பொய்யினையே — பொய்யையேயாகும்; உள்ளத்தால் — (தம்) மனத்தால், ஒறுப்பது எல்லாம் — தண்டிப்ப தெல்லாம், கலியினையே — வறுமையையேயாகும்; வெள்ளத்தால் — நீர்ப்பெருக்கால், செறுப்பது எல்லாம் —அழிக்கப் பார்ப்பதெல்லாம், புல்லினையே —புல்லையேயாகும்; செய்யின் வளம் — கழனியின் வளப்பத்தை, அறிந்து அறிந்து — நன்றாகவுணர்ந்து, மறிப்பது எல்லாம் — தடுத்து வைப்பதெல்லாம், சேற்றினையே — சேற்றையேயாகும்; (இங்ஙனம் இவர் செய்வது), வளம் படுதல் பொருட்டு ஆய் — (உலகம்) செழிப்பாக இருத்தல் வேண்டியேயாம்; (எ - று.) வேளாளரின் சேறு செய்தற் சிறப்பைக் கூறுவார், அவர்களின் பொய் சொல்லாமை பிறர் வறுமையைப் போக்குதல்களை பறித்தல் என்ற தன்மையையும் உடன் கூறினார்: ஆகவே, முதல் மூன்றடியிற் கூறியபொருள் ஈற்றடியிற் கூறியதற்கு உவமையா மென்க; எடுத்துக்காட்டுவமையணி. ஏகாரங்கள்பிரிநிலை. இச் செய்யுளில், வேளாளர் வேறு சிலரைப்போலக் காமவெகுளி மயக்க மென்னும் முக்குற்றங்களினாற் பிறர்க்குவருத்த முண்டாகப் பொய்பேசுதல் முதலியன இலராவ ரென ஒழித்துக்காட்டணி தோன்றும்: இதனை “வெஞ்சிலையே. கோடுவன...” என்றாற்போலக் காண்க. சேற்றைச் செறியவைத்தலால், கழனிநிலம் பண்பட்டு நல்லவளனைத் தருமென்பார் “வளம்படுத்தற் பொருட்டாயே மறிப்பதெல்லாஞ் சேற்றினையே” என்றார். புல் என்பதற்குத் தழை யென்று கொண்டு, செறுப்பது புல்லினை யென்பது — அழுகவைப்பது தழையையெனக் கூறுவது முண்டு. வெறுப்பதெல்லாம் முதலியனஒருமைப்பன்மைமயக்கம். — (25)
பொருளடக்கம் | 24. எருக்கூடைச் சிறப்பு. | 26. பரம்படித்தற்சிறப்பு. | அகெடமி