pATal24 pATal23.html pATal24.html pATal25.html ஏரெழுபது மகாகவி கம்பர் 24. எருக்கூடைச் சிறப்பு.
பொருளடக்கம் | 23. வரம்பு கோலுதற்சிறப்பு. | 25. சேறுசெய்தற்சிறப்பு. | அகெடமி

24. எருக்கூடைச் சிறப்பு. அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற் படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. (இ—ள்.) எருவை — உரத்தை, அடுத்து — நெருங்கி, இறக்கி — (கூடையைத்) தாழ்த்தி, பெருங்கூடை அளவு பட ஏ — பெரிய கூடையினளவு உண்டாகும்படி நிறைய, இறக்கி — சரியத்தள்ளி, எடுத்து — தூக்கி, தலைமேலே கொண்டவர் தாம் — தலையின்மேலே வைத்துக்கொண்டவராகிய வேளாளர்கள், இடை இடையே — (தாங்கள் செல்லும் வழியில்) ஆங்காங்கே (நிலத்தில் வீற்றுவீற்றாகக் கொட்ட), இறக்கி கொடுத்து — (தமது தலையினின்று கூடையைக்கீழே) இறக்கிவைத்து, நிலமகளை கும்பிட்டு வணங்கார்ஏல் — பூமிதேவியைக் கும்பிட்டு வணங்காமலிருப்பாரானால், படுத்து — [மண்வெட்டி கலப்பை இவைகொண்டு] துன்பப்படுத்தி, இறக்கி — (அவற்றை) ஆழ இறக்கி, திரிவார் — மேல்மண் கீழ்மண்ணாகுமாறு திரிய [மயங்க] வைத்த இவ்வேளாளர், தம் பழி — (அங்ஙன் செய்தலால் நிலமகளுக்கு நேரவைத்த) தம் பாவச்செயலை, மறுக்க மாட்டார் — நீக்கமுடியாதவராவர்; (எ - று.) இதனால், நிலமகளைக் கும்பிட்டு வணங்கினால்தான் தமக்கு நேர்பட்ட பழியை மறுக்கமுடியும் என்றபடி. மறுத்தல் — நீக்குதலாதலை “கொல்லான் புலாலை மறுத்தானை” என்றவிடத்துங் காண்க. பழியாவது — நிலத்தை அகழ்தலாலும் ஆழ உழுதலாலும் ஏற்பட்டது. எருக்கூடையைத் தூக்கிவந்து இடையிடையே நிலத்திலிடும்போது தலைதாழ்த்தி இறக்க வேண்டியிருத்தலின், நிலமகளைக் கும்பிட்டு வணங்குதல்போல் உளதெனத் தற்குறிப் பேற்றம்படக் கூறினார். பெருங்கூடையில் எருவிட்டுத் தூக்கிச் செல்வோர் இடைவழியே இறக்கி வைப்பதும் இயற்கை. இச் செய்யுளினால், எருக்கூடைக்குச் சிறப்பு என்னென்னில், நிலமகளைத் தாழக் கும்பிட்டு வணங்குதற்கு ஏதுவாதல். — (24)
பொருளடக்கம் | 23. வரம்பு கோலுதற்சிறப்பு. | 25. சேறுசெய்தற்சிறப்பு. | அகெடமி