pATal23
pATal22.html
pATal23.html
pATal24.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
23. வரம்பு கோலுதற்சிறப்பு.
கழனிக்கு நாற்புறமும் வரப்புஓரத்தை வெட்டித் திருத்தமுற அமைக்குஞ் சிறப்பு என்க. வரம்புகோலுதல், அண்டைவெட்டுத லென இக்காலத்து வழங்குகின்றதென்பர்.
23. வரம்பு கோலுதற்சிறப்பு.
மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே
(இ—ள்.) இ புவிக்கு — இந்நிலவுலகிலுள்ள உயிர்கட்கு, மெய் வரம்பு ஆ நிற்கின்ற இ வரம்பும் — உடம்பை எல்லையாகக் கொண்ட இவ்வுலகிய லொழுக்கவரம்பும், வேதம் நூல் நெறி வரம்பு ஆம் அ வரம்பும் — வேதநூலிற் கூறியுள்ள நன்னெறியாகிய (மறுமைக்கு உரிய) வைதிக வொழுக்கமென்னும் அந்த வரம்பும், வரம்பு ஆமோ — (நல்வாழ்வு பெறுதற்குஏற்ற) வரம்பு ஆகுமோ? (ஆகா என்றபடி); (பின்னை எது நல்வரம்பாகுமெனின்), பொய் வரம்பு தவிர்த்தருளும் — பொய்யிருக்குமெல்லையையு மணுகாது நீக்கி வாழ்கின்ற, புவி மடந்தை திரு மைந்தர் — பூமியில்தோன்றிய செல்வக் குமாரராகிய உழவர், செய் வரம்பு திருத்தார் ஏல் — கழனியின் வரம்பைச் செம்மையுறச் செய்யாராயின், திசை வரம்பு — எட்டுத்திசையினிடத்திலுள்ள உயிர்களும், திருந்தாது — செம்மை யுற்றிராது; (எ - று.)
செய்வரம்பு திருத்தமுற அமைந்தால், உரியகாலத்துப் பாய்ச் சப்படும் நீர் தங்கிப் பயிரைச் செவ்வனே விளைக்குமாதலாலும், அங்ஙனம் திருந்தச் செய்யாவிடின், விளைவு குன்று மாதலாலும், திசைவரம்பு திருந்துவதற்கு உலகியல்வழக்கு வேதவியல்வழக்குக் களைவிட, வயல்வரம்பு திருந்துதல் இன்றியமையாத தென்றவாறு. உலகியல்வழக்கும் வேதநெறிவழக்கும் உணவிருந்தால் மாத்திரம் முறைப்படி நடக்கு மாதலால், இவ்வாறு கூறப்பட்ட தென்க. உடம்புள்ளவரையும் உலகவழக்கு மேற்கொண்டு ஒழுகுதற்கு உரிய தாதலால், “மெய்வரம்பா நிற்கின்ற விவ்வரம்பும்” என்றார். “மெய்வரம்பாநிற்கின்ற” “வேதநூல் நெறிவரம்பாம்” என்பன — முறையே, “இவ்வரம்பும்” “அவ்வரம்பும்” என்பவற்றோடு சென்று இயைவது — முறைநிரனிறைப்பொருள்கோளாம். வேளாளர் பொய்பேசாதவரென்பது, “பொய்வரம்புதவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்” என்பதன் கருத்து. இனி, மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறி என எடுத்து — உடம்புள்ளவரையும் மேற்கொண்டு நடக்கவேண்டிய வேதநூலின் நெறியால், வரம்பு ஆம் — வரையறுக்கப்பட்டுள்ளனவான, இவ்வரம்பும் அவ்வரம்பும் — இவ்வாறுநடக்கவேணும் அவ்வாறு நடக்கவேணு மென்கிற வரம்புகளும் என உரைத்தலும் ஒன்று. வேதநூல் நெறிவரம்பாம் இவ்வரம்பும் — வேதத்தின் வழிப்பட்ட அகச்சமய மார்க்கமும், அவ்வரம்பும் — புறச்சமய மார்க்கமும் என்று உரைப்பாரும் உண்டு. பொய்வரம்பு தவிர்த்தருளும் — பொய்யைத் தாம் இருக்கும் எல்லை யினின்று நீக்கிய எனினுமாம். திசைவரம்பு — ஆகுபெயரால் உயிர்களை யுணர்த்திற்று. — (23)