pATal32 pATal31.html pATal32.html pATal33.html ஏரெழுபது மகாகவி கம்பர் 32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு. | 33. முடிவிளம்புதற் சிறப்பு. | அகெடமி

32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு. தென்னன்முடி சேரன்முடி தெங்குபோன்னி நாடன்முடி கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம் மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ. (இ—ள்.) முடி வேளாளர் — முதன்மையையுடைய வேளாளரின், வயலின் — வயலிலே நடுமாறு சேர்க்கிற, முடி — நாற்றுமுடியை, கொண்டு அன்றோ —ஆதாரமாகக்கொண்டு அல்லவா, தென்னன் முடி — பாண்டியவரசனதுமுடியும், சேரன் முடி —சேரவரசனதுமுடியும், தேங்கு பொன்னி நாடன் முடி — வளம்மிக்க காவேரி பாயப்பெற்ற சோழநாட்டரசனதுமுடியும், கன்னன் முடி — (கொடையினால்மேம்பட்ட) கர்ணனது முடியும், கடல் சூழ்ந்த காசினியோர் தங்கள் முடி — கடலினாற் சூழப்பட்ட இப்பூமியை யாள்கின்ற மற்றையரசர்களின் முடியும், இன்ன முடி அன்றியும் — இங்குக்கூறிய இம்முடிகளே யல்லாமல், மற்று — மற்றும், எடுத்து உரைத்த முடிகள் எல்லாம் - (அறிவுடையோர்) புகழ்ந்துகூறிய முடிகளெல்லாம், மன்னும் — நிலைபெறும்; (எ - று.) வேளாளர் விளைவை யுண்டாக்குமாறு நாற்றுமுடியைச் சேர்த்தலே, தென்னன்முடி முதலியன நிலைபெறுதற்குக் காரணமா மென்றவாறு. “காராள ரணிவயலி லுழுது தங்கள் கையார நட்ட முடி திருந்த விந்தப், பாராளுந் திறலரசர் கவித்த வெற்றிப் பசும் பொன்மணி முடிதிருந்தும்” என்று உமாபதி சிவாசாரியர் இச்செய்யுளின் கருத்தைத் தழுவிக் கூறியிருத்தல் காண்க. தென்னன் முடிமுதலியன, வேளாளரின் வயலின் முடிகொண்டன்றோ, மன்னும் — நிலைபெற்ற, முடி — முடியாகுமென, முடியென்பதைப் பயனிலை யாக்கி உரைப்பினுமாம். இனி, மன்னும் முடி வேளாளர் என்று எடுத்து — பொருந்திய தலைமையையுடைய வேளாளரெனப் பொருள் கூறி, வினைமுற்றுவருவித்து உரைப்பாருமுளர். தமிழ்நாட்டு மூவேந்தரை முன்னர்க்கூறி, சூரியனுக்குக் குந்தீதேவியினிடம் பிறந்த புதல்வனான கன்னன் கொடைத் தொழிலாற் பிரசித்தி பெற்றவனாதலால், அவனைக்கூறி, மற்றும் முன்னும் பின்னுமுள்ள அரசர்களைத் தழுவ “காசினியோர்” என்றார். பரசுராமன் இவ்வுலகத்தைவென்று காசியபமுனிவனுக்குத் தானஞ் செய்தது பற்றிப் பூமிக்கு “காஸ்யபீ” என்று ஒருபெயர்: அச்சொல் “காசினி” எனத் திரிந்து வந்ததென்பர். — (32)
பொருளடக்கம் | 31. நாற்றுமுடிசுமத்தற் சிறப்பு. | 33. முடிவிளம்புதற் சிறப்பு. | அகெடமி