pATal21 pATal20.html pATal21.html pATal22.html ஏரெழுபது மகாகவி கம்பர் 21. படைச்சாலின்சிறப்பு.
பொருளடக்கம் | 20. உழவின் சிறப்பு. | 22. மண்வெட்டிச்சிறப்பு. | அகெடமி

கலப்பைகொண்டு உழுத சுவட்டைக் கொண்ட இடமென்பது படைச்சாலென்பதன் பொருள். 21. படைச்சாலின்சிறப்பு. பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக் குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால் எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர் உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. (இ—ள்.) பழுது சால் வகை அறியா — குற்றம்பொருந்திய தன்மையென்பதை யறியாத, பழ மறையோர் — பழமையான வேதம் வல்ல அந்தணர், பெரு வேள்விக்கு — பெருமைபெற்ற யாகத்தைச் செய்வதற்கு, உழுது சால்வது — (தான்) உழுது அமைவதாகிய, கலப்பை — கலப்பையானது, உயர்வு ஆனது — உயர்வுபொருந்தியதாகும், என்றக்கால் — என்று (நூல்கள்) கூறுமானால், எழுது — (நூல்களாக) எழுதப்படுகின்ற, சால் பெரு கீர்த்தி — மிக்க பெருமைபெற்ற புகழையுடைய, ஏர் ஆளும் பெருக்காளர் — (உயர்வு பெற்ற) அக்கலப்பையைக் கொண்டுள்ள வளம்பெற்ற வேளாளர், உழுத — உழுவதனாலேற்பட்ட, சால் வழி அன்றி — படைச்சாலின் வழியால் இல்லாமல், உலகு — இவ்வுலகத்தவர், வழி — உய்யும் வழியை, அறியாது — அறியமாட்டார்கள்; (எ - று.) மழைபெய்கை முதலிய உலகின் நன்மைக்குக் காரணமான வேள்விக்கும் கலப்பை இன்றியமையாததாதலின், வேளாளரின் அந்தக் கலப்பையினுழுபடைச்சாலே உலகுய்வதற்குக் காரண மென்றவாறு. கலப்பைகொண்டு உழுத இடத்திலேயே யாகசாலை யமைக்கவேண்டுமென்று கற்பநூல்கள் கூறுவதனால், கலப்பை யாகத்திற்கு இன்றியமையாத தாகும். இவ்வண்ணம் யாகத்திற்கு உதவுவதனால், கலப்பை மேன்மைபெறு மென்க. மறையோர் என்று பொதுப்படக் கூறியதனால், வேதமோதுதற்கு உரிய பிராமண க்ஷத்திரிய வைசியரென்ற மூன்று வருணத்தாரையும் இச்சொல் குறிக்கு மென்னலாம். க்ஷத்திரியனான ஜநகராஜன் யாக சாலை யமைக்கக் கலப்பைகொண்டு உழுதா னென்பதை “இரும்பனைய கருநெடுங் கோட்டிணையேற்றின் பணையேற்ற, பெரும்பியலிற் பளிக்குநுகம் பிணைத்ததனோ டணைத்தீர்க்கும், வரம்பின் மணிப்பொற் கலப்பை வயிரத்தின்கொழு மடுத்திட், டுரம் பொரு வினிலம் வேள் விக்குலகில் பலசாலுழுதேம்” என்பதனாலும் அறியலாம், சால்வது — படைச்சாலையுண்டாக்குவ தென்றலு மொன்று. “பழுதுசால் வகையறியா” என்றதொடர், மறையோர்க்கு விசேடணமாம்: மறைக்கு விசேடணமாகக் கொள்ளின், ஒருத்தராற் செய்யப்பட்டன வாகாமல் நித்தியமாயிருத்தலால் திரிபு பொருள் விபரீதப்பொருள் என்னும் பழுதுகள் பொருந்தாத வேத மென்க. கலப்பைக்கு உயர்வு, உழுது சால்வதாலாகும். வேளாளரது மிக்க பெருங் கீர்த்தியை, நாவலர், கீர்த்திமாலையாக எழுதுவ ரென்க. சால் பெரு — ஒருபொருட்பன்மொழி. இங்கு ஏர் — கலப்பை: கலப்பை பூட்டப்பட்ட பகடுமாம். — (21)
பொருளடக்கம் | 20. உழவின் சிறப்பு. | 22. மண்வெட்டிச்சிறப்பு. | அகெடமி