pATal20 pATal19.html pATal20.html pATal21.html ஏரெழுபது மகாகவி கம்பர் 20. உழவின் சிறப்பு.
பொருளடக்கம் | 19. உழுநர் சிறப்பு. | 21. படைச்சாலின்சிறப்பு. | அகெடமி

20. உழவின்சிறப்பு. அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும் பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும் மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும் உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. (இ—ள்.) உழவர் உழும் உழவால் — உழுநராகிய வேளாளர் செய்கின்ற உழவுத்தொழிலினால், (உலகத்தில்), அலகு இலா மறை விளங்கும் — அளவில்லாத வேதங்கள் (பொருளுணரும்படி) விளக்கமடையும்; அந்தணர் ஆகுதி விளங்கும் — பிராமணராற் செய்யப்படும் ஆகுதிகளையுடைய யாகங்களும் மேன்மையாக நடக்கும்; பல ஆம் கலை தொகை விளங்கும் — பலவாகிய கலைஞானங்களின் தொகுதிகளும் விளக்கமுறும்; பாவலர்தம் பாவிளங்கும் — புலவர்களது செய்யுள்களும் சிறப்படையும்; மலர் குலாம் திருவிளங்கும் — செந்தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமியும் விளக்கமடைவாள்; மழை விளங்கும் — மழையும் காலந்தவறாமற் பொழியும்; மனு விளங்கும் — நீதிகளும் தவறாதுநடக்கும்; உலகு எலாம் ஒளி விளங்கும் — உலகம் முழுவதும் ஒளிபெற்று விளங்கும்; (எ - று.) “மானங் குலங் கல்வி வண்மை யறிவுடைமை, தானந் தவமுயர்ச்சி தாளாண்மை — தேனின், கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும், பசி வந்திடப் பறந்துபோம்” என்றபடி பசி யுண்டாகுமாயின் பலவும் அழியும்; வேளாளர்கள் உழவுத்தொழிலைச் செய்து தானியங்களை விளைத்தலால், உணவு யாவர்க்குங் கிடைக்கப் பசியென்பதே இல்லாமற் போய்விடுகின்றது; போகவே, எல்லாம் விளங்கு மென்க. உழவுத்தொழிலினாற் செல்வம் வளர்தலால் “மலர்குலாந்திரு விளங்கும்” எனவும், உழவுத்தொழில் மழைக்குக் காரணமான வேள்விக்குக் காரணமா யிருத்தலால் “மழைவிளங்கும்” எனவும், நீதிநடப்பது பசியில்லாத பொழுதே யாதலால் “மனுவிளங்கும்” எனவும், எல்லாவுயிரும் உணவிற்குக் குறைவின்றி யிருப்பின் மகிழ்ந்திருக்கு மாதலால் “உலகெலாமொளி விளங்கும்” எனவும் கூறினார். ஈற்றடி — முற்று மோனை. “உழவ ருழு முழவாலே” என்ற ஈற்றிலுள்ள தொடர் — முற்றுக்கள்தோறும் சென்று இயைதலால், கடைநிலைத்தீவகம். வேதத்திலேயே “அநந்தா வை வேதா: [வேதங்கள் எல்லை யற்றன]” எனக் கூறியிருத்தலால், “அலகிலாமறை” எனப்பட்டது. ஆகுதி=ஆஹுதி: அந்தணர் அக்கினியிற் சொரியும் அவிசு; இங்கு, ஆகுபெயரால், வேள்வியை யுணர்த்திற்று. பலகலைத்தொகைஅக்கரவிலக்கணம், லிகிதம், கணிதம், புராணம், வியாகரணம், நீதிசாஸ்திரம், சோதிடம், யோகம், மந்திரம், சிற்பம், சகுனம், வைத்தியம் முதலாகவுள்ள அறுபத்துநான்கு கலைகள். பாவலர் — செய்யுள் செய்யவல்லவர். அடைமொழியின்றி வாளா கூறியதனால், “மலர்” என்பது - “பூவிற்குத் தாமரையே” என்றபடி மலர்களுட் சிறந்த தாமரையைக் குறித்து நிற்கும். குலாம்=குலாவும்: செய்யுமெனெச்சத்தின் ஈற்றுஉயிர்மெய் கெட்டுநின்றது; [நன் — வினை-22.] திரு ­— செல்வமகள்: இலக்குமி. மநு — மனுவென்பவராற் கூறப்பட்ட நீதி; கர்த்தாவாகு பெயர். — (20)
பொருளடக்கம் | 19. உழுநர் சிறப்பு. | 21. படைச்சாலின்சிறப்பு. | அகெடமி