pATal19
pATal18.html
pATal19.html
pATal20.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
19. உழுநர் சிறப்பு.
உழவுத்தொழில் செய்வாருடைய மேன்மை யென்று இத் தொடர்க்குப் பொருள்: வேளாளரின்சிறப்பு பாயிரத்தில்தானே கூறப்பட்டதால், இங்கு உழுநர் என்றது வேளாளரின்கீழே தொழில்புரியும் பண்ணை யாட்களை யென்னலா மென்பர்: ஏரெழுப தென்ற இந்நூல் வேளாளரின் பெருமையைக் கூறவந்த நூல் என்பதைத் தெரிவித்தற்கு அங்கு வேளாளரின்சிறப்புக் கூறப்பட்டதாக, இதில் உழவுத்தொழிலுக்கு உறுப்பான எல்லாப் பொருள் களையுங் கூறவேண்டுமாதலால் அம்முறையில் இங்கு உழுநர்சிறப்புக் கூறப்பட்டதென்று கொள்ளுதல் ஏற்கும்; ஏரைச்சேர்ந்த அலப்படை முதலிய உறுப்புக்களை முன்னர்க்கூறி, பின்னர் உறுப்பியாகிய வேளாளரைக் கூறினாரென்க. இனி வேளாளர் உழுநரும் உழுவித்துண்போரும் என இருவகைப்படுவராதலால், பாயிரத்தில் பொதுவாகக்கூறிய கவி இங்குச் சிறப்பாக உழுநரின்சிறப்பைக் கூறுகின்றா ரென்றலும் ஒன்று.
19. உழுநர் சிறப்பு.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே.
(இ—ள்.) உழுது — உழவுதொழிலைச்செய்து, (அதனாற் பெறப்படுந் தானியத்தை), உண்டு — புசித்து, வாழ்வாரே — வாழ் பவரே, வாழ்வார் — உண்மையான வாழ்ச்சியை யுடையவர்: மற்று எல்லாரும் — அவ்வுழுநரினும் வேறுபட்ட யாவரும், தொழுது — (உணவை விளைப்பவரைத்) தொழுது, (அவர் விளைவிக்கின்ற உணவைப்பெற்று), உண்டு, பின்செல்வார் — (அவருடைய) பின்னே செல்பவராவர், என்றே அன்றோ — என்றல்லவோ, இ தொல் உலகில் — பழமையான இவ்வுலகத்தில், எழுதுண்ட மறை — எழுதப்பட்ட வேதமாகிய திருக்குறள், (உள்ளது); (இ) கடல் சூழ்ந்த பாரிடத்தில் பிறந்தோர்க்கு — கடலாற்சூழப்பட்ட இப்பூவுலகத்திற் பிறந்தவர்க்கு, இவருடனே — (திருக்குறள் நூலாசிரியரான வள்ளுவரும் இங்ஙனம் புகழ்ந்து கூறும் மேன்மை பெற்ற) இவ்வேளாளருடனே, இயலும் — பொருந்திவாழ்கின்ற, இது — இச்செயலால், பழுது உண்டோ — குறைவு உண்டாகுமோ? [உண்டாகா தென்றபடி]; (எ - று.)
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந், தொழு துண்டு பின்செல் பவர்” என்று தமிழ்வேதமாகிய திருக்குறளே வேளாளர், பெருமையைச் சிறப்பித்துச் சொல்லுமாயின், அவருடன் நண்புகொண்டு வாழ்வதே யாவர்க்கும் நன்மையைத் தருமென்றபடி. இனி, வேளாளரிடத்து ஏவல்புரியும் உழுநர் மீதுகூறக்கூடிய குறை யொன்றுமில்லை யெனக் கருத்துக் காண்பாருமுளர்: வேளாளரின் பெருமை சிறப்புப் பாயிரத்திற் கூறியிருத்தலால், இங்கு உழுநரென்றது பண்ணையாட்களைக் குறிக்குமென்னும் அவர் “ஏருமிரண்டுளதாயில்லருகேவித்துளதாய், நீரருகே சேர்ந்தநில முளதாய் — ஊருக்குச், சென்றுவரவெளிதாய்ச் செய்யாளுஞ் [செய்யாள் = பண்ணையாள்.] சொற்கேட்கி, லென்று முழவேயினிது” எனச் சொன்னசொல் கேட்கும் பண்ணையாள் உழவிற்கு இன்றியமை யாமையை ஔவையார் கூறியிருத்தலை இங்கு எடுத்துக்காட்டுவர். வடமொழியிலுள்ள வேதம் குருசிஷ்யக்ரமமாய் ஓதப்பட்டு எழுதாக்கிளவி யென்று பேர்பெறுதலால், அதனினும் வேறுபாடு விளங்க, தமிழ்மறையாகிய திருக்குறள் “எழுதுண்ட மறை” எனப் பட்டது: இது, தமிழிலக்கணத்திற் பிறகுறிப்பின்பாற்படும். — (19)