pATal18 pATal17.html pATal18.html pATal19.html ஏரெழுபது மகாகவி கம்பர் 18. ஏர்நடத்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 17. ஏர்பூட்டற் சிறப்பு | 19. உழுநர் சிறப்பு. | அகெடமி

ஏர்நடத்தல் — (வேளாளர்) ஏரைக்கொண்டு உழவுத்தொழிலைச்செய்தல். 18. ஏர்நடத்தற் சிறப்பு. கார்நடக்கும் படிநடக்குங் காராளர் தம்முடைய ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும் சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும் பார்நடக்கும் படைநடக்கும் பசி நடக்க மாட்டாதே. (இ—ள்.) கார் நடக்கும்படி நடக்கும் — மழை தவறாமற் பெய்யும்படி (நல்லொழுக்கத்தோடு) நடக்கின்ற, காராளர் தம்முடைய — வேளாளருடைய, ஏர் — ஏரானது, நடக்கும் எனின் — நடக்குமானால், (இவ்வுலகத்திலே), புகழ் சால் இயல்இசை நாடகம் நடக்கும் — கீர்த்திநிரம்பிய இயற்றமிழும், இசைத்தமிழும், நாடகத்தமிழுமாகிய முத்தமிழும் சோர்வுறாது வழங்கும்; சீர் நடக்கும் — சிறப்புக்கள் நடைபெறும்; திறம் நடக்கும் — (பகைவரையடக்கும்) வலிமையும் குறைவுறாது மேன்மேல்நிகழும்; திரு அறத்தின் செயல் நடக்கும் — (யாவராலும்) விரும்பப்படுந் தருமத்தின் தொழிலும் குறைவடையாமல் வளரும்; பார் நடக்கும் — இவ்வுலகத்தி லுள்ள ஜீவபிராணிகளும் விருத்தியாகும்: படை நடக்கும் — (அரசர்களது) சேனையும் ஊக்கங்கெடாது நிற்கும்; (இங்ஙனம் இவையாவும்நடக்க), பசி நடக்கமாட்டாது — பசிமாத்திரம் உண்டாகாது; (எ - று.) ஏர்த்தொழில் இடையறாது நடத்தலினால் உலகத்திற் பல நன்மைகளும் உண்டாக, தீயதாகிய பசியொன்றும் இல்லையாகு மென்பதாம். தங்களது உழவுத்தொழிலினால் மழைக்குக்காரண மான வேள்விக்கு உரிய பொருளை உண்டாக்கி உபகரிப்பதனால், வேளாளர் “கார்நடக்கும்படி நடக்குங் காராளர்” எனப்பட்டனர்: இனி, “நல்லார்பொருட்டுமழைபெய்யும்” என்பது நூற்கொள்கையாதலால், யாவர்க்கும் உதவுகின்ற நன்மையை வேளாளர் புரிபவ ரென்பதுபற்றி “கார் நடக்கும்படி நடக்குங் காராளர்” என்றா ரெனினுமாம். இயலிசை நாடகம் நடக்கும் — உழவுதொழிலானது ஞானத்திற்குக் காரணமாய் நிற்குமென்றபடி. முத்தமிழைக் கூறினது — மற்றைப்பாஷைகட்கும் உபலக்ஷணம், சீர் — உலகத்துச் சிறப்புக்கள்: அவையாவன — தேவர்கட்குச்செய்யும் நித்திய நைமித்திக உத்ஸவங்களும், மனிதர்கட்கு நடக்கும் விவாகம் முதலியனவும். சீர் — செல்வமுமாம். திறம் — தேகபலம், மனோபலம் முதலியன. அறம் — மநு முதலிய நூல்களில் விதித்தனசெய்தலும், விலக்கியன ஒழிதலும்: அறம் — செய்யத்தக்கது இன்னதென நூல்களால்வரை யறுக்கப்பட்டதெனக் காரணப்பெயர். இங்கு, பசியினிடத்து நடக்குந் தொழிலை ஒழித்து, இயல், இசை, நாடகம் முதலியவற்றிற் காட்டியது — ஒழித்துக் காட்டணியின் பாற்படும். “நடக்கும்” என்ற சொல் பலமுறை ஒரேபொருளில் வந்தது — சொற்பொருட்பின்வருநிலை. ஈற்றடியில் தொடைமுரண் காண்க. காராளர் தம்முடைய, தம் — சாரியை. பார் — உயிர்கட்கு இடவாகுபெயர். — (18)
பொருளடக்கம் | 17. ஏர்பூட்டற் சிறப்பு | 19. உழுநர் சிறப்பு. | அகெடமி