pATal17
pATal16.html
pATal17.html
pATal18.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
17. ஏர்பூட்டற் சிறப்பு.
ஏரைக்கட்டுதலின் மேன்மையைக் கூறுவது, இது. கீழ் “பகடு பூட்டற்சிறப்பு” என்று கூறியது - அலப்படையைச் சார்ந்த நுகத்தை ஏர்மாட்டின் கழுத்திற் பூட்டுதலின் சிறப்பேயாதலால், பகடுபூட்டற்சிறப்புக் கூறியபின், “ஏர்பூட்டற்சிறப்புத் தனியே கூறவேண்டுமோ?” எனின், — பகட்டின் தொழில் வயலிலே
நடந்து செல்வதும், ஏரின்தொழில் நிலத்தைப் பண்படுத்தலும் ஆகிய தொழில் வேறுபாடு இருத்தலால் அவை விளங்கும் பொருட்டு பகட்டைப் பூட்டுதல், ஏரைப்பூட்டுதல் எனத் தனித் தனியே பிரித்துக்கூறினா ரென்க: இனி, பகடு பூட்டலென்பது — எருதை நுகத்தடியிற் பூட்டுதலென்றும், ஏர்பூட்டல் என்பது — எருது பூண்ட நுகத்தடியை ஏருடன் பிணைத்தல் என்றும் சொல்லவுமாம்.
17. ஏர்பூட்டற் சிறப்பு
பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கைக் காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே.
(இ—ள்.) கார் பூட்டும் கொடை தட கை — மேகத்தையொத்த [தாரதமியம் பாராது எங்கும் பொழிகின்ற] கொடுக்குந் தொழிலை மேற்கொண்ட பெரிய கைகளைக்கொண்ட, காவேரி வளம் நாடர் — காவிரியாறு பாயப்பெற்ற வளப்பமுள்ள சோழநாட்டிலே வாழ்பவரான வேளாளர்கள், ஏர் — (தமது) ஏரை, பூட்டின் அல்லது — பூட்டினாலல்லாமல், பார் திசை அனைத்தும் பூட்டும் பகடுகளும் — பூமியின் எட்டுத்திக்குக்களிலும் (பாரத்தைச் சுமக்குமாறு கடவுளாற்) பூட்டப்பட்டுள்ள திசையானைகளும், பரம்பூணா — பாரத்தைச் சுமக்கமாட்டாவாம், போர் பூட்டும் காமனும் — (தேவர் முதலிய யாவரையும் தன்வசப்படுத்துமாறு) போரைத் தொடங்குகின்ற மன்மதனும், தன் பொரு சிலைமேல் — தனது பொருகின்ற வில்லில், சரம்பூட்டான் — அம்பைத் தொடுக்கமாட்டான்; இரவியும் — (நாடோறும் இவ்வுலகைச்சுற்றி வருகின்ற) சூரியனும், தேர் பூட்டான் — (தன்) தேரைப்பூட்டி உதிக்கமாட்டான்; (எ - று.) — மற்று - அசை: வினைமாற்றெனக் கூறுவாரு முளர்.
காவிரிவளநாடர் ஏர் பூட்டாவிடின் உணவு இல்லாமையால் உலகம் ஒருசேர அழியும்; உலகம் ஒருங்கே அழிவதனால் சுமக்கப் படவேண்டிய பொருள் இல்லாமைபற்றித் திசைப்பகடுகள் பரம் பூணாவாகு மென்க. உலகோரின் பொருட்டே நாளைச் செய்ய வேண்டியிருத்தலால் உலகோரில்லாவிடின் தன்னுதயத்தாற் பயனில்லையென்று அச்சூரியனும் உதியாதொழிவனென்றும், “தேனின்கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும், பசிவந்திடப் பறந்துபோம்” என்றவாறு உலகிற் பசி மிகும்போது சிற்றின்பத்திலே மனஞ்செல்லாதாதலால் “காமன் பொருசிலைமேற் சரம் பூட்டான்” என்றும் கூறினார். “காமன் பொருசிலைமேற் சரம்பூட்டான்” என மூன்றாவது புருஷார்த்தம் இவ்வுலகில் நில்லா தென்று கூறியதன் உபலட்சணத்தால், மற்றைப் புருஷார்த்தங்களும் உலகில் நில்லா வென்பதும், கைமுதிகநியாயத்தால் இம்மைப் புருஷார்த்தங்களே இல்லாதபோது மறுமைப் புருஷார்த்தமாகிய வீட்டுலகு பெறுதலில்லையா மென்பதும் பெறப்படுமென அறிக. ஆகவே, நால்வகைப் புருஷார்த்தமும் வேளாளரின் ஏர் பூட்டு தலினாலேயே நடைபெறு மென்றவாறாயிற்று.
கார்பூட்டு மென்பதில், பூட்டும் — உவமவாசகம். திசைப்பகடுகள் — ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப்பிரதீபம் என்பன: இவை முறையே கிழக்கு முதலிய எண்திக்கிலிருந்து பூமியைத் தாங்குமென்பது, நூற்கொள்கை: காமன் — விருப்பத்தை யுண்டாக்குங் கடவுள். பொரு சிலை — வினைத்தொகை: மேல் — ஏழனுருபு. இரவி — ரவி என்ற சொல் இகரத்தை முன்னே பெற்றுவந்தது. பூட்டு என்பது — பூண் என்ற தன்வினைச் சொல்லின் பிறவினை.