pATal16 pATal15.html pATal16.html pATal17.html ஏரெழுபது மகாகவி கம்பர் 16. பகடுபூட்டற் சிறப்பு.
பொருளடக்கம் | 15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு | 17. ஏர்பூட்டற் சிறப்பு | அகெடமி

பகடு என்ற விலங்கின் ஆண்மைப்பெயர் — உழவுதொழிற்குரிய எருது எருமைக்கடா என்ற பொருளைக் காட்டும். பகட்டை ஏரிலே பூட்டுதலின் மேன்மையைக் கூறுவது இச்செய்யு ளென்க. 16. பகடுபூட்டற் சிறப்பு. ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர் காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. (இ—ள்) உலகுதனில் — இவ்வுலகில், ஊட்டுவார் பிறர் உளரோ — (உணவுப் பொருளை யுண்டாக்கி) உண்ணுமாறு செய்விப் பவர் (வேளாளரை யன்றி) வேறேயொருவரும் இருக்கின்றனரோ? (இங்ஙனம் உலகுக்கெல்லாம் உணவை யுண்டாக்குகின்ற), உழு பகடு — உழவு தொழில்செய்யும் பகட்டை, பூட்டுவார் — (ஏரிற்) பூட்டுகின்ற வேளாளருடைய, புகழ் அன்றி — புகழேயல்லாமல், (உலகுதனில்) — இவ்வுலகில், பிறர் புகழும் — மற்றையோரின் புகமும், புகழ் ஆமோ — புகழாகக் கருதப்படுமோ? இந்த கடல் சூழ்ந்த வையகத்தே — கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகத்தில், சயத்துவசம் நாட்டுவார் நயப்பாரை — தமது வெற்றிக்கொடியை நிலை நாட்டுபவராகி விருப்பங் கொள்பவரை [சயத்துவசம் நாட்ட விரும்புகின்ற அரசரை யென்றபடி], இவர்க்கு — இந்தவேளாளர்க்கு, நிகர் — ஒப்பாக, காட்டுவார் — எடுத்துக்காட்டுதற்கு உரியவர், யார்கொல் — எவர்தாம்? (எ - று.) அரசர் வெற்றிகொள்வது வேளாளரின் உழவுநடந்து பயிர் விளைந்து உணவு நிரம்ப இருந்தால்தான் கைகூடு மாகையால், மிகவும் மேம்பட்டு நிற்கிற அவ்வேளாளர்க்கு நிகராக வேந்தரை யும் எடுத்துக்காட்டுதற்கு அறிவுடையோர் துணியார்: உலகில் மிக்குத்தோன்றுகின்ற அரசரே ஒப்பாகாதபோது மற்றையோர் அவ்வேளாளர்க்கு நிகராகாரென்பதுதானே விளங்கும்: ஆதலால் இவ்வேளாளரின் புகழ்க்குமுன்னே மற்றைச்சாதியோருடைய புகழ் புகழென்று கருதப்படமாட்டா என்கிறார். “உலகுதனில்” என்பது — இடைநிலைத்தீவகமாய் “ஊட்டுவார் பிறருளரோ” என்ற தனோடும், பின்னின்ற “உழுபகடு பூட்டுவார் புகழன்றிப் பிறர் புகழும் புகழாமோ” என்பதனோடும் இயையும். ஊட்டுவார் பிறர் உளரோ என்பதற்கு — (தாயை யன்றி மக்கட்கு) உணவை யூட்டுவார் பிறருளரோ என்றுகூறி, அந்த வாக்கியத்திற்கு உலகை யூட்டுவார் வேளாளரையன்றிப் பிறரில்லையென்று உவமேயத்தை யும் வருவித்துக் கூறுவாருமுளர்: அவ்வுரை சிறவாது. நாட்டு வார் சயத்துவசம் நயப்பாரை எனப்பிரித்து — (படையெடுத்துச் சென்று) வென்ற நாட்டிலே நீண்ட சயத்துவசத்தை ஸ்தாபிக்க விரும்புந்தன்மையுள்ள அரசரை எனினுமாம். பகடுபூட்டு தற்சிறப்பை யுணர்த்த வந்த ஆசிரியர் வேளாளரின் புகழை இந்தச்செய்யுளிற் பாராட்டிக்கூறியது மற்றொன்றுவிரித்த லென்னுங் குற்றமாகாதோ எனின்? ­— பகடுபூட்டாதபோது அவ்வேளாளர்க்குச் சிறப்பில்லை யாதலால் பகடுபூட்டுதலைச் செய்பவரது புகழைக் கூறிய முகத்தால் இஃது செயப்படுபொருளாகிய பகடுபூட்டலின்சிறப்பையே யுணர்த்தியதா மென்று சமாதானங் காண்க. — (16)
பொருளடக்கம் | 15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு | 17. ஏர்பூட்டற் சிறப்பு | அகெடமி