pATal15
pATal14.html
pATal15.html
pATal16.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு.
உழவெருத்தின் சுவற்கறை — உழவெருதினுடைய பிடரியில் நுகத்தடி யழுந்துவதனாலான தழும்பு.
15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு.
கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே.
(இ—ள்.) கண் நுதலோன் தனது — (நெருப்புக்) கண்ணை நெற்றியிலுடைய சிவபெருமானது, திரு கண்டத்தில் — திருக்கழுத்திலே, படிந்த — பொருந்திய, கறை — கறுப்புநிறத்தை, விண்ண வரை அமுது ஊட்டி — தேவர்களை அமிருதமுண்ணச்செய்து, விளங்குகின்ற —பிரகாசிக்கின்ற, கறை — கறையாகும், என்பார் — என்று (பெரியோர்) சொல்வார்கள்; எண் அரு சீர் பெருக்கு ஆளர் — அளவில்லாத சிறப்புக்களையுடைய வேளாளரது, எருது — உழவெருதுகளின், சுவல் — பிடரிலே, இடு — உண்டாயிருக்கின்ற, கறை — தழும்போ, மண்ணவரை அமுது ஊட்டி — நிலவுலகத்தி லுள்ளாரை உணவு உண்ணச்செய்து, வான் உலகம்உம் காப்பது — மேலுலகத்திலுள்ளாரையும் (உண்ணச்செய்து) பாதுகாப்பதாகும்; (எ - று.)
சிவபெருமானது கண்டத்தின் கறையானது ஒருகாலத்தில் தேவர்களைமாத்திரம் அமுதூட்டிப் பாதுகாத்தது; வேளாளரது உழவெருதுகளின் கண்டத்திலுள்ள கறையோ எப்போதும் மண்ணுலகத்தாரையும் விண்ணுலகத்தாரையும் அமுதூட்டிப் பாதுகாக்கின்ற தென்பதாம்; இங்கு, உபமானமாகிய சிவபெருமானது கண்டத்தின் கறையைக் காட்டிலும் உபமேயமாகிய உழவெருதுகளின் கண்டத்திலுள்ள கறைக்கு மேன்மைதோன்றக் கூறியது, வேற்றுமையணி; இவ்வணிக்கு “கறை”, “அமுதூட்டி” என்பவற்றின் சிலேடைப்பொருள் அங்கமாகிநின்றது. கறை — கறுப்புநிறமும், தழும்பும். விண்ணவரை அமுதூட்டுதல் — தேவர்களைச் சாவாமருந்தாகிய அமிருதத்தை உண்ணச் செய்தல். மண்ணவரை அமுதூட்டுதல் — நிலவுலகத்தவரை உணவையுண்ணச்செய்தல். எருதின்சுவற்கறை மண்ணவரையமுதூட்டி வானுலகமும் காப்பதாவது — உழவெருதுகள் தமதுகழுத்தில் தழும்புண்டாகுமாறு நுகத்தடியைப்பூண்டு உழுதலாலுண்டாக்கிய விளையுள் மூலமாக நிலவுலகத்தாரை உணவுண்ணச்செய்து, நிலவுலகத்தார் செய்யும் யாகங்களிற்கொடுக்கப்படும் அவிர்ப்பாகமூலமாகத் தேவர்களையும் திருப்திசெய்து பாதுகாத்தல்.
கண்ணுதலோன்தனது திருக்கண்டத்திற் கறைபடிந்த வரலாறு:- பாற்கடல் கடைகையில் அதனினின்று எழுந்த அதிபயங்கரமான ஆலாகலமென்ற பெருவிஷத்தைக் கண்டவளவிலே அதன்கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிச்சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளால் அவ்விஷத்தைச் சிவபிரான் தனது திவ்வியசக்தியினால் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி எல்லாரையும் பாதுகாத்தருளின னென்பதாம். இவ்வாறு சிவபெருமான் செய்தது தேவர்கள் ஒருவகை இடையூறுமின்றி அப்பாற்கடலினின்று தோன்றிய சாவாமருந்தாகிய அமிருதத்தை இனிது உண்ணக்காரணமாகி நின்றதனால் “விண்ணவரையமு தூட்டி” என்றும், தேவர்கள் அமிருதத்தை யுண்பதற்காகவே தான் விஷத்தை யுண்டதனால், “அமுதூட்டி விளங்குகின்ற” என்றும்கூறினார்.
திருக்கண்டம் — ஸ்ரீகண்டம். அமுது — அம்ருத மென்ற வடசொல்லின் சிதைவு; (தன்னையுண்டார்க்கு) மரணத்தைத் தவிர்ப்பது என்று பொருள். ஊட்டி — “உண்” என்பதன் பிறவினையான ஊட்டு — பகுதி. “மண்ணவரை” என்று உயர்திணையாற் கூறினாராயினும், உபலட்சணத்தால் அஃறிணையுயிர்களையுங் கொள்க. வானுலகம் — அங்குஉள்ளார்க்கு இடவாகுபெயர். உம்மை — இறந்தது தழுவியது. — (15)