pATal14
pATal13.html
pATal14.html
pATal15.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
14. உழவெருதின்சிறப்பு.
14.-உழவெருதின்சிறப்பு.
வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே.
(இ—ள்.) வானம் — மேகமானது, மழை பொழிந்தாலும் — (பெய்வதற்கு உரிய காலத்துத் தவறாமல்) மழையைப் பெய்தாலும், படுவது — (இவ்வுலகத்து உயிர்கட்குவேண்டும்) வளப்ப முண்டாவது, எவராலே? ஞானம் மறையவர் வேள்வி — நல்லறிவையுடைய அந்தணர்களது யாகங்கள், நலம் பெறுவது — நன்மையையடைவது, எவராலே-? சேனை கொடு பொரும் (தமது) சேனைகளைக்கொண்டு போர் செய்கின்ற, மன்னர் — அரசர்களது, செரு களத்தில் — போர்க்களத்திலே, செகுக்கும் — (பகையை) அழிக்குந்தன்மையுள்ள, மதம் யானை — மதங்கொண்ட யானைகளினது, வலி — வலிமை, எவராலே-? இவர் — இவ்வேளாளரது, எருத்தின் — உழவெருதுகளினுடைய, வலியாலே — வலிமை யினால்தான், (உண்டாகின்றன); (எ - று.)
வினைச்சொல் வருவித்துமுடிக்கப்பட்டது. இவர்எருத்தால் என்னாமல் “இவரெருத்தின்வலியால்” என்றது - உடையார்தன்மையை உடைமையின் மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கின்பாற்படும். வானம் மழைபொழிந்தாலும் வேளாளர் எருதுகளைக் கொண்டு உழுது பயிரிட்டாலன்றி, உலகத்துயிர்கட்கு வேண்டிய உணவு அகப்படாமை வெளிப்படை. மிகப்பெரிய யானைகள் கவளம் முதலியனபெற்று உண்ணுதலும் வேளாளர் உழவுத் தொழிலினா லென்பதும் தெற்றென விளங்கும்.
வானம் — இடவாகுபெயர். பொழிந்தாலும், உம்மை — உயர்வு சிறப்பு: எருதின்வலிமை இல்லாவிடின் பொழிந்தும்பயனில்லை யென்பது குறித்து நின்றது. ஞானம் — ஜ்ஞாநம்: வடசொல். கொடு = கொண்டு: தொகுத்தல். “செகுக்கும்” என்ற பெயரெச்சத்தில், செகு - பகுதி. எருத்தின் — எருதின் என்பதன் விரித்தல். — (14)