pATal13 pATal12.html pATal13.html pATal14.html ஏரெழுபது மகாகவி கம்பர் 13. தாற்றுக்கோற் சிறப்பு.
பொருளடக்கம் | 12. கொழுவாணிச் சிறப்பு | 14. உழவெருதின்சிறப்பு. | அகெடமி

தாற்றுக்கோல் — உழவுமாடுகளைக் குத்தி நடத்துகின்ற முள்ளைமுனையிலுடைய கோல். தாறு+கோல் = தாற்றுக்கோல்; வேற்றுமையில் நெடிற்றொடர்க்குற்றியலுகர றகரவொற்று இரட்டிவந்தது. தாறு — இரும்புமுள். 13. தாற்றுக்கோற் சிறப்பு. வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும் பொங்கோதைக் கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ் செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. (இ—ள்.) வெங் கோபம் கலி கடந்த — கொடிய கோபத்திற்குக் காரணமான வறுமையைச் சயித்த [பெருஞ்செல்வர்களான], வேளாளர் — வேளாளரது, விளைவயலுள் — (தானியம்) விளைகின்ற கழனிகளிலே, பைங்கோலம் முடிதிருந்த — பசுமையாகிய அழகுடைய பயிர்களின் நாற்றுமுடி செழித்திருக்குமாயின், பார் வேந்தர் முடி திருந்தும் — பூமியையாள்கின்ற அரசர்களது கிரீடம் செவ்வைபெறும்; பொங்கு ஓதை கடல் தானை — பொங்குந்தன்மை யுள்ள பேரொலியைக் கொண்ட கடல்போன்ற சேனைகளையுடைய, போர் வேந்தர் — போர்வீரத்தையுடைய அரசர்கள், நடத்து — நடத்துகிற, பெருஞ் செங்கோலை — பெரியதாகிய செங்கோலை, நடத்தும் — (ஒருபாற்கோணாமல்) நடத்தவல்ல, கோல் — கோலாவது, ஏர் அடிக்கும் சிறு கோலே — (வேளாளர்) உழவுமாட்டை யடித்து ஓட்டுகின்ற சிறிய தாற்றுக்கோலேயாம்; (எ - று.) பார்வேந்தர் முடிதிருந்துதல் — அரசர் செல்வப்பெருக்கினால் மிக்க பெருமையுடன் வாழ்தல். அரசர் பெருமையுடன் வாழ்தற்குக் காரணம், வேளாளரது பயிர்த்தொழில்; அப்பயிர்த்தொழில் இனிதுநடத்தற்குத் தாற்றுக்கோல் துணையாயிருந்து அரசரது செங்கோலைக் கோணாது நடத்து மென்க: இங்கு, முன்னிரண்டடியிற்கூறிய விஷயத்தைப் பின்னிரண்டடி சாதித்துநிற்பது தொடர்நிலைச் செய்யுட் குறியணியின் பாற்படும். ஈற்றடியில் “கோல்” என்ற சொல் ஒரேபொருளில் மும்முறைவந்தது — சொற்பொருட்பின் வருநிலையணி. செங்கோலாவது — அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறையானது ஒருபாற்கோணாது செவ்வியகோல் போலுதலால், செங்கோ லெனப்படும்; (வட நூலாரும் “தண்டம்” என்பர்.) அச்செங்கோல்கோடுவது, ஆசைமுதலிய காரணம்பற்றி; செல்வவளம் நிறைந்தபோது, அரசர்க்கு ஆசைமுதலிய தீக்குணங்க ளுண்டாகமாட்டா வென்க. செல்வவளத்திற்குப் பிரதான காரணமாகிய பயிர் விளைதற்குக் கருவியா யிருத்தலால், ஏரடிக்குஞ் சிறுகோலை வேந்தரின் பெருஞ்செங்கோலை நடத்துங் கோலாகும் என்றார். “பெருஞ்செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக் குஞ் சிறுகோல்” என்ற விடத்துச் சொல்நயம் பாராட்டத்தக்கது. கலி — வறுமை. வறுமைக்காலத்தில் எவர்க்கும் கோபம்மிகுதல், இயல்பு. கலி — கலிபுருஷனென்பாரு முளர். வேளாண்மை — பயிர்த் தொழில், உபகாரம்: இவற்றையுடையவர் - வேளாளர். விளை வயல்வினைத்தொகை. பசுமை+கோலம் = பைங்கோலம்: பசுமை யென்ற பண்புப்பெயரின் மைவிகுதிபோய், நடுநின்ற உயிர்மெய்யுங் கெட்டு, முதலிலிருந்த அகரம் ஐகாரமாகி, வருமெழுத்திற்கு இன வெழுத்து மிக்கது; [நன் - பத - 9.] திருந்தகாரணப்பொருட் செயவெனெச்சம். தானைக்குக் கடலுவமை-பரப்பிலும், அணியணியாக வருதலிலும், பேரொலிசெய்தலிலும். கடற்றனை — உவமைத்தொகை. காராள ரணிவயலி லுழுது தங்கள் கையாரநட்டமுடிதிருந்த விந்தப், பாராளுந்திறலரசர்கவித்தவெற்றிப் பசும்பொன் மணி முடிதிருந்துங் கலப்பைபூண்ட, வேரா லெண்டிசைவளர்க்கும் புகழ்வேளாள ரேரடிக்குஞ் சிறுகோலாற் றரணியாளச், சீராருமுடியரசரிருந்துசெங்கோல் செலுத்துவர் வேளாள புகழ் செப்பலாமோ என்று உமாபதிசிவாசாரியர் இச்செய்யுளை அடி யொற்றிக் கூறியிருத்தல் காண்க, — (13)
பொருளடக்கம் | 12. கொழுவாணிச் சிறப்பு | 14. உழவெருதின்சிறப்பு. | அகெடமி