pATal10
pATal09.html
pATal10.html
pATal11.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
10. தொடைச்சிறப்பு.
தொடை - மேழிக்கும் ஏர்க்காலுக்கும் தொடர்புண்டாம்படி தொடுக்கப்படும் உழவுக்கயிறு; தொடை-தொடுத்தல்; தொழிலாகு பெயராய்த் தொடுக்கப்படுங் கயிற்றை யுணர்த்திற்று.
10. தொடைச்சிறப்பு.
தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ
எடுத்தபுகழ்ப் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே.
(இ—ள்.) தடுத்த நெடு வரையாலும் — (சூரியன் முதலிய கிரகங்களது கதியைத்) தடுக்குந் தன்மையுடைய பெரியமகாமேரு மலையாலும், தடவரைகள் எட்டாலும் — பெரிய எட்டுக்குல பர்வதங்களாலும், உடுத்த திரை கடலாலும் — பூமியைச்சூழ்ந்துள்ள அலைகளையுடைய கடலினாலும், உலகின் நிலை — நிலவுலகத்தின் நிலைமை, வலி ஆமோ — வலிமையுடையதாகுமோ? [ஆகாதென்ற படி]; (மற்றுஉலகின் நிலைமை எதனால் வலியுடையதாகுமென்றால்), புகழ் எடுத்த பெருக்கு ஆளர் - கீர்த்திபெற்ற வேளாளரது, இணை பகடு எழும் நுகத்தோடு — இரட்டையாகிய உழவுமாடுகளின் கழுத்திற்பொருந்திய நுகத்தடியுடன், தொடுத்த — (கலப்பையிற்) சேர்த்துக் கட்டப்பட்டுள்ள, தொடை — உழவுக்கயிற்றின் கட்டானது, நெகிழாது ஏல் — தளராதிருக்குமானால், உலகு தொடை — இவ்வுலகத்தின் இடையறாது நடந்துவருந் தன்மையானது, நெகிழாது — தளராது; (எ - று.)
மேருபர்வதமும் அஷ்டகுலாசலங்களும் பூமியில் மேலே தோன்றுமளவு கீழேஆழ்ந்து வேரூன்றிப் பூமியை அசைய வொட்டாமற்செய்துநின்று தாங்குதலால் “பூதரங்கள் [பூமியைத் தாங்குவன]” எனப் பெயர்பெற்று மழைக்குக் காரணமாயும் நிற்கின்றன; கடலும் உலகத்தைச்சூழ்ந்துகொண்டு பூமியின்கண் உண்டாகும் வெப்பத்தைத் தணித்து மழைக்குங் காரணமாய் நிற்கின்றது: ஆதலால், மலைகளும் கடலும் உலகு நிலை நிற்றற்குக் காரணமாகுமென்பர்; இவ்விரண்டு மிருந்தாலும், வேளாளரது உழவுத்தொழில் இடையறாது நடந்துவரும்போது மாத்திரமே உலகத்து உயிர்கள் வாழுமாதலால், அதற்கு இன்றியமையாத உழவுக்கயிறு நெகிழாதிருத்தலே உலகம் இடையறாது நடத்தற்குக் காரணமாமென்க. உழவுக்கயிறு நெகிழுமாயின், உணவின்றி இவ்வுலகத்து உயிர்கள் அழிந்தொழியுமென்பது கருத்து. உழவுக்கயிறு நெகிழ்தலாவது — ஏர்கட்டப்படாமையாற் பயிர்த்தொழிலுக்கு இடமில்லாதிருத்தல். இங்கு, மலைகளினிடத்தும், கடலினிடத்துமுள்ள உலகத்தைத் தாங்குந்தன்மையை மறுத்து, உழவுக்கயிற்றின்மேல் ஏற்றிக்கூறியது, ஒழிப்பணியென்னும் அபநுதியணியின்பாற்படும்.
“நுகத்தோடு இணைப்பகடுதொடுத்ததொடை” என்பதற்கு — யாற்றுநீர்ப் பொருள்கோளாக, நுகத்தடியோடு இரண்டுமாடுகளைச் சேர்த்துக்கட்டிய பூட்டாங்கயிறு எனப் பொருள்கூறலாகாது; அதனைப்பற்றி, “நாட்டுகின்ற சோதிடத்தினாண்பொருத்த நாட்பொருத்தங், காட்டுகின்ற கயிறிரண்டுங்கயிறல்ல கடற்புவியிற், றீட்டுபுகழ்ப்பெருக்காளர் செழுநுகத்தோடுழும்பகடு, பூட்டுகின்ற கயிறிரண்டும்புவிமகண் மங்கலக்கயிறே” என்று முன் செய்யுள் இருத்தலையும், உழவுக்கயிற்றிற்குத் தனியே செய்யுள் இல்லாதிருத்தலையுங்காண்க.
மகாமேருகிரியானது, சூரியன் முதலியகிரகங்கள் தன்னைச் சுற்றிவந்து உதயாஸ்தமநம் பெறுமாறு பூமியின்நடுவிலே ஓங்கி நிற்றலால், “தடுத்தநெடுவரை” எனப்பட்டது. அஷ்டகுலாசலங்கள் — கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதநம், நீலகிரி என்பன: வேறுவகையாகவும்கூறப்படும். பூமியாகிய பெண்ணுக்குக் கடலானது ஆடைபோலச் சூழ்ந்து நிற்றலால், “உடுத்த திரைக்கடல்” எனப்பட்டது; பூமிக்கு உள்ள “அப்திமேகலா” என்ற வடமொழிப் பெயரையுங் காண்க. பகடு — பசு எருமை இவற்றின் ஆண். வலியாமோ, ஓகாரம் — எதிர்மறை. — (10)