pATal09
pATal08.html
pATal09.html
pATal10.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
9. பூட்டாங்கயிற்றுச்சிறப்பு.
நுகத்தடியை உழவுஎருத்துகளின் கழுத்தில்வைத்துப் பூட்டுகின்ற கயிறு பூட்டாங்கயிறு எனப்படும்.
9. பூட்டாங்கயிற்றுச்சிறப்பு.
நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டுங் கயிறல்ல கடற்புவியில்
தீட்டுபுகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே.
(இ—ள்.) கடல் புவியில் — கடலாற் சூழப்பட்ட இந்தப் பூமியிலே, நாட்டுகின்ற - (நன்மை தீமைகளை) நிலையிட்டுக் காட்டுகின்ற, சோதிடத்தில் — சோதிடநூலினா லாராய்ந் துணரப்படுகின்ற, நாண் பொருத்தம் நாள்பொருத்தம் காட்டுகின்ற — இரச்சுப் பொருத்தத்தையும் வேதைப் பொருத்தத்தையும் உணர்வதற்குக் கருவியாயுள்ள, கயிறு இரண்டும் — கயிறுகளிரண்டும், கயிறு அல்ல — (யாவர்க்கும் பயன்விளைக்குங்) கயிறென்னப்படா; (பின்னை எது பயன்விளைக்குங் கயிறு என்றால்), தீட்டு புகழ் — (மக்களுடைய நாவிலே) எழுதப்பெற்றுள்ள புகழைக்கொண்ட, பெருக்காளர் — வேளாளர், செழுநுகத்தோடு — வளப்பமுள்ள நுகத்தடியை (த் தம்பிடரியிலே) கொண்டு, உழும் — உழுதொழில் செய்கின்ற, பகடு — எருதுகளை அல்லது எருமைக்கடாக்களை, பூட்டுகின்ற — ஏரிற்பிணிக்கின்ற, கயிறு இரண்டும் — இரண்டு கயிறுகளே, புவி மகள் மங்கலம் கயிறே — பூமிதேவியின் மங்கல நாண்போலும்; (எ - று.)
நாண்பொருத்தம் நாட்பொருத்தம் இவற்றைக்காட்டுகின்ற கயிறிரண்டும் சோதிடமுணர்ந்தோரான்மாத்திரம் எண்ணப்படுதலாலும், விவாகத்திலன்றி மற்றைத்தொழில்களில் உதவுவன அல்லவாதலாலும், தாம் நேரே பயனை விளைப்பனவல்லவாதலாலும் அவற்றைக் கயிறல்லவென விலக்கி, நேரேபயனைவிளைப்பனவாகிய பூட்டாங்கயிற்றை பூமிதேவியின் மங்கலநாணாக உருவகஞ்செய்தார். பூமிதேவியாகிய பெண் வாழ்ச்சியையுடையவ ளெனத்தெரிவிப்பது உழுதொழிலாகையால் அவ்வுழுதொழிலுக்கு இன்றியமையாத பூட்டாங்கயிறுகள் அந்தப் பூமிதேவியின் மங்கல நாணெனப்பட்டது. ஓர் ஏருக்கு இரண்டு பகடுஉள்ளனவாதலால், கயிறுகள் இரண்டாயின. ஒருபெண்ணை ஒருபுருஷனுக்கு விவாகஞ் செய்யவேண்டுமென்றால் பார்த்தற்குஉரிய பொருத்தங்கள் பத்து என்று சோதிடர் கூறுகின்றனர்: அவை — (1) தினப்பொருத்தம், (2) கணப்பொருத்தம், (3) மாஹேந்திரப்பொருத்தம், (4) ஸ்த்ரீ தீர்க்கப்பொருத்தம், (5) யோனிப்பொருத்தம், (6) ராசிப்பொருத்தம், (7) ராசியதிபதிப்பொருத்தம், (8) வசியப்பொருத்தம், (9) இரச்சுப் பொருத்தம், (10) வேதைப்பொருத்தம் என்பன. நாண் இரச்சு என்பன பரியாய மாதலால், நாண்பொருத்தம் என்பதற்கு அந்தப்பத்துவகைப் பொருத்தத்தினுள் ஒன்றாகிய இரச்சுப் பொருத்தம் என்று கொள்ளப்பட்டது. நாட்பொருத்தங் காட்டுகின்ற கயிறு என வருதலாலும், இரச்சுக்கயிறு வேதைக்கயிறு என்ற இவ்விரண்டே கயிறுஎன வழங்கப்படுவதாலும், நாண் பொருத்தமென்பதனால் இரச்சுக்கயிறு கூறப்பட்டதாலும், மற் றொன்றாகிய நாள் பொருத்தமென்பது தினப்பொருத்த மென்று பொருள்படுமாயினும் அங்ஙனம் பொருள்கொள்ளாமல் அசுவினி முதலிய நட்சத்திரங்களைக்கொண்டு பார்க்கும் பொருத்தமாகிய வேதைப்பொருத்தமென்று பொருள் உரைக்கப்பட்டது.
இவற்றுள் நாண்பொருத்தமாவது நேரே மூன்றுமுக்கோணம் கீறி, குறுக்காக நான்குகீற்றுக்கீறினால் இருபத்தேழு பொருத்தாம்: குறுக்காகக் கீறிய அடிவரைக்குக்காலென்றும், அதன்மேல் வரைக்குத் தொடையென்றும், அதன்மேல்வரைக்கு வயிறென்றும், அதன்மேல்வரைக்குக் கழுத்தென்றும், முக்கோணத்துச்சி மூன்றுக்கும் தலையென்றும் பெயராம்: இதில் ஏற்படும் இருபத்தேழு பொருத்தில் அடிப்பொருத்தில் அசுவினியை வைத்து மேல்கீழாக முறையே இருபத்தேழுநட்சத்திரங்களையும் எழுதவும். புருஷனுடைய நட்சத்திரமும் பெண்ணினுடைய நட்சத்திரமும் ஒரே கீற்றில் இருக்கலாகாது. அங்ஙனம் நிற்பின், கால்வரையி லிருந்தால் பொருளழிவென்றும், தொடைவரையில் வந்தால் மலடியென்றும், வயிற்றுவரையில் வந்தால் புத்திரஹாநியென்றும், கழுத்துவரையில் வந்தால் புருஷனிறப்பு என்றும், சிரசுவரையில் வந்தால் பெண்ணிறப்பு என்றும் பலன்காண்க. இதுவே இரச்சுப் பொருத்தமாம். இரச்சுக்கயிறுவரையுமாறு:-
ரச்சு வரைபடம்
இனிவேதைப்பொருத்தமாவது — ஒருமுக்கோணங்கீறி, தலைப் பக்கத்தை யடுத்தாற்போல் இருபக்கத்திலும் நன்னான்குவரைகீறிக் குறுக்காகவும் நான்குவரைகீறினால் இருபத்தேழுமுனையதாம். முக்கோணத்தின் அடிப்பக்கத்திலிருந்து அசுவினிமுதலிய இருபத்தேழுநட்சத்திரங்களையும் எழுதவும். ஆண் நட்சத்திரமும் பெண் நட்சத்திரமும் ஒரேவரையில் வரலாகாது. இதுவே வேதைப் பொருத்தமாம். வேதைக்கயிறுவரையுமாறு:-
வேதைக்கயிறுவரைபடம்