pATal08 pATal07.html pATal08.html pATal09.html ஏரெழுபது மகாகவி கம்பர் 8. நுகத்தாணிச் சிறப்பு.
பொருளடக்கம் | 7. நுகத்தொளைச்சிறப்பு | 9. பூட்டாங்கயிற்றுச்சிறப்பு | அகெடமி

8. நுகத்தாணிச் சிறப்பு. ஓராணித் தேரினுக்கும் உலகங்க ளனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின் சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. (இ—ள்.) ஓர் ஆணி தேரினுக்கும் — ஒரே அச்சாணியைக் கொண்ட சூரியனுடைய தேருக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும் — எல்லாவுலகங்கட்கும், பேர் ஆணி — பெருத்த தேராணிபோன்று தாங்கவல்லவரான, பெருக்கு ஆளர் — செல்வப்பெருக்கை யுடையவரான வேளாளரின், பெருமைக்கு, நிகர் — ஒப்பு, உண்டோ? — [இல்லை); (அவ்வாறே), கார் ஆணி — மேகத்தை ஆதாரமாகக் கொண்ட, காவேரி — காவிரி பாயப்பெற்ற, வளநாடர் — வளப்ப முள்ள சோழநாட்டவரான வேளாளர், உழும் — உழுவதற்குக் காரணமான, நுகத்தின் — நுகத்தடியிலுள்ள, சீர் ஆணிக்கு — சீர்மை பொருந்திய ஆணிக்கு, ஒப்பது — ஒப்பதாகிய, ஒரு சிறந்த ஆணி — ஒரு சிறந்த ஆணியை, செப்பீர் — சொல்லுங்கள்; (எ-று.) வேளாளர்பெருமைக்கு ஒப்பான பெருமையுடையார் இல்லாம லிருப்பது போலவே, நுகத்தாணிக்கு ஒப்பான ஆணியும் வேறு இல்லை யென்றவாறு: எடுத்துக்காட்டுவமையணி. சூரியனுடைய தேர் ஒற்றைத் தனியாழியை யுடையதாகையால், அதற்கு அச்சாணியும் ஒன்றேயா மென்பது குறித்து, “ஓராணித்தேர்” என்றார். ஆணிஎன்றசொல் இலக்கணையால், வெவ்வேறு பொருளை உணர்த்திற்று. உண்டோ, ஓகாரம் — எதிர்மறை. நிகர் — இடைச் சொல். சிறந்தாணிபெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல். — (8)
பொருளடக்கம் | 7. நுகத்தொளைச்சிறப்பு | 9. பூட்டாங்கயிற்றுச்சிறப்பு | அகெடமி