pATal07
pATal06.html
pATal07.html
pATal08.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
7. நுகத்தொளைச்சிறப்பு.
7. நுகத்தொளைச்சிறப்பு.
வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடக்குந் துளைத்தல்லால்
திளைத்துவருஞ் செழும்பொன்னித் திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே.
21
(இ—ள்.) வளைத்த — சுருட்டிவருகின்ற, திரை — அலைகளை யுடைய, கடல் — சமுத்திரத்தினால், சூழ்ந்த — சூழப்பெற்றுள்ள, வையகத்தோர் எல்லார்க்கும் — உலகத்தவரெல்லார்க்கும், துளைத்த — (உறுப்பாகிய செவியிலே) தொளைக்கப்பெற்றுள்ள, துளை — தொளையானது, பசும் பொன்னின் அணி கிடக்கும் துளைத்து அல்லால் — பசும்பொன்னினாலியன்ற அணிகலன் தங்கியிருக்கப்பெற்ற துளை யாகவுள்ளதேயல்லாமல், திளைத்து — (இருகரையிலுள்ளாரும்) நுகருமாறு, வரும் — பெருகிவருகின்ற, செழும் பொன்னி திருநாடர் —வளப்பமுள்ள காவேரியென்னும் நதி பாயப்பெற்ற சிறந்த சோழ நாட்டிலேயுள்ள வேளாளர், உழும் — உழுதற்கு உதவுகின்ற, நுகத்தில் — நுகத்தடியில், துளைத்த — தொளைத்துள்ள, துளை போல் - துளையைப்போல், உதவும் — (உலகிற்கெல்லாம்) உதவுகின்ற, துணை — தன்மையை, உளதோ — கொண்டுள்ளதோ? சொல்லீர் - சொல்லுங்கள்; (எ - று.)
மனிதருறுப்பிலும் தொளையிட்டாலும் அத்தொளை குழை, தோடு, குண்டலம், கடுக்கன் முதலியனவாக வழங்கும் அணிகலங் கள் பூட்டுவதற்குமாத்திரம் பயன்படும். அத்தொளையால் மனிதர் கையிலிருக்கும் செல்வத்தையும் செலவழிக்க நேரிடுகின்றது: ஆகையால், அத்தொளையால் நஷ்டமேதவிர இலாபமென்ப தில்லை; அங்கனமன்றி ஏர்மாட்டின் கழுத்திற் பூட்டும் நுகத்தடியிலுள்ள தொளையானது நுகத்தாணிபூட்டுதற்கு இடனாகி அதனால் ஏர்மாடுகள் உழுவதற்கு வழியுண்டாகி அவ்வழியால் நல்லவிளைச் சலைத் தந்து உலகோர்க்கெல்லாம் உதவுகின்றது: ஆகவே, இத்தொளைபோற்பயனுள்ள தொளையுள்ளதோ? நீங்களே ஆராய்ந்து சொல்லுங்கள் என உலகத்தோரை நோக்கிக் கூறுவதாகச் செய்யப்பட்டுள்ளது, இச்செய்யுள். செவித்தொளையினும் நுகத்தொளைக்கு வேறுபாடு கூறியிருப்பதால், வேற்றுமையணி.
தொளை தொளைக்கப்பட் டிருத்தலால் வந்த செயப்படு பொருள் விகுதி புணர்ந்துகெட்டது. தொளை — சாதியொருமை. இதுவே, துளையெனவும் வழங்கும். காரணப்பெயர். உளதோ என்ற ஓகாரம் — எதிர்மறையைக் காட்டும். துளைத்து — ஒன்றன்பாற் குறிப்புமுற்று: துணைத்து என்ற பாடம் சிறக்கும். வளைத்த — வளைந்துள்ள எனக்கூறி, கடலுக்கு அடையாக்கினுமாம். அல்லால் — எதிர்மறை வினையெச்சம். திளைத்து = திளைக்க: எச்சத்திரிபு: இனி, இடையறாமலெனினுமாம். — (7)