pATal11
pATal10.html
pATal11.html
pATal12.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
11. கொழுச்சிறப்பு.
கொழு — கலப்பையின் காறு.
11. கொழுச்சிறப்பு.
வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேல் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே.
(இ—ள்.) வேதம் நூல் முதல் ஆகி — வேதசாஸ்திரம் முதலாகி, விளங்குகின்ற கலை அனைத்தும் — பிரசித்தமான சாஸ்திரங்களை யெல்லாம், ஓதுவார் எல்லாரும் — படிப்பவர்களெல்லாம், உழுவார் தம் தலைக்கடைக்கே — உழவு தொழிலையுடைய வேளாளரது (வீட்டின்) தலைவாசலிலேயே (உள்ளவராவர்); கோதை வேல் மன்னவர்தம் — வெற்றிமாலையணிந்த வேலாயுதத்தையுடைய அரசர்களது, குடை வளமும் — வெண்கொற்றக்குடையின் [அரசாட்சியின்] சிறப்பும், கொழு வளமே — (அவ்வேளாளரது) கலப்பைக்காறின் செழிப்பினாலேயே (உண்டாவது); ஆதலால், இவர் பெருமை — இவ்வேளாளரது பெருமையை, யார் உரைக்க வல்லார் — எவர் எடுத்துச்சொல்லவல்லவர்? [எவராலும் ஆகாது என்றபடி];
நான்குசாதியாருள் அந்தணர்கள் கல்வியினாலும் ஒழுக்கத்தினாலும் யாவரினுஞ் சிறந்தவராகத் தோன்றுகின்றனர்; க்ஷத்ரியர்கள் செல்வவலிமைகளினால் மிக்குத் தோன்றுகின்றனர்; என்றாலும், இவ்விருதிறத்தாரது சிறப்புக்கும் வேளாளரது உழவுத்தொழிலே காரணமாதலால், இவ்வேளாளர் யாவரினும் சிறந்தவராவ ரென்பதாம். “சுழன்று மேர்ப்பின்ன துலகமதனா, லுழந்து முழவேதலை” என்ற திருக்குறளும், “பிறதொழில்களாற் பொருளெய்தியவழியும் உணவின்பொருட்டு உழுவார்கட் செல்லவேண்டுதலின் “சுழன்று மேர்ப்பின்னது உலகம்” என்றும், வருத்தமிலவேனும் பிறதொழில்கள் கடையென்பது போதர “உழந்துமுழவே தலை” என்றுங் கூறினார்” என்ற அதன்பரிமேலழகருரையும் காணத்தக்கன.
வேதம் — (நன்மைதீமைகளை) அறிவிப்பதென, வடமொழிக் காரணக் குறி. நூல் — உவமவாகுபெயர். பஞ்சுகொண்டு இழைத்து நூற்கப்படும் நூல்போலச் சொற்கொண்டு அமைக்கப்படுவது, நூலாம்; இனி, “நூல்” என்றசொற்குப் பொருள் யாதோ வெனின், — நூல்போறலின் நூலென்ப; பாவைபோல்வாளைப் பாவையென்றது போல; என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவல்மகடூஉத் தனது செயற்கைநலந் தோன்ற ஓரிழைப்படுத்தலாம், உலகத்து நூல்நூற்றலென்பது: அவ்வாறே சுகிர்ந்து பரந்துகிடந்த சொற்பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியின் பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரமென்னும் யாப்பு நடைபடக்கோத்து நூற்கப்படலினென்பது. இனி, ஒரு சாரார் நூல்போலச் செப்பஞ் செய்தலின், நூலென்ப. இனி, தந்திர மென்னும் வடமொழிப்பொருளை நூலென வழங்குதல், தமிழ் வழக்கெனக் கொள்க. இது, நூலென்றசொற்குப்பொருள்” என்ற இறையனாரகப்பொருளுரை அறியத்தக்கது. இனி, நூலென்ற பெயரை, “ஸூத்ரம்” என்ற வடமொழியின் பொருளமைந்த தென்பாரு முளர். கலை — “கலா” என்ற வடமொழி ஈறுதிரிந்துவந்தது. அனைத்தும், எல்லாரும் — உம்மை எஞ்சாமைப்பொருளது. இரண்டாமடியிலும், மூன்றாமடியிலும் ஏற்றவினைச்சொற்கள் வருவித்து முடிக்கப்பட்டன. தலைக்கடை — பண்புத்தொகை; தலைவாசல்: இனி, தலைக்கடை = கடைத்தலை: இலக்கணப்போலி யென்பாருமுளர். குடைவளமும் கொழுவளமே — காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரவழக்கெனினுமாம். “கோதை” என்பது, வேலுக்கேனும் மன்னவர்க்கேனும் அடைமொழி யாகத்தக்கது. வெல்வது — வேல்: காரணக்குறி. இது, மற்றையாயுதங்கட்கும் உபலட்சணம், குடைவளமும், உம்மை — முன்னிரண்டடியை நோக்குதலால், இறந்தது தழுவிய எச்சப்பொருளது. யார் — யாவ ரென்பதன் மரூஉ. — (11)