pATal04 pATal03.html pATal04.html pATal05.html ஏரெழுபது மகாகவி கம்பர் 4. மேழிச்சிறப்பு
பொருளடக்கம் | 3. அலப்படைச்சிறப்பு | 5. ஊற்றாணிச்சிறப்பு | அகெடமி

மேழி — கலப்பைமுனை நிலத்திலூன்றுமாறு அழுத்துதற்குக் கைப்பிடியுள்ள ஓருறுப்பு. 4. மேழிச்சிறப்பு வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும் ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும் ஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர் மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. (இ—ள்.) நால் மறையோர்கள் — நான்குவேதங்களையுடைய அந்தணர்கள், வளர்க்கின்ற — மிகுதியாகச்செய்கின்ற, வேள்விகளும் — யாகங்களும், ஆழியால் உலகு அளிக்கும் — (ஆஜ்ஞையாகிய) சக்கரத்தால் உலகத்தைப் பாதுகாக்கின்ற, அடல் வேந்தர் — வலிமைபொருந்திய அரசர்களது, பெரு திருவும் — பெருஞ் செல்வமும், ஊழி பேரினும் பெயரா உரை உடைய — உலகம் அழிந்தாலும் மாறுபடாத சொற்களையுடைய, பெருக்கு ஆளர் — செல்வப்பெருக்கையுடைய வேளாளரது, மேழியால், விளைவது அலால் — உண்டாகுமேயல்லாமல், வேறு ஒன்றால் விளையா — வேறொருவழியால் உண்டாகமாட்டா; (எ - று.) அந்தணரதுவேள்வியும் அரசரதுபெருஞ்செல்வமும் உண்டாவதற்கு, வேளாளரதுமேழியே காரண மென்றவாறு. “உழவினார் கைம்மடங்கினில்லை விழைவதூஉம், விட்டேமென்பார்க்கு நிலை” என்ற திருக்குறளையும், “அவர் [உழுவோர்] உறுப்புமாத்திரமாயகை வாளாவிருப்பின் உலகத்து” இம்மை, மறுமை, வீடென்னும் பயன்கள் நிகழா” என்ற பரிமேலழகருரையையுங் காண்க. வேளாளர் விளைவிக்கின்ற நெல் அந்தணர்செய்கின்ற யாகத்திற்குப் பல வகையாக உதவுதலாலும், அரசர்க்குப் பெரும்பொருள் அவ் வேளாளர் நிலத்தைவிளைவித்தற்காக இறுக்கும் அரசிறையால் உண்டாதலாலும், “வேள்விகளும் பெருந்திருவும் பெருக்காளர் மேழியால் விளையும்” எனக் கூறினார். ஊழிபேரினும்பெயரா உரை யுடைய பெருக்காளர் — வாய்மைதவறாதவ ரென்றபடி. இதனை, “மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள், கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை, யாறணிசெஞ் சடைத் திருவா லங்காட் டப்ப னண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ் மெய்ப், பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற் பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ” என்று உமாபதி சிவாசாரியரது சேக்கிழார் புராணத்தால் அறிக. ஈற்றடிமுற்றுமோனை; (அதாவது — ஓரடியின் எல்லாச்சீர்களிலும் மோனை வருவது.) வாழி — அசை: வாழ்தலையுடைய எனினுமாம். வேள்வி, வேள் — பகுதி, வி — விகுதி: அது — இங்கு, யாகத்தைக்குறித்தது. ஆழி — ஆஜ்ஞாசக்கரம். அடல் — அடுதல்தொழில்; அடுதல் — கொல்லுதல். ஊழி — உலகமழியுங் கற்பாந்த காலம். பேரின் — பெயரின் என்பதன் மரூஉ. பெயராஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். உரை — பலராலும் உரைக்கப்படுவது எனப் புகழ்க்குக் காரணக்குறி; செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்டபெயர். பெருக்கு — அருட்பெருக்குமாம். விளைவது — தொழிற்பெயர். அலால் = அல்லால்: எதிர்மறைக் குறிப்புவினையெச்சம். — (4)
பொருளடக்கம் | 3. அலப்படைச்சிறப்பு | 5. ஊற்றாணிச்சிறப்பு | அகெடமி