pATal03
pATal02.html
pATal03.html
pATal04.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
3. அலப்படைச்சிறப்பு
அலம்+படை = அலப்படை: அலமாகிய படையென விரியும்: இருபெயரொட்டுப்பண்புத்தொகை. அலம் — ஹலமென்ற வடசொல்லின் திரிபு: கலப்பையென்பது, பொருள். படுக்கவைத்துத் தொழில்செய்தற்கு உரிய கருவியாயிருத்தலால், இது, இப்பெயர் பெற்றதுபோலும். அலப்படைச்சிறப்பு — அலப்படையினுடைய பெருமை.
3. அலப்படைச்சிறப்பு.
குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே.
(இ—ள்.) குடை ஆளும் முடி வேந்தர் — (தமது) வெண்கொற்றக்குடை நிழல்செய்யும்படி (உலகத்தை) அரசு ஆள்கின்ற கிரீடத்தையணிந்த அரசர்கள், கொலை — கொல்லுதல் தொழிலை யுடைய, யானை — யானைகளும், தேர் — தேர்களும், புரவி — குதிரைகளும், படை ஆளும் — ஆயுதங்களையுய காலாட்களும், இவை நான்கும் —ஆகிய இந்தச்சதுரங்கசேனைகளையும், படைத்து உடையர் ஆனால் — நிறையப் பெற்றுள்ளாராயினும், என் — (அவ்வரசர்கட்கு அச்சதுரங்கசேனைகளால்) என்ன பிரயோசனம்? மடைவாளை வரும் பொன்னி வளம் நாடர்தங்கள் — நீர்மடைகளிலே வாளை மீன்கள் பாய்ந்து செல்லப்பெற்ற காவேரியினாற் செழிப்படைந்த நாட்டையுடைய வேளாளரது, அலம் படைவாளை கொண்டு அன்றி — கலப்பையினுடைய வாட்கட்டையை உதவியாகக் கொண்டல்லாமல், பகை அறுக்க மாட்டார் — தங்களது பகைவர்களை அறுத்தொழித்து வெற்றிபெறமாட்டார்கள்; (எ - று.)
அரசரது போர்வாளுக்கு வேளாளரது அலப்படைவாளே கூர்மையையும் வலிமையையும் தருமென்பது, கருத்து. எல்லா வுயிர்க்கும் உடம்பை நிலைபெறச்செய்யும் உணவைத் தருதற்கு இன்றியமையாத விளையுளைத்தருகிற அருந்தொழிலாகிய உழவுத் தொழிலுக்குக் கருவியாயிருக்கின்ற வேளாளரது அலப்படை இல்லாவிடின் உணவின்றிச் சதுரங்கசேனைகளும் மிகவருந்துமாதலின், அப்போது, அவற்றையுடைய அரசர்கட்குப் பகையறுக்கும் வலிமையும் குன்றும்; அதனால், பகையறுக்குந்தொழிலும் அரசர்கட்கு நடவாதென்க. இங்கு, அரசர்கட்குச் சதுரங்க சேனைகளிருந்தும் வேளாளரது அலப்படைவாளின் துணை இல்லாவிடின் பகை யறுக்கமாட்டாமையாகிய குறைவு உண்டாகு மெனக் கூறியிருத்தலால், இன்மை நவிற்சியணி; இது, வடமொழியில் விநோக்தி யெனப்படும். “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க்காண்ப, ரலகுடை நீழலவர்” என்ற திருக்குறளையும், “தம்மரசனுக்குக் கொற்றம்பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர்” என்று பரிமேலழகர் கூறிய விசேடவுரையையும் காண்க; “இரப் போர் சுற்றமும் புரப்போர்கொற்றமும், உழவிடைவிளைப்போர்” என்ற சிலப்பதிகாரமும் “பொருபடைதரூஉங் கொற்றமு முழுபடை, யூன்றுசான்மருங்கினீன்றதன் பயனே” என்ற புற நானூறும் இங்குக் காணத்தக்கன.
சோழநாட்டிலுள்ள திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த வேளாளராகிய சடையப்பமுதலியார் தம்மையாதரித்ததுபற்றி அவரைப் புகழவேண்டுமென்ற கருத்தோடு கம்பர் இந்நூலைச் செய்தனராதலால், அவரைக்குறிக்குமாறு “பொன்னிவளநாடர்” எனக் கூறின ரென்பர்; இனி, “சோழவளநாடு சோறுடைத்து” என்றபடி சோழநாடானது தமிழ்நாட்டினுள் நீர்வளம்பெற்றுப் பயிர் விளையுளுக்குச் சிறந்துநிற்றலால், அங்குவாழும் வேளாளரை “பொன்னிவளநாடர்” எனக் கூறின ரெனினுமாம். பொன்னிவள நாடு — சோழநாடு; காவேரி பாயப்பெற்ற வளப்பமுள்ள நாடென்க. வேந்தர் பகையறுக்கமாட்டாரென இயையும். அலப்படைவாளென்றது — வடிவு மாத்திரத்தாலன்றி, நிலத்தையறுத் தல் தொழில் தன்மையாலும், விளையுளை யுண்டாக்கி அதன் மூல மாகப் பகைவரது செருக்கை யறுத்தொழித்தலாலு மென்க; உருவகம்: ("செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு, மெஃக தனிற்கூரியதில்," "செய்கபொருள் யாருஞ் செறுவாரைச் செறு கிற்கு, மெஃகு பிறிதில்லை என்பன இங்கு நோக்கத்தக்கன.) தமது குடிகளுக்கு ஒருவகைத்தாபமும் வரவொட்டாது நீதிதவறாத அரசரது ஆளுகையைக் குடையென்றல், மரபு.
“கொலை” என்றது — யானை, தேர், புரவி ஆள் என்ற நான்கிற்கும் அடைமொழி. படை — பகைவரைப்படுத்தற்குக் கருவியானது; காரணப்பெயர்: (படுத்தல் — அழித்தல்.) படை — வில், வாள், வேல் முதலியன. யானை, தேர், புரவி என்ற அஃறிணைப்பெயர் மூன்றும், “ஆள்” என்ற உயர் திணைப்பெயர் ஒன்றும் விரவி, மிகுதியினால் “இவை நான்கும்” இன அஃறிணைமுடிபைப் பெற்றன; திணைவழு வமைதி. (நன் - பொது - 27.) யானை, தேர், புரவி படையாளும் பெயர்ச்செவ்வெண்: ஈற்றில் எச்சவும்மைபெற்றுநின்றது; [நன் இடை - 8.] நான்கும், உம் — இனைத்தென்றறிபொருளில் வந்த முற்றும்மை. என் — அஃறிணையிருபாற்குமுரிய எவனென்னும் வினாவினைக்குறிப்புமுற்றின் இடைக்குறை. மடை — நீர்பாயும் வழி. வாளை — மீனின்சாதிபேதம்; ஆழமான நீர்நிலையிற் பயில்வது. பொன்னைக்கொழித்துக்கொண்டு வருதலால், காவிரிநதிக்குப் பொன்னியென்று ஒருபெயர். வாளைக்கொண்டன்றிப் பகையறுக்க மாட்டார் — இரண்டு எதிர்மறைகள், ஒருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்தின. அன்றி — எதிர்மறைக்குறிப்புவினையெச்சம்; றி — விகுதி, பகை — பகைவர்க்கு, பண்பாகுபெயர். ஏ — ஈற்றசை. — (3)