pATal02
pATal01.html
pATal02.html
pATal03.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
2. உழவுச்சிறப்பு
கீழ் உழவுநாட்சிறப்புக் கூறிய கவி, இதனால் அங்ஙனம் நன்னாட் கொண்டு செய்யப்படும் உழவுத்தொழிலின் சிறப்பைக் கூறுகின்றா ரென்க: இத்தொடர் - உழவினுடைய சிறப்பு என விரியும்.
2. உழவுச்சிறப்பு.
நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்க்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கொளமாட்டார் போர்வேந்த ரானோரே.
(இ—ள்.) நீர் விழா கொள வளர்ந்த நிலம் எல்லாம் — நீர்ப் பெருக்கைக் கொள்வதனால் (வளப்பத்தோடு சிறக்கின்ற பயிர்) விளைகின்ற நிலம்முழுவதிலும், தம்முடைய சீர் விழா கொள — தம்முடைய புகழ்ச் சிறப்பு எங்கும் பரவும்படி, விளக்கும் - விளங்கச்செய்கின்ற, திரு விழா பெருக்கு ஆளர் —செல்வச்சிறப்புப் பெருகுதலைக்கொண்டவரான வேளாளர், ஏர் விழா கொளின் அன்றி — ஏர்கொண்டு உழுதலாகிய விழாவை மேற்கொண்டா லல்லாமல், போர் வேந்தர் ஆனோர் — போர்செய்யுந்தொழிற்கு உரியவரான அரசர்கள், எறுழ் கரி தேர் மா படையால் — வலிய யானை தேர் குதிரை காலாட்படை என்ற இவற்றால், போர் விழா — போர்புரிதலாகிய திருவிழாவை, கொள் மாட்டார் — மேற்கொள்ளமாட்டார்; (எ - று.)
அரசர் தாம் நால்வகைப்படையும் மிக்குள்ளாராயினும், உலகத்தில் வேளாளர் ஏர் விழாக்கொள்ளாவிடின் உண்ணுதற்கு உணவு விளையாமையால் பசி மிகு மாதலின், தம்முடைய வீரங் குன்றப் போர்த்தொழிலிற் செல்லமாட்டாரென்பதாம். அரசரைக் கூறியதன் உபலட்சணத்தால் அந்தணர் முதலியோரும் தத்தம் தொழிலாகிய வேதமோதுதல் முதலிய தொழில்களைப் புரியா ரென்பதும் பெறப்படும். விழா-காண்போர்க்கு விழைவை [விருப்பத்தை] யுண்டாக்குவது என்று காரணப்பொருள்படும், ஆகவே, அச்சொல் — நான்கடியிலும், ஏற்றவாறு பெருக்கு சிறப்பு மகிழ்ச்சியோடு செய்யுந்தொழில் எனக் கருத்துக் கொள்ளக் கிடந்தது.
நிலம் — நிற்பதுபோலத்தோன்றுவது எனக் காரணப் பொருள்படும். சீர் — சீர்மையென்ற பண்பினடி. ஏர் — ஏராற்செய்யும் உழவுக்கு ஆகுபெயர். அன்றி — அன்மையென்னும் பண்பினடியாகப் பிறந்த எதிர்மறைக்குறிப்பு வினையெச்சம். “எறுழ் வலியாகும்” என்பது, தொல்காப்பியத்து உரியியற் சூத்திரம். கரி — கரீ: கரத்தையுடைய விலங்கு: கரம் — கை ; இங்கே, துதிக்கை. எனவே, யானை யாயிற்று. பெருக்கு — பெருகு என்னும் முதனிலைதிரிந்த தொழிற் பெயர். கரி, தேர் மா என்பனவற்றால், கஜ, ரத, துரகங்கள் கூறப் பட்டதனால், படை - காலாட்படையாயிற்று. — (2)