pATal01
pAyiram.html
pATal01.html
pATal02.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
நூல்.
1. உழவுநாட்கோடற்சிறப்பு.
இத்தொடர் உழவுத்தொழிலைத் தொடங்குதற்கு நல்ல நாளைப் பார்த்தலின் சிறப்பென்று பொருள்படும்.
1. உழவுநாட்கோடற்சிறப்பு.
சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரை நீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்குங்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே.
(இ—ள்.) கார் — மேகமானது, மங்கலம் பொழியும் — (உலகிற்கு) நன்மையுண்டாகும்படி பொழிகின்ற, பருவத்து ஏ — காலத்திலே, கார்ஆளர் — வேளாளர், (தம்முடைய), ஏர் மங்கலம் பொழிய — ஏர்கொண்டுசெய்யும் உழவுத்தொழில் நன்குபலிக்கு மாறு, இனிது உழ நாள் கொண்டிடின் — இனிதாகிய உழவுக்குரிய நல்ல நாளைப்பார்த்து மேற்கொண்டாராயின், சீர் மங்கலம் பொழியும் தெள் திரை நீர் கடல் — சிறந்த (சங்குமுதலிய) மங்கலப் பொருளை மிகுதியாகத்தருகின்ற தெளிவாகிய அலைநீரைக் கொண்ட கடல், புடைசூழ் — நாற்புறமுஞ் சூழப்பெற்ற, பார் — இந்தப் பூமியானது, மங்கலம் — நல்லவளப்பமுள்ள விளைச்சலை, பொழியும் — மிகுதியாகத் தரும்; (அங்ஙனம் பூமி மிக்கபலனை விளைத்தலால்), பல் உயிர்உம் — (உலகத்திலுள்ள) பலவகைப் பட்ட ஜீவபிராணிகளும், செழித்து ஓங்கும் — செழிப்பாக வளர்ச்சி யடையும்; (எ - று.)
மழைபெய்யும் பருவத்தைச் சோதிடத்தாலுணர்ந்து நல்ல நாள் பார்த்து உரியமுறைப்படி வேளாளர் பொன்னேர் பூட்டின், அவர் நல்ல நாளில் உழவுதொடங்கியதன் பயனாகப் பூமி மிக்க விளைச்சலைத் தர அதனால் உலகத்துயிர்கள் நன்குஉண்டு செழித்து நிற்குமென்பதாம். மங்கலம் என்ற ஒரே சொல் பல பொருளில் பலமுறை வந்தது — சொற்பின்வருநிலையணி. தெண் திரை — பண்புத் தொகை. திரைநீர் — வேற்றுமைத் தொகை. உழவு என்ற சொல் — உழ எனவிகாரப்பட்டுவந்தது. இனி, உழ என்பதைச் செயவெனெச்சமாகக்கொண்டு உழ — உழுமாறு, இனிது நாள் - இனிதான நாளை, கொண்டிடின் எனினுமாம். மங்கலம் — வடசொல். — (1)