pATal05
pATal04.html
pATal05.html
pATal06.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
5. ஊற்றாணிச்சிறப்பு
ஊற்றாணி — கலப்பையில் ஏர்க்காலைச் சேர்க்குமிடத்தில் அது உறுதியாயிருக்குமாறு ஊன்றுதலையுடைய மரத்தாலியன்ற ஆணி.
5. ஊற்றாணிச்சிறப்பு.
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரிவராலே தொல்லுலகம் நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே.
(இ—ள்.) நீற்றோனும் — (உடம்பெங்கும்) விபூதியைத்தரித்த சிவபெருமானும், மலரோனும் — (திருமாலின்) நாபீகமலத்திலே தோன்றிய பிரமதேவனும், நெடியோனும் — (மாவலியை வலியடக்கத் திரிவிக்கிரமனாய்) நீண்டவனான திருமாலும், என்கின்ற — என்று சொல்லப்படுகின்ற, தோற்றாளர் — (உலகத்திலே முதற் கடவுள ரென்று சொல்லப்படுமாறு) மிக்குத் தோன்றுதலையுடைய ரான, இவராலே — இக்கடவுளரால், தொல் உலகம் — பழமையான இந்தவுலகம், நிலை பெறுமோ — நிலைபெற்றதாகுமோ? [ஆகாது]; (பின்னை எதனால் நிலைபெற்ற தாகுமெனின்), மாற்றாத — தவறாது பெருகுகின்ற, காவேரி — காவிரிநதிபாயப்பெற்ற, வளம் நாடர் — வளப்பமுள்ள சோழநாட்டிலுள்ளவரான வேளாளர், உழும் — உழுகின்ற, கலப்பை — கலப்பையிலுள்ள, ஊற்றாணி — ஊற்றாணி யானது, உளது ஆயின் — கழன்று விழாது நிலைநிற்குமாயின், (அப்போது), உலகு — இவ்வுலகம், நிலைகுலையாது — தனது நிலையி னின்று அழிந்திடாது; (எ - று.)
சிவன், திருமால், பிரமன் என்னும் மும்மூர்த்திகள் உலகத்தில் மேம்பட்டுத் தோன்றினாலும், இவ்வுலகம் அத்தேவர்களால் நிலை பெறுவதின்று; காவிரிநாட்டில்வாழும் வேளாளரின் கலப்பை யூற்றாணியானது தொழில் புரியும் அந்தக்கலப்பையினின்று கழலாது நிற்குமாயின், அதனால், உணவிற்குஆன நெற்பயிர் விளைந்து உண்ணுதற்குக் குறைவின்றி யிருக்கு மாதலால் வருத்தமின்றி உலகம் நிலைபெற்று நிற்கு மென்க. “புயன்மாறி வான்பொய்ப்பினும் ....... தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி” என்பவாதலால், மாற்றாத காவேரி என்றது. காவேரி — கவேரமலையினின்று பெருகுவதென்றும், கவேரனதுமகளாகத் தோன்றியவ ளென்றும் பொருள்படும்.
நீற்றோன் — விபூதியையணிந்துள்ளவன்: சிவன். தோற்றாளர் — தோற்றுதலை [விளங்குதலை] யாள்பவர். மாற்றாத = மாறாத: குறித்தகாலத்துத் தவறாமற்பெருகுகின்ற என்றவாறு. மாற்றாத என்பதை வளநாடரோடு இயைத்து — இரப்போர்க்கு இல்லை யென்று சொல்லாத [ஈகைக் குணத்தையுடைய] வேளாளர் எனினுமாம். ஆயின் குலையா தென்க. — (5)