ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி இராஜராஜீச்வரத்தில் பறையறைவு பொருளடக்கம் | நூலாசிரியர்
தஞ்சாவூரில் இராஜராஜன் பெரிய கோயிலைத் தோற்றுவித்து அதற்கு ஆண்டுதோறும் பெரிய திருவிழா நடத்த ஏற்பாடு செய்தான். அதை “ஆட்டைப் பெரிய திருவிழா” என்று அழைத்தான். அந்தத் திருவிழாவில் கொடியேற்று நாளன்று “திருப்பறையறைவு” கேட்பிக்கப்பட்டது. “திருப்பறையறைவு” என்றால் என்ன? அது எப்பொழுது செய்யப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்தக் கல்வெட்டைப் பார்ப்போம். தஞ்சாவூர் இராஜராஜீச்வரர் கோயிலில் திருவாய்க் கேழ்வி என்ற பணியை ராஜகேஸரி கோதண்டராமன் என்பவன் செய்தான். இவனுக்கு “ஜயங்கொண்ட சோழ கடிகை மாராயன்” என்றும் பெயர். இவனுடைய இப்பட்டப் பெயர்களிலிருந்து இவன் இராஜராஜனின் பாராட்டுப் பெற்றவன் என்று தெரிகிறது. இக்கோயிலில் “ஆட்டைப் பெரிய திருவிழாவில்” கொடியேற்ற நாளன்று ஐவர் திருப்பறையறைவு செய்ய வேண்டும். ஆடவல்லார் (நடராஜர்) திருமேனி இவ்விழாவில் வீதி உலாவாக மூன்று நாள் எடுத்து வரப்படும். இதில் ஆடவல்லார் வீதி உலாவரும் முதல் நாளன்று ஐந்து பேர் பறையறைந்து “ஆடவல்லார் எழுந்தருளும் நாள் இன்றுள்ளிட்ட மூன்று நாள்” என்று சொல்லவும் வேண்டும். இதற்காக இவன் நாற்பது காசு வைத்தான். இந்தக் காசை வீரநாராயண மங்கலம் என்ற ஊர்ச் சபையார் பெற்றுக் கொண்டு ஆண்டுதோறும் வட்டியாக ஐந்து காசு கோயிலுக்குக் கொடுத்தனர். இந்த ஐந்து காசும் பறையறைவு செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது. இராஜராஜனுடைய 29வது ஆட்சியாண்டில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது கி.பி. 1014வது ஆண்டில் நடை பெற்றது. இக்கோயிலில் பெரிய திருவிழா ஆண்டுதோறும் ஒன்பது நாள்களுக்கு நடைபெறும். பெரிய திருவிழா என்பதைப் பிரும்மோத்ஸவம் என்றும், மகோத்ஸவம் என்றும் அழைக்கிறார்கள். இக்கல்வெட்டிலிருந்து பெரிய திருவிழாவுக்கு முதலில் கொடியேற்றம் நடைபெற்றதும் அன்றுதான் பறையறைவு செய்யப்பட்டது என்றும் அறிகிறோம். இன்றும் உத்ஸவங்கள் தொடக்கத்திற்குக் கொடி ஏற்றம் உண்டு. இந்த மரபை எடுத்துக் கூறும் நூல்கள் ஆகம நூல்களாகும். மகோத்ஸவ விதி என்ற அத்தியாயத்தில் விழாவிற் கான விதிகள் கூறப்படுகின்றன. திருவிழாக்கள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒற்றைப்படை நாள்களுக்குக் கொண்டாடப்படும். இதில் ஒரு நாளுக்கோ, மூன்று நாள்களுக்கோ, ஐந்து நாள்களுக்கோ நடைபெறும் திருவிழாக்களுக்குக் கொடி ஏற்றம் கிடையாது. 7, 9 நாள்களுக்கு நடைபெறும் விழாக்கள் கொடி ஏற்றத்தோடு தொடங்கும். இதைக் “கொடி ஏற்றம்” என்றும், “துவஜாரோஹணம்” என்றும் கூறுவர். பெரிய திருவிழாக்களில் தொடக்கத்தில் கொடிஏற்றம், பேரிகை அடித்தல், பாலிகை இடல் என்ற மூன்றும் இன்றியமையாதவை. கொடிக்கம்பம் எவ்வாறு இருக்க வேண்டும்; கொடித்துணி எவ்வாறு இருக்க வேண்டும் கொடியில் என்ன எழுத வேண்டும்; கொடி எவ்வாறு ஏற்றப்பட வேண்டும் என்ற விதிகள் உண்டு. இதைக் கூறும் ஆகம நூல்கள் கொடியை ஏற்றியவுடன் “பேரிகை” அடிக்க வேண்டும் என்று கூறுகின்றன. “பேரீதாடனம்” என்று வடமொழியில் இதைக் கூறுவர். பேரிகைதானே? மடமட என்று எடுத்து அடித்து விடக்கூடாது. பேரிகை என்பது தெய்வ அம்சம். அதற்கு உரிய வழிபாடு உண்டு. அந்த மரபையும் ஆகம நூல்கள் கூறுகின்றன. அழகாக அலங்கரித்த மண்டபத்திலோ அல்லது கொடிக்கம்பத்தின் அருகிலோ பசுஞ் சாணத்தால் மெழுகி, அந்த இடத்தை இரண்டு பகுதியாகச் செய்ய வேண்டும். ஒன்றில் அஸ்திர தேவரைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மற்றதில் பேரிகை (முரசு) வைக்க வேண்டும். பேரிகையை, அஸ்திர தேவருக்கு முன் வைக்க வேண்டும். பேரிகையை புதிய வஸ்திரத்தால் (துணியால்) அலங்கரிக்க வேண்டும். புண்யாஹம் ஓதி அந்தத் தீர்த்தத்தைப் பேரிகையின் மீது தெளிக்க வேண்டும். பிறகு அத்ரி தேவருக்குப் பூஜை செய்ய வேண்டும். சூலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உண்டு. அவற்றைப் பூஜிக்க வேண்டும். பின்னர் பேரிகை பூசை. பேரிகையின் அதிதேவதை நந்திகேசுவரர். ஆதலின் நந்திகேசுவரரைப் பேரிகையின் நடுப் பகுதியில் பூஜிக்க வேண்டும். அதன் இரு மருங்கும் சூர்யன், சந்திரனையும், கோணத்தில் சண்டிகேசுவரரையும், சுற்றிலும் திசைக்காவலர்களையும் (திக்பாலர்களையும்) பூஜிக்க வேண்டும். பிறகு நந்திகேசுவரருக்கு நைவேத்யம் காண்பிக்க வேண்டும். பிறகு தாம்பூலம் கொடுக்கப்படும். பிறகு எல்லாத் தெய்வங்களையும் ஆவாஹிக்க வேண்டும். 18 கணங்களுடன் ஈசுவரரையும் நக்ஷத்ரங்களையும், புண்ணிய நதிகளையும், சமுத்திரங்களையும், குல மலைகளையும், பாதாளங்களையும், திக்பாலர்களையும், அனைவரையும் அங்கு எழுந்தருளுங்கள் என்று வரவேற்க வேண்டும். பிறகு எல்லா ஜனங்களுக்கும் விழாவும், தீர்த்தமாடலும் நடைபெறும் எனக் கூற வேண்டும். பிறகு பேரிகை வாசிப்பவரை (முரசு அறைபவரை) அழைத்துப் புண்ணிய நீர்த் தெளித்து, அவரது கையில் நீரும் மலர்களும் கொடுக்க வேண்டும். அவரும் பேரிகையில் மலரிட்டு, அதைக் கையில் எடுத்து “திக் தாம் தாளங்களை” வாசிக்க வேண்டும். அப்பொழுது இசையும் நிருத்தமும் நடைபெறும். அதன் பிறகு விருஷதாளம் வாசித்த பிறகு எல்லாத் தாளங்கைளயும் வாசிக்க வேண்டும். தொடர்ந்து எட்டுத் திசைகளிலும், நாட்டிய மகளிர் (சிவ கணிகையர்) எல்லா வாத்யங்களும் இசைக்க நடனமாட வேண்டும். வீணை முதலிய தந்திரீ வாத்யங்களும், முரசு முதலிய தோல் வாத்யங்களும், கஞ்சதாளம் முதலிய கன வாத்யங்களும், குழல் முதலிய துளை வாத்யங்களும் நான்கு வகை வாத்யங்களாகும். இத்துடன் பாடுவார் குரல் இசையும் சேர்ந்த “பஞ்ச மகா சப்தங்கள்” என்று அழைக்கப் படும். இவை இசைக்க பெண்கள் ஆட வேண்டும். இதுவே கொடி ஏற்றியவுடன் நடைபெறும் (பேரிதாடன) “பேரிகை முழங்கும்” விழா. பேரிகை என்பது வடமொழிச் சொல். இதை தொன்றுதொட்டு “பறை” என்று கூறுகிறோம். ஆதலின் “பறை அறைவு” என்பது பேரிகையை முதலில் விதிப்படி அடிப்பது என்னும் விழாவின் அங்கமாகும். இதைத்தான் ராஜராஜீசுவரர் கோயிலில் நடைபெற்ற திருக்கொடி ஏற்றும் நாளன்று “திருப்பறையறைவு கேட்பிக்க” வகை செய்யப் பட்டது. அஜிதாகமம் என்னும் நூல் பேரிகை பூஜை செய்து, உத்ஸவம் பற்றியும், தீர்த்தமாடல் பற்றியும் எல்லா ஜனங்களையும் கேட்பிக்கச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. “உத்ஸவ அவபிருதௌ பஸ்ச்சாத் ஸ்ராவயேத் ஸகலம் ஜனம்” என்று கூறுகிறது. தஞ்சைக் கல்வெட்டு அதே சொல்லைக் “கேட்பிக்கும் கடிகையார்” என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அத்துடன் “ஆடவல்லார் எழுந்தருளும் நாள் இன்றுள்ளிட்டு மூன்று நாள் என்ற திருப்பறையறைவு கேட்பிக்கும் கடிகையார்” என்று கூறுகிறது. எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆகம விதிப்படியே தஞ்சாவூர் கோயிலில் செய்யப்பட்டது. இதில் மற்றும் ஒரு சிறப்பும் காணப்படுகிறது. இதற்கு ஏற்பாடு செய்தவன் இக்கோயிலில் திருவாய்க் கேழ்வி செய்தவன் ஆவான். அரசன் ஆணையையோ, கோயிலில் குருவின் மூலம் செய்தியையோ கேட்டுப் பிறருக்கு எடுத்துக் கூறுவது “திருவாய்க் கேழ்வி” என்ற பணியாகும். இது மிக மிகப் பொறுப்பு வாய்ந்த பணி. இவனுக்கு அரசன் இராஜராஜன் “கடிகை மாராயன்” என்ற பட்டம் அளித்திருக்கிறான். இவன் கோயிலில் தான் செய்த பணிக்கு ஏற்ப, வழிபாட்டிலும், திருவிழாவின் போது பிறருக்கு எடுத்துக் கூறும் “பறையறைவு கேட்பிக்க” வகை செய்துள்ளான். இவ்வாறு பறையறைவு செய்பவர்களையும் கல்வெட்டு “கடிகையர்” என்று கூறுவது ஒரு சிறந்த செய்தியாகும்.
பொருளடக்கம் | நூலாசிரியர்