ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி புத்த பிக்குகள் வருகை பொருளடக்கம் | ஒன்பதாம் அங்கம்
இராஜராஜன் ஒரு சிறந்த சிவபக்தன். சிறு வயது முதற்கொண்டே சிவபக்தி நிறைந்தவனாக வளர்ந்தவன். உலகமே வியக்கும் மாபெரும் கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன்; ஆதலின் அவனுக்கு “சிவபாத சேகரன்” என்று பட்டப் பெயர். ஆயினும் அவனுக்கு அனைத்துச் சமயங்களிடமும் அன்பும் ஈடுபாடும் இருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. வைணவம், சாக்தம், சமணம், பௌத்தம் ஆகிய அனைத்துலகச் சமயங்களும் அவன் ஆதரவு பெற்று வளர்ந்தன. திருமலை, இராஜராஜபுரம் (இன்றைய தாதாபுரம்) ஆகிய இடங்களில் அவன் காலத்தில் சமணக் கோயில்கள் எடுக்கப்பட்டு, அவன் அளித்த நிவந்தங்கள் உள்ளன. அவன் காலத்துக்கும் முன்பிருந்தே நாகப்பட்டினம் மிகச் சிறந்த பௌத்தத் தலமாகத் திகழ்ந்தது. இராஜராஜனுக்கும் முந்நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் இராஜசிம்ம பல்லவனின் அனுமதியுடன் இங்கே சீன யாத்ரீகர்களுக்காக ஒரு பௌத்த விஹாரம் கட்டினான். இன்றைய மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, ஜாவா ஆகிய கீழை நாடுகள் “ஸ்ரீ விஜயம்” என்ற பெயரில் விளங்கின. மலேசியாவின் பகுதி “கடாரம்” என்று அழைக்கப்பட்டது. இராஜராஜன் காலத்தில் ஸ்ரீவிஜய நாட்டைச் சூளாமணிவர்மன் என்ற அரசனும், அவனுடைய அருமை மகன் ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன் என்பவனும் ஆண்டார்கள். ஸ்ரீமார விஜயோத்துங்கன் தன் தந்தையின் பெயரால் இராஜராஜனின் அனுமதி பெற்று, நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விஹாரம் கட்டினான். அதற்கு “சூளாமணிவர்மம் விஹாரம்” என்று பெயர். ஸ்ரீவிஜய அரசனின் தூதுவர்கள் இராஜராஜனின் அவைக்கு வந்தனர். அவர்களுடன் பௌத்தபிக்களும் வந்திருக்க வேண்டும். இராஜராஜன் நாகப் பட்டினத்தில் சூளாமணிவர்மன் விஹாரம் கட்ட அவர் களுக்கு அனுமதி அளித்ததோடு, அதில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்த பகவானுக்குப் பூஜை, திருவிழாக்களுக்காக ஆனைமங்கலம் என்ற கிராமத்தைத் தானமாகவும் அளித்தான். அத்துடன் தன் பெயரால் அங்கு இராஜராஜப் பெரும் பள்ளி என்று ஒரு பௌத்தப் பள்ளியும் நிர்மாணிக்க வகை செய்தான். இந்தச் செய்தியை இராஜராஜன் ஒரு செப்பேட்டில் பொறித்து வைத்துள்ளான். அதை ஆனைமங்கலம் செப்பேடு என்று அழைப்பர். அது இப்போது மேலை நாட்டில் லெய்டன் நகரில் உள்ளதால், “லெய்டன் செப்பேடு” என்றும் கூறுவர். நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜய அரசன் பௌத்த விஹாரம் எடுக்க இராஜராஜன் அளித்த அனுமதியை இவ்வங்கம் குறிக்கிறது. பௌத்த பிக்குகள் இராஜராஜனின் அவைக்கு வருகிறார்கள். இராஜராஜனின் அரண்மனை வாயில் பெருமையை அங்குள்ளோர் எடுத்துக் கூறுகின்றனர். (இராகம்-நாதநாமக்கிரியை) வாசலிது வாசலிது ராஜராஜன் வாசலிது; வாசலிது வாசலிது ராஜராஜன் வாசலிது! (வாசலிது) கலைமகளும் அலர்மகளும் கலந்துறையும் வாசலிது; கவிவலவர் நாள்தோறும் களித்திருக்கும் வாசலிது! (வாசலிது) சேரலனும் பாண்டியனும் சேவிக்கும் வாசலிது; இரட்டருடன் ஈழவரும் ஏங்கி இரு வாசலிது! (வாசலிது) சாளுக்கிய மன்னர் சரண் கிடக்கும் வாசலிது; கங்கருடன் காலிங்கர் காத்திருக்கும் வாசலிது! (வாசலிது) ஆடல்புரி மாதருடன் பாடல்மலி வாசலிது; சூதருடன் மாகதரும் சேர்ந்து திகழ் வாசலிது! (வாசலிது பல்சமயப் பெரியோரைப் பணிந்தழைக்கும் வாசலிது சிவசமய நெறியோரைச் சிரம் பூணும் வாசலிது (வாசலிது) பௌத்த பிக்குகள் இராஜராஜனின் ஓலக்க மண்டபத்துக்குள் நுழைகின்றனர். புத்தம் சரணம் கச்சாமி! தம்மமம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! இவ்வாறு மும்மணிகளைக் கூறிக் கொண்டு அரியணை நோக்கிச் செல்கின்றனர். அரியணையில் அமர்ந்திருந்த இராஜராஜன் எழுந்து இறங்கி வந்து பிக்குகளை வணங்கி வரவேற்கிறான். பிக்குகள் இராஜராஜனிடம் சமஸ்கிருத மொழியில் உரையாடுகின்றனர். “சோழ மகா சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகிய இராஜராஜப் பெருமன்னனே! உனக்கு வெற்றியும் சர்வ மங்களமும் உண்டாகட்டும். ஸ்ரீவிஜயாதி பதியும் கடாரத்தின் அரசனுமான ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன் உமக்கு நலமும், வெற்றியும் ஓங்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறான். சோழ நாட்டில் உள்ள நாகப் பட்டினத்தில் பிக்கு சங்கமம் நிறைந்த சாதுக்கள் உள்ள இடத்தில் சூளாமணிவர்மனாகிய தன் தந்தையின் பெயரால் புத்த விஹாரம் நிர்மாணிக்க உமது அருளை வேண்டுகிறான்” என்று கூறுகின்றனர். (இராகம்-ஸரஸ்வதி) பல்லவி ஜயவிஜயீ பவ ராஜராஜன் சோளமகா சாம்ராஜ்ய சக்கரவர்த்தே-ஜய அனுபல்லவி ஸ்ரீ விஜயாதீசோ கடாஹாதிராஜோ ஸ்ரீ மார விஜயோத்துங்க வர்ம்மா பவத: குசலம் விஜயம் யசோ விருத்திம் வாஞ்சயதி-ஐய சரணம் சோள விஷயாந்தர்கத நாகீபட்டனே பிக்ஷசங்க மகா சாது நிவாஸே ஸ்வபிது: சூடாமணி வர்ம்மண: நாம்நா புத்த விஹாரம் நிர்மாதும் பவத: பிரஸாதம் யாசயதி -- ஜய விஜயீ பவ! இந்தப் பாடலில் உள்ள பல சொற்றொடர்கள் ஆனை மங்கலச் செப்பேட்டில் உள்ளவை. இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இராஜராஜன் “சுகதரான புத்த பகவானின் சமயத்தைப் பின்பற்றுகின்ற சாதுக்களே! உங்கள் வரவு மங்களத்தை உண்டாக்கட்டும். சாக்கய சிம்மரின் (புத்தரின்) உபதேச மாலைகள் உலகில் நன்மையை எப்பொழுதும் அளிக்கட்டும். “இங்கு விஹாரம் நிர்மாணிக்க நமது நண்பருக்கு (கடாரத்தரசருக்கு) அனுமதி நம்மால் வழங்கப்படுகிறது. இங்கே பிரதிஷ்டிக்கப்படும் பரமார்த்த சத்யமான பரிநிர்வாணம் அளிக்கும் புத்த பிரானுக்குப் பூஜை உத்ஸவங்கள் முதலிய தடையின்றி நடத்த ஆனைமங்கலம் என்ற கிராமம் எம்மால் அளிக்கப்படுகிறது”. “செல்வத்தின் இருக்கையான மேரு மலையைக் காட்டிலும் இங்கு செல்வம் அதிகரிக்கட்டும். மிகவும் உயர்ந்த வேலைப்பாடுடைய தோரணங்களால் அலங்கரிக்கவும் எம் பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்பது நிர்மாணிக்கப் படட்டும். இப்பணிக்கு அமுதன், இராமன், மூவேந்த வேளான் முதலியோரை அதிகாரிகளாக நியமிக்கிறேன்” என்று கூறினான். (இராகம்-பந்துவராளி) பல்லவி சோபனம் பவது பவாகமம் சுக்தமதானுஸாரி சாதவோ (சோபனம்) அனுபல்லவி சாக்யசிம்ம உபதேச மாலிகா மங்களானி புவி திசது சர்வதா (சோபனம்) சரணம் அனுஞாதோ அஸ்மத் சகா அத்ர விஹார நிர்மாணே பரமார்த்த சத்ய பரிநிர்ப்பாண தாயினே பிரதிஷ்டிதஸ்ய பூஜோத்ஸவாதி புரஸ்கிருதேவன் சம்பிரதத்தோ அஸ்மாபி: ஆனைமங்கல கிராம: (சோபனம்) அதரீ கிரியதாம் கனககிரி விபவம் அலங்கிரியதாம் துங்க விசித்ர தோரணை: நிர்மாப்யதாம் அஸம்ந் நாம்நா ராஜராஜப் பெரும் பள்ளி! அதிக்ரியதாம் அமுதோ ராமோ மூவேந்த வேளஸ்ச (சோபனம்) இப்பாடலில் உள்ள சில சொற்றொடர்கள் ஆனை மங்கலம் செப்பேட்டில் உள்ளவை. ஸ்ரீவிஜய அரசர் மகாயான பிரிவைப் பின்பற்றினார். நாகார்ஜுனர் வகுத்த விஞ்ஞானவாதம் என்ற தத்துவம் இங்கே சிறந்திருந்தது. அத்தத்துவத்தில் குறிப்பாகப் பயன்படுத்தும் சொல்லே “பரமார்த்த சத்யம்” என்பது. “பரிநிர்வாணம்” என்பது பிராகிருத மொழியில் “பரிநிப்பானம்” என்று வரும். அமுதன் தீர்த்தகரன் என்பவனும் கிருஷ்ணன் இராமன் என்பவனும் மதுராந்தக மூவேந்த வேளான் என்பானும் இதற்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் அமுதன் என்பவன் இராஜராஜன் இட்ட ஆணையை ஓலையில் எழுதினான். இவன் நித்த வினோத வளநாட்டு ஆவூர் கூற்றத்து விளத்தூரைச் சேர்ந்தவன். இராமன் இராஜராஜனுடைய சேனாபதி. கிருஷ்ணன் ராமன் என்பது இயற்பெயர். மும்முடிச் சோழ பிர்மம மாராயன் என்பது பட்டப் பெயர். இவன் உய்யக் கொடார் வளநாட்டு வெண்ணாட்டுக் கோளரந்தக சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவன். இவ்வூர் “அமண்குடி” என்றும் அழைக்கப் பெற்றது. கும்பகோணத்துக்கு அருகில் இவ்வூர் உள்ளது. கிருஷ்ணன் இராமனே இராஜராஜன் ஆணைப்படி தஞ்சைப் பெருங்கோயிலைச் சுற்றித் திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான். தன் ஊரான அமண் குடியில் இராஜராஜன் பெயரால் “இராஜராஜேச்வரம்” என்னும் கோயிலை எடுத்தான். இப்பெரும் சேனாபதி ஆனைமங்கலம் செப்பேட்டில் “ஓலை நாயகம்” எனக் குறிக்கப்படுகிறான். அதாவது, இந்தப் “புத்த விஹாரத்”துக்கு ஆனைமங்கலம் கொடுத்த ஆணையை அமுதன் தீர்த்தகரன் ஓலையில் எழுத அதை மேற்பார்வையிட்டான். இதை ஒப்பிட்டுப் பார்த்தான். மதுராந்தக மூவேந்த வேளான். இவனுக்கு உத்தம சோழன் என்பது இயற் பெயர். இவன் அருமொழிதேவ வளநாட்டு நென்மலி நாட்டுப் பருத்திக் குடியைச் சேர்ந்தவன். இவர்கள் தவிர, மேலும் பல அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றனர். இவ்வாறு சிறப்புப் பெற்ற நாகப்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் ஏராளமான பௌத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. இராஜராஜனது விரிந்த மனப்பான்மைக்கு இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. (எட்டாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | ஒன்பதாம் அங்கம்