ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி தஞ்சைப் பெருங்கோயில் எடுத்தல் பொருளடக்கம் | இராஜராஜனின் செயல்திறன்
அருண்மொழிவர்மன் என்னும் இயற்பெயருடன் தோன்றி அரசர்கட்கெல்லாம் அரசனாகி, “இராஜராஜன்” என்னும் பெயருடன் ஆண்ட பெருமன்னன் ஈடு இணையிலாப் பேராளனாக எல்லாத் துறைகளிலும் சிறந்தான். தன் நாடு முழுவதும் சீராக அளந்து “உலகளந்த சோழனாக” விளங்கினான். மேற்கொண்ட போர்களில் எல்லாம் வெற்றி கண்டு “ஜெயங்கொண்ட சோழனாக”த் திகழ்ந்தான். கலைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டு “நித்தவிநோதனாக”, “ராஜவித்யாதரனாக”த் திகழ்ந்தான். கல்வியில் சிறந்தோனாகப் “பண்டிதசோழனாக”த் திகழ்ந்தான். மறைந்த திருமுறைகளை மீண்டும் கண்டு “திருமுறை கண்ட சோழனாக”த் திகழ்ந்தான். ஜனங்களின் அன்புக்கு உகந்தவனாக “ஜநநாதனாக” வாழ்ந்தான். இவை அனைத்தும் வரலாற்றிலிருந்து அறிகிறோம். அவனது உள்ளக் கிடக்கைகள் எல்லாம், திறன் எல்லாம், ஒவ்வொரு பணியையும் தானே முன்னின்று நடத்தும் பாங்கெல்லாம் சிறு வயது முதல் சிவபெருமானிடம் கொண்ட பக்தி எல்லாம், செம்பியன் மாதேவியாரும், குந்தவைப் பிராட்டியாரும் புகட்டிய பண்பெல்லாம், “சிவபாத சேகரன்” என்று மக்கள் அழைத்து மகிழ்ந்தவையெல்லாம் புறத்தோற்றமாக என்றென்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்படி அவன் விட்டுச் சென்றதே தஞ்சைப் பெருங்கோயில். அக்கோயில் எடுத்து, அங்கே சிவபெருமானைப் பிரதிட்டை செய்து இராஜராஜீச்வரம் உடையார் என்ற பெயர் சூட்டி நாள் தோறும் வழிபாடும் விழாக்களும் நடைபெற வகை செய்து, வழிபாட்டின் அங்கமாக தேவாரத் திருப்பதிகங்கள் பாடவும், பாடல்களுக்கு ஆடவும் தளிச்சேரிப் பெண்டுகள் நானூறு பெண்களை அமர்த்தியதும், ஆரியம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடல் இசைக்கவும், நாடகம் நடத்தவும், வீணை, குழல் முதலியன இசைக்க வும், அவனும் மற்றோரும் அளித்த செப்புத் திருமேனிகளும் அணிகளும், தங்கத்தாலும் வெள்ளிச் செம்பு ஆகிய வற்றால் அரும் கலங்கள் செய்தளித்ததும் இந்திய நாட்டு மக்கள் என்றென்றும் எண்ணி மகிழ்வுறத்தக்கவை. அவன் பெருங்கோயிலை எடுத்ததை இந்த அங்கம் குறிக்கிறது. இதில் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் கல்வெட்டின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. வரலாற்று நெறியில் பிறழாது பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. அந்தக் கோயிலின் ஆத்மத் துடிப்பைப் பிரதிபலிப்பவை. கோயில் எடுத்தல் இராகமாலிகை (இராகம்-பரசு) பல்லவி கற்கோயில் எடுத்தானே இராஜராஜன் கலைக்கோயில் எடுத்தானே (கற்கோயில்) அனுபல்லவி பொற்கோயில் இதன் நிகர் பூதலத்தில் இல்லை எனச் சொற்கோயில் புனைபவர் எப்போதும் சொல்லும் வண்ணம் (கற்கோயில்) சரணம் விண்ணை அடைந்திட எழுந்தது ஸ்ரீ விமானம் சுற்றி வலம் வரச் சூழ்ந்தது மாளிகை கண்ணைக் கவர்ந்தது கடைவாயிற் கோபுரம் மண்ணுலகே இதற்கு மாதவம் செய்ததென (கற்கோயில்) கண்க வர் ஓவியம் வெண்சுதையில் விளைத்துப் பொன்னாலும் மணியாலும் புனைஅணிகள் படைத்துத் தென்னாட்டிறைவரை தினமும் வணங்கிட (கற்கோயில்) (இராகம்-தன்யாசி) பணிகள் புரிந்திடும் பண்பினர் பலரும் பதிகம் ஒலித்திட பாடல் இசைப்பவரும் நாட்டிய மாடிடும் நானூறு பெண்டிரும் நாளென்றும் விழவினில் நற்பணிகள் புரிய (கற்கோயில்) (இராகம்-காபி) தமக்கையும் தேவியரும் தானைத் தலைவர்களும் தன்னுடனே இணைந்து பணிந்திடும் பாங்களித்து ஊர்களும் நாடுகளும் உவந்து வணங்கிடவும் எல்லோரும் இன்பமாய் ஏத்தி மகிழ்ந்திட (கற்கோயில்) (இராகம்-சாவேரி) என்றென்றும் உந்தமக்கு ஏந்தலே யானடிமை இராஜராஜேச் சுரத்து இனிதுறை எம்மானே நின்றன் திருவடி என்றன் முடியிலென நித்தம் பணிந்து உளம் நைந்து உருகிட (கற்கோயில்) இராஜராஜன் தஞ்சாவூரில் எடுத்தது கற்கோயில். அதைத் “திருக்கற்றளி” என்று கூறுகிறான். அது கற்கோயிலாக மட்டும் இல்லாமல் மாபெரும் கலைக் கோயிலாகவும் திகழ்கிறது. ஏராளமான பொற் கழஞ்சுகள் இந்தக் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதால் பொற்கோயில் என்பதாம். கவிஞர்கள் புலவர்கள் இதற்கு ஈடான கோயில் இல்லை என்னும் வகையில் இது திகழ்கிறது. மூலக் கோயிலை ‘ஸ்ரீ விமானம்' என்று கல்வெட்டு கூறுகிறது. மிகவும் உயர்ந்த கோயிலை 'விண்ணிழி விமானம்' என்பது பண்டைய மரபு. இக்கோயிலை இராஜராஜன் “தக்ஷிண மேரு” என்று அழைத்தான். இங்கு வழிபாடு செய்தவர் “ஈசான சிவபண்டிதர்” என்பவர். அவரே இராஜராஜனுடைய ராஜகுரு. ஆதித்தன் சூரியன் என தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் இந்தக் கோயில் “ஸ்ரீ காரியம்”ஆகப் பணி புரிந்தான். இந்தக் கோயிலில் வேளைக்கார படையினர் நியாயத்தாராகப் பணி புரிந்தனர். பிற வெளிப்படை. (இராகம்-நாட்டை) பல்லவி கல்லிலே வெட்டுக சொல்லிய மொழிப்படி கொடுத்தபரிசை எலப்லாம் (கல்லிலே) அனுபல்லவி நாம் எடுப்பிச்ச ராஜராஜேச்சுரக் கோயில் அடித்தளத்துக் (கல்லிலே) சரணம் யாம் கொடுத்ததும் அக்கன் கொடுத்ததும் நம் பெண்டுகள் கொடுத்ததும் மற்றும் கொடுத்தார் கொடுத்ததும் (கல்லிலே) தாளமும் தட்டமும் தளிகையும் வட்டிலும் கலசமும் பானையும் கொண்ட கிடாரமும் குடமுடனே குறுமடலையும் எண்ணிட்டு (கல்லிலே) இப்பாடல் கல்லில் வெட்டுவித்துள்ள வாசகத்தையே கொண்டு இயற்றப்பட்டது. பொருள் வெளிப்படை. (இராகம்-அடாணா) பல்லவி திருவடி தொழுதானே திரு இராஜராஜேச்சுரப் பரமனின் முன் அட்டி (திருவடி) சரணம் பொன் கொணர்ந்து குவித்தான் பொருள் கொணர்ந்து குவித்தான் அந்நிய தேசங்களை அடிப்படுத்தும் கொடுத்தான் தன்னுடைய பண்டாரத்தைத் திறந்துகொணர்ந்தளித்தான் கண்ணுடை வள்ளலைக் கனிந்து உளத்தால் வாழ்த்தி (திருவடி) நொந்தா விளக்கெரிக்க நற்பசுக்கள் அளித்தான் நந்தாவனங்களுடன் செழுநிலங்கள் அளித்தான் செந்தாமரை நிகர் செம்பொற் கலனளித்தான் தந்தார் பெயரையும் தப்பாதெழுதி வைத்து (திருவடி) இராஜராஜன் தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் இராஜராஜேச்வரமுடைய பரமசுவாமியின் திருவடிகளில் அட்டித் திருவடி தொழுதான் என்று கல்வெட்டு கூறுகிறது. இவற்றை “ஸ்ரீபாத புஷ்பமாக” அர்ப்பணித் தான் என்றும் கல்வெட்டு கூறுகிறது. பண்டாரம் என்பது “பொக்கிஷம்” என்பதாம். தனது பொக்கிஷத்தில் இருந்து ஏராளமான பொன்னையும் முத்துக்களையும் நவரத்தினங்களையும் அள்ளி இக்கோயிலுக்கு அளித்து அணிகலன்களாகவும், பெரும் அடுகலன்களாகவும் செய்து, அவற்றின் எடையையும், அதற்கான செலவுகளையும் கல்லில் வெட்டி வைத்துள்ளான். பல மலர் வனங்களையும், நெல் விளையும் செழுமையான நிலங்களையும் இக்கோயிலில் வழிபாட்டுக்காக அளித்தான். தன் தமக்கை, தேவிமார், தானைத் தலைவர் ஆகிய அனைவரையும் இக்கோயிலுக்குப் பரிசளிக்க வேண்டி, அவர்கள் கொடுத்ததையும் கல்லில் வெட்டி வைத்துள்ளான். (இராகம்-ஷண்முகப்ரியா) பல்லவி இத்தனையும் உந்தன் அருளினில் மலர்ந்தவை என்னமுதாகிய எழில் சுடரே (இத்தனையும்) அனுபல்லவி அத்தனையும் தந்து பக்தியையும் அளித்த விந்தையினை நினைந்து வாழ்த்துகிறேன் அய்யா (இத்தனையும்) சரணம் மண்ணுலகு புரக்கும் மாப்பலம் நீஅளித்தாய் இன்னரசு புரிய தனித்திறனும் அளித்தாய் பண்மிகு பாடலையும் பணிந்தெடுக்க விடுத்தாய் வெண்மதி சூடிய விண்வணர் பெருமானே (இத்தனையும்) இராஜராஜன் மாபெரும் வீரனாகவும் பேரரசனாகவும் திகழ்ந்த போதும், தான் என்னும் அகந்தை அற்று, அனைத்துமே இறைவனின் அருளால் மலர்ந்தது எனப் பக்திப் பெருக்கோடு பணிந்து பரமனைப் பரவினான். அவனது முதிர்ந்த சிவபக்தியின் காரணமாகவே “சிவபாத சேகரன்” என்று பெயர் பெற்றான். அந்தப் பெருமன்னனின் புகழ் அளத்தற்கரியது; போற்றற்குரியது. ஆதலின் அவனுடைய பேராற்றலையும் பெரும் பக்தியையும் கருவாகக் கொண்டு இந்நாட்டிய நாடகத்தைப் புனையும் பேறு இறை அருளால் பெற்றதென்க. வாழ்த்து (இராகம்-மத்தியமாவதி) இராஜராஜனென்னும் இராஜனே வாழி இராஜ வித்யாதர தேவனே வாழி ஜெயங்கொண்ட சோழ சென்னியே வாழி உலகளந்த சோழ உத்தம வாழி பாண்டிய குலாசனி பண்டித வாழி சிவபாதசேகரச் செம்மலே வாழி அருண்மொழித் தேவனே அன்பனே வாழி இராஜராஜேச்வரத் தெய்வமும் வாழியே (ஒன்பதாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | இராஜராஜனின் செயல்திறன்