ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி திருமுறை காணல் பொருளடக்கம் | எட்டாம் அங்கம்
இராஜராஜனது வாழ்க்கையில் மூவர் பாடிய தோவரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் கண்டுபிடித்தது மிகவும் சிறந்த நிகழ்ச்சி என வரலாற்று ஆசிரியர் கூறுவர். கி.பி. 1300 இல் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார் திருமுறை கண்ட புராணம் என இயற்றியுள்ளார். அதன் அடிப்படையில் இப்பகுதியை அமைத்துள்ளேன். இராஜராஜனுக்கு முன்னதாகவே தேவாரத் திருப்பதிகங்களில் சில எஞ்சியிருந்தன. அவை கோயில்களில் பாடப்பட்டன. ஆனால், தேவாரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒரு சமயம் இராஜராஜன் தேவாரப் பாடல் ஒன்று கேட்கிறான். அப்பர் பெருமான் இயற்றிய “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்” என்ற பாடலை அவன் கேட்டதாக நாட்டியத்துக்குக் கொள்கிறோம். அப்பதிகத்தைக் கேட்டவுடன் அவன் உள்ளம் நெகிழ்கிறான். கைகள் இரண்டும் உச்சிமேல் சேர்கின்றன. சிவபெருமானை, ஆடவல்ல அண்ணலை அடிபணிகின்றான். இதுபோன்ற மற்ற பதிகங்களையும் கேட்க விழைகிறான். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே (இது தேவாரம்) இந்தப் பாடலைக் கேட்டதும் இராஜராஜன் மெய்சிலிர்க்கிறான். பக்திப் பரவசம் ஆகிறான். “இந்தப் பாடலை யார் பாடினார்? இன்னம் எவ்வளவு பாடல்கள் இது போல் உள்ளன?” என்று ஆவலோடு கேட்கிறான். (இராகம்-ஆபேரி) பல்லவி யார் பாடினார் இதை யார் பாடினார் பெண்ணே யார் பாடினார் இதை யார் பாடினார் அனுபல்லவி தீராத காதலாலே தேவாரப் பூக்கள் என தேவாதி தேவனது திவ்ய திருவடியை (யார்) சரணம் உள்ளம் நெகிழ்ந்தோட உச்சியில் கரம் சேர எண்ணம் எல்லாம் இறை பக்தியிலே ததும்ப இன்னம் இசைத்த பாக்கள் எத்தனை உண்டு கொலோ அத்தனையும் பருக ஆர்வம் மிகும் வண்ணம் பெண் அளித்த பதில்: (இராகம்-புன்னாகவராளி) நாவுக்கரசுடன் நாவலூராளியும் ஞானக் குழந்தையும் பாடிய பாடல் என்பர் ஆயிரம் உண்டெனினும் ஒன்றிரண்டே உள யாரும் அறிந்திலர் மற்ற மறைந்த இடம் தும்பிமுகத் தேவன் தூய அருள் பெற்ற நம்பி என்னும் பெயரோன் நாரையூர்வாழ் சிறுவன் அம்பிகைப்பாகனை அர்ச்சிக்கும் குலச் செம்மல் தன்னை துணைபெற்றால் நண்ணிடும் பாடல் ஐய இப்பாடல் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடியது என்பர். ஆயிரக்கணக்கில் இப்பாடல்கள் இருந்தனவாம். ஆனால், நமக்கு ஒன்றிரண்டே கிடைத்துள்ளன. திரு நாரையூரில் சைவ வேதியர் குலத்துப் பிறந்த சிறுவன் நம்பியாண்டார் நம்பி என்பவன் உள்ளான். அவனுக்குப் பொல்லாத பிள்ளையாரின் அருள் உண்டு என்பர். அச்சிறுவனை அடைந்தால் பாடல்கள் உள்ள இடம் காணலாம் என்று பெண் கூறுகிறாள். நம்பியாண்டார் நம்பி, பிள்ளையார் அருள் பெற்றது. (இராகம்-வஸந்தா) பல்லவி பொல்லாத பிள்ளையே வா, வா வா பொல்லாத பிள்ளையே வா அனுபல்லவி கல்லாத எந்தனது சொல்லால் பரவிடினும் தள்ளாமல் பூஜை ஏற்க நில்லாமல் இங்குடனே (பொல்லாத) சரணைம் தப்பாமல் பூஜை செய்ய அப்பாவும் சொல்லிப் போனார் எப்போதும் போல இந்த பூப்போது நான் கொணர்ந்தேன் என்பேரில் அன்பு கொண்டு இங்கே அமுது உண்டு இப்போது என்னைக் காக்க முன்போல் எழுந்தருளி (பொல்லாத) (இராகம்-சாமா) ஏன் இன்னும் உண்ணாமல் பிள்ளையே நீ இருக்காய் யான் செய்த பூஜையில் ஏதேனும் பிழை உண்டோ? யானை முகத்தோனே யாது யான் செய்தல் வேண்டும் போனகம் போதாதோ பெருச்சாளி ஏற்காதோ பவன் (பொல்லாத) எந்தையே பள்ளிக் கேகில் தேசிகன் அடித்திடுவன் சந்தமறைக் கலைகள் நீயே புகட்டிடுவாய் அந்தமற அனைத்தும் உன் வாயால் கேட்டருள வந்ததிப்போ தருணம் தொந்திக் கணபதியே (பொல்லாத) இராஜராஜன் நம்பியை வேண்டுவது (இராகம்-பைரவி) பல்லவி வேதியனே உன்னை வேண்டி இங்கணைந்தேன் விண்ணப்பம் ஒன்றுளது விளம்பிடுவேன் கேள் (வேதியனே) அனுபல்லவி ஆதியும் அந்தமும் அளந்தறியாச் சுடரை அடியவர் பாடிய தறிந்திலமே நாதமுழுப் பொருளை நமனை உதைத்த வரை நற்றமிழ் இசையினால் நாளும் பரவிடவே (வேதியனே) சரணம் தும்பிக்கை பிள்ளையைத் துதித்து தெரிந்துரைப்பாய் மூவர் பதிகங்களும் மறைந்த இடம் தனையே சம்பு பரன் அருள் சகம்எங்கும் நிலவிட சந்தத் தொகைதனைக் கண்டு அறிந்திட (வேதியனே) இராஜராஜன் வேண்டுதலை ஏற்று நம்பியாண்டார் நம்பி பிள்ளையாரை வேண்டுகிறார். வளவர்குல வேந்தனது வார்த்தை தனைக் கேட்டு களபமுகக் கடவுளது கழல்களையே சூடி தெள்ளமுதத் திருப்பதிகம் உள்ள இடம் காட்ட வள்ளல்களை எழுந்தருள வேண்டி எதிர்நின்றான் நம்பியும் இராஜராஜனும் பிள்ளையாரின் எதிரில் பக்திப் பெருக்கோடு சேவித்து நிற்க, பிள்ளையார் அளித்த பதில்: (இராகம்-மாண்டு) (வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் என்ற மெட்டு) தில்லைத் திருப்பதி தன்னை அடைந்தவர் திருமறை கண்டிடலாம் எல்லையிலானந்த வெளியினில் ஆடிடும் அண்ணலைக் கண்டிடலாம் நாதஉருவினில் நானிலம் தோன்றிடும் நேர்மையைக் கண்டிடலாம் மாதவன் உருவினில் புரந்திடும் பாங்கினை கரந்தனில் கண்டிடலாம் ஊழியனைத்தையும் ஒடுக்கிட எரித்திடும் கொழுந்தினைக் கண்டிடலாம் ஆழ்ந்த அறிவினை மயக்கிடச் சூழ்ந்திடும் மறைவினைக் கண்டிடலாம் தூக்கிய திருவடி துயர்கெடத் துடைத்திடும் திருவருள் கண்டிடலாம் யோக முனிவரர் செவியுற ஒலித்திடும் சிலம்பினைக் கண்டிடலாம் மாதவர் பாடல் பகர்ந்திடும் உண்மை ஈதென அறிந்திடலாம் மாயமீதறியா மோகநிலை போக மன்றினை அடைந்திடலாம் அங்கு நடராஜப் பெருமானின் சபையின் பின்னே உள்ள பிள்ளையார், எதிரில் உள்ள மூடிய அறை ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறார். அவ்வறையில்தான் காணாமற்போன திருப்பதிகங்கள் இருந்தன அம்பலத்துள் ளாடுகின்ற ஐயரது பின்னே அய்ங்கரனும் அமர்ந்து தனதருட் கரத்தை நீட்டி அன்பர் மனம் இன்பமுற நம்பியினை நோக்கி இங்குளது அருட்பதிகம் அறிந்திடுவீர் என்றார் திருப்பதிகங்கள் இருந்த அறை மூடிக்கிடந்தது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தோன்றியதால் தோவரப் பதிகங்கள் கிடைத்தன. மூவரும் வந்ததால் தெய்வப் பதிகங்கள் கிடைத்தன என்பதை உலகுக்கு எடுத்துரைக்கவும், அவர்களுக்கே அப்பெருமை கிட்டவும் தில்லை மூவாயிரப் பெரியோர்கள் “மூவர் வந்தால் பதிகம் கிட்டும்” என்றனர். இது ஒரு தத்துவம். (இராகம்-நாதநாமக்ரியை) எல்லையில் இசைப் பெருக்கை இயம்பிய மூவர் தாமும் ஒல்லையில் உவந்தெழுந்து உதிப்பரேல் ஓலை இட்டு தொல்லை நாள் அடைத்த தாழும் திறந்திடக் காணும் என்ன தில்லையின் தகவறிந்தோர் தெரித்தனர் மன்னன் முன்னே பதிகங்களை அறியும் நுழைவாயில் மூவரே என்பதை அறிந்து பேருவகை அடைந்தான் மன்னன். அவற்றை இயற்றிய பெரியோரை வணங்கிடில் அருட்கிட்டும் என்று கண்டான். அம்பலக் கூத்தனுக்கு விழா எடுத்தான். ஆடவல்ல பெரு மானுக்கு வீதி உலா எடுத்து அத்துடன் மூவர் படிமங்களையும் உலாவாக எடுத்து வந்தான். மூவரும் உலா வரும் காட்சி (இராகம்-ஆனந்த பைரவி) பல்லவி மூவர் வந்தாரய்யா மூவர் வந்தாரே மூவுலகும் உய்ய முத்துச் சிவிகை ஏறி சரணம் ஆடல் மலி பெண்கள் ஆலத்தி ஏந்திட பாடல் இசைப்பவர் பல்லாண்டு பாடிட காளமும் சங்கமும் காதம் ஒலித்திட தாளமும் பேரியும் தித்தி திகும்என (மூவர்) ஆடலரசினைப் பூவரசேத்திய ஆதி உலாப் போன்ற ஆனந்த விழவினில் நாடிய பாடலை நானிலம் ஏற்றிட மூடிய வாயிலை முற்றிலும் திறந்திட (மூவர்) மூவர் திருமேனிகளும் அறையின் முன் வந்ததும் கதவு திறந்தது. உள்ளே பதிகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த சுவடிகள் இருந்தன. ஆனால் கரையான் புற்று மலையென மூடிக்கிடந்தது. மனம் வருந்தினான் மன்னன். சுவடிகளைச் செல்கள் தின்றிருந்தன. அக்கரையான் புற்றின் மீது தைலம் ஊற்றி புற்றை அகற்றினான். பல சுவடிகளை கரையான் அரித்து இருந்தது. ஆதலால் பல பாடல்கள் மறைந்தன. எஞ்சிய சுவடிகளைக் கரத்தில் எடுத்தான். கண்களில் ஒற்றிக் கொண்டான். பதிகம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினான். “அரனே இதுவும் உன் விளையாடலோ!” என்றான். (இராகம்-ஷண்முகப்ரியா) பல்லவி திருத்தொண்டத் தொகை தன்னைக் கண்டான் திலதைலம் தலைபெய்து சிதல்சூழும் மலைபோக்கி (திருத்தொண்டத் தொகை) அனுபல்லவி திருஏடு சில போகவே பல அரும் பாடல் மறைந்தோடவே மிகும் ஏடு கரம் ஏந்தி இசைப்பாடல் மனம் ஏற்று (திருத்தொண்டத் தொகை) சரணம் இதுவும் உன் விளையாடலோ இனி எஞ்சும் துதிப் பாடல் உலகெங்கும் நிலையாகவே உருக்காட்டி வரவேணுமே அருள்கூரும் சிவகாமி உமைபாக சரண் என்று (திருத்தொண்டர் தொகை) வானத்திலிருந்து அரன் அருள் செய்தல் வேதச் சைவநெறித் தலைவர் எனும் மூவர் பாடல் வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோமென கேட்குமாற்றால் வானத்தில் ஓரோசை எழுந்ததன்றே (ஏழாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | எட்டாம் அங்கம்