ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி உத்தம சோழர் பொருளடக்கம் | நான்காம் அங்கம்
தஞ்சை நகரில் வீதியில் ஒருவன் பாடி ஆடும் பாடல், ஆனந்தக் களிப்பு ஆட்சி வருகுது ஆட்சி வருகுது ஆட்சி வருகுதைய்யே ஆட்சி வருகுது ஆட்சிவருகுது அருண்மொழி ஆட்சி அய்யே ..... 1 துன்பமே இன்றி இன்பம் நிறைந்திட தோன்றிடும் ஆட்சி அய்யே அன்புடனே மக்கள் ஆனந்தமாய் வாழ மலர்ந்திடும் ஆட்சி அய்யே ..... 2 பண்புடையோ ரெல்லாம் பயமின்றி இருந்திடும் மாண்புடை ஆட்சி அய்யே விண்ணவரெல்லாம் வியந்திடும் வண்ணம் விரிந்திடும் ஆட்சி அய்யே ..... 3 கற்றவர் தம்மைப் போற்றிக் களித்திடும் வித்தக ஆட்சி அய்யே செற்றவர் தம்மை செருவினில் வீழ்த்திடும் சீரிய ஆட்சி அய்யே ..... 4 பாடல்கள் எங்கும் பண்புடன் இசைத்திட நாடிடும் ஆட்சி அய்யே ஆலயமெங்கும் ஆடல் மலிந்திட கூடிய ஆட்சி அய்யே ..... 5 பக்தியுடன் மக்கள் பரமனைப் பரவிடும் பாங்குள்ள ஆட்சி அய்யே உத்தியுடன் நாட்டை உண்மையாய் ஆண்டிடும் உன்னத ஆட்சி அய்யே ..... 6 செல்வமும் கல்வியும் சேர்ந்து வளர்ந்திட தேர்ந்திடும் ஆட்சி அய்யே நல்லவர் எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடும் துல்லிய ஆட்சி அய்யே ..... 7 தஞ்சை மாநகர் தத்தளிக்கிறது. காஞ்சிபுரத்துப் பொன்மாளிகையில் மன்னர் சுந்தர சோழர் இறந்து விட்டார் என்ற செய்தியும், அவருடன் வானவன் மாதேவியாரும் மறைந்து விட்டார் என்ற செய்தியும் மக்களைத் துயரக் கடலில் ஆழ்த்துகின்றன. அருண்மொழி, தன் அண்ணனையும், தந்தையையும் அருமைத் தாயையும் அடுத்தடுத்து இழந்த ஆராத் துயரில் வருந்துகிறான். வஞ்சனையாளர் செயலால் நாடு கலக்கமுற்றிருக்கிறது. ஆன்றோர்கள் கூடி அருண்மொழிவர்மனை உடனடியாக அரசனாக முடி சூட்ட முடிவெடுக்கிறார்கள். அப்படிச் செய்தால் கலக்கத்தில் இருந்தும் குழப்பத்தில் இருந்தும் நாடு விடுபட்டு விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். அருண்மொழி ஆட்சியை மேற்கொள்ளப் போகிறான் என்ற செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. அருண்மொழியின் திறன் மக்களுக்குத் தெரியும். ஆதலால் நல்ல ஆட்சி மலரப் பேகிறது என்று மக்கள் மகிழ்கின்றனர். தஞ்சை நகரில் தெருவில் மக்களின் நிலையையும் ஒருவன் பாடி ஆடி வருவதும் இதைப் பிரதிபலிக்கிறது. (இராகம்-ரீதிகௌளை) பல்லவி மகுடம் புனையும் தருணம் இது மாந்தர் அனைவரும் வேண்டுவதும் ஈதே (மகுடம்) அனுபல்லவி முன்னவரும் மறைந்தார் மன்னவரும் இறந்தார் கொற்றமும் கோவின்றி நிற்றலும் நீதிஅன்று (மகுடம்) சரணம் ஆழியும் சங்கமும் நின் அங்கையில் காணுகின்றோம் ஆற்றலும் அன்பும் நின் தோற்றத்தில் காணுகின்றோம் வீரமும் ஈகையும் நின் பார்வையில் காணுகின்றோம் மாரனும் நாணுகின்ற பேரெழில் காணுகின்றோம் (மகுடம்) சடையன் கொடுத்திட வசிட்டன் புனைந்தமுடி வாசவனும் விரும்பும் வளவர் அணிந்த முடி தேசமெல்லாம் ஒளி வீசுகின்ற முடி தேவாதி தேவனும் அருள்சுரக்கும் முடி (மகுடம்) அமைச்சர்களில் மூத்தவரும் எல்லாராலும் வணங்கப் பெறுபவருமான அநிருத்த பிரும்ம மாராயர் அருண்மொழியை அணுகி மக்களின் விருப்பத்தை எடுத்துரைக்கிறார். அருண்மொழி பிறந்த பொழுதிருந்தே அழகு மிகுந்தவனாக இருந்தான் என்றும், பெரும் சக்கரவர்த்தியாகத் திகழப் போகும் சின்னங்களான சங்கமும் சக்கரமும் அவன் கையில் திகழ்ந்தன என்றும் சோழர் செப்பேடுகள் கூறுகின்றன. அந்தக் கருத்தே இங்கே இடம் பெறுகிறது. சோழ மன்னர்கள் தங்கள் பாரம்பர்யத்தைக் கூறும்போது இராமபிரானின் குலத்து உதித்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வர். கவிச்சக்கரவர்த்தி தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் மரபுளோர் கொடுக்க வசிட்டர் இராகவனுக்கு முடி புனைந்ததாகக் கூறுவான். கம்பன், இராஜராஜனுக்கும் முன்னர் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். ஆதலின் அக்காலத்தில் அரியணை ஏறிய சோழரது முடிசூடும் விழாவில் சடையன் பங்கேற்றார் என்பதும், சோழருக்கு முடிசூட்டி வைக்கும் ராஜகுரு, வசிட்டராக உருவகிக்கப்படுதல் மரபு என்பதும் இங்கே குறிப்பு. புவிச்சக்கரவர்த்தியின் பட்டாபிஷேக விழாவில் கவிச் சக்கரவர்த்தியை நினைவுகூர, சடையன் கொடுத்திட வசிட்டன் புனைந்தமுடி என்ற அடி. அதை அநிருத்த பிரும்ம மாராயர் வாயிலாகக் காண்கிறோம். சோழப் பேரரசனாக அருண்மொழி முடிசூட வேண்டும் என மக்கள் வேண்ட, அவன் எடுத்த முடிவு! (இராகம்-சாமா) பல்லவி உத்தம சோழரே முடிசூடுவார் அத்தனுக் கிணையவர் ஆதலின் யாம் மகிழ (உத்தம) சரணம் சிவஞானச் செம்மலான கண்டரா தித்தருக்கும் செம்பியன் மாதேவியான அன்புரு அன்னைக்கும் செல்வக் குழந்தையாகிச் சீருடனே வளர்ந்து சென்னியர் முடிபுனைய முற்றும் முறைமை பெற்ற (உத்தம) உத்தம சோழர், அருண்மொழிக்கு ஒன்று விட்ட தந்தை; செம்பியன் மாதேவியாருக்கும் கண்டராதித்த சோழருக்கும் பிறந்தவர். கண்டராதித்தர் மேற்குத் திசையில் (திருக்கோவி லூருக்கு அருகில் ஜம்பை என்ற ஊருக்கு அருகில்) சென்ற போது இறந்து விடுகிறார். ஆதலால் அவருக்கு “மேற் கெழுந்தருளிய தேவர்” என்று பெயர். அப்பொழுது உத்தம சோழர் கைக்குழந்தையாக இருந்திருக்க வேண்டும். ஆதலின் கண்டராதித்தருக்குப் பிறகு அவர் தம்பி அரிஞ்சய சோழர் அரியணை ஏறினார். அவருக்குப் பின்னர் அவர் மகன் சுந்தர சோழர் முடிசூடினார். சுந்தரர் இறந்ததும் அருண்மொழியைத் தேடி அரியணை வருகிறது. அருண்மொழி யோசிக்கிறான். உத்தம சோழரும் அரியணைக்கு உரியவரல்லவா? ஆளுவது மட்டுந்தானா குறிக்கோள்? உன்னத மனிதனாக, பண்பாளனாக வாழ்வதல்லவா குறிக்கோள் என்று நினைக்கிறான். தெய்வ வழிபாட்டில் தென்னகமெங்கும் திருத்தலங்களுக்குச் சென்று சிவாலயங்களைப் புதுப்பித்தப் பொருள்களையும் பொன்னையும் அளித்து உயர்வாழ்வு வாழும் செம்பியன் மாதேவியாரை நினைக்கிறான். தன் அக்கா குந்தவைப் பிராட்டி தனக்குப் போதித்த சீலங்களை நினைக்கிறான். “தியாகம் ஒன்றே அழியாத அமுதநிலைக்கு வழி” என்ற “தியாகேன ஏகேன அமிர்த தத்துவம் ஆனஸு:” என்ற உபநிடத வாக்கியங்களை நினைக்கிறான். ஆதலில் பெரியவர், சிறியதாதைக்கு நிகரான உத்தம சோழரே முடிசூட வேண்டும் என்று முடிவெடுக்கிறான். தனக்கு வந்த பேரரசை, தியாகம் செய்த தியாகச் செம்மலாகத் திகழ்கிறான் அருண்மொழி. அம்மொழி கேட்ட மதுராந்தக உத்தம சோழர் அருண்மொழியை இறுக அணைத்துக் கொள்கிறார். அவனது பண்பு அவரது கண்களில் ஆனந்த பாஷ்பமாகப் பெருகுகிறது. என்றவன் இயம்பலோடும் எய்தினன் எய்தியே எதிரில் நின்ற இளவலை இறுக மார்பில் புல்லினன் நயனம் மல்க துன்றிய கொற்றம் தன்னை தூசென திறந்த தியாகக் குன்றமே என்று கழறினன் உத்தமத் தூயவனே அருண்மொழியை முடிசூட மக்கள் வேண்ட அவன் உத்தம சோழரே முடிசூடட்டும் என்று கூறியதாகச் சோழர் செப்பேடுகள் கூறுகின்றன. உத்தமர் முடிசூடிக் கொள்கிறார். உடனே அருண் மொழியே தனக்குப் பின்னர் அரசனாக வேண்டும் என்று தீர்மானித்து அவனை இளவரசனாக அமர்த்துகிறார். (மூன்றாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | நான்காம் அங்கம்