ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி சுந்தர சோழரின் மறைவு பொருளடக்கம் | மூன்றாம் அங்கம்
காஞ்சிபுரத்தில் பொன் மாளிகையில் அரியணையில் சுந்தர சோழர் அமர்ந்திருக்கிறார். அவருடன் வானவன் மாதேவியும் அமர்ந்திருக்கிறாள். அவர் முகத்தில் பெருமிதம் காணப்படுகிறது. ஆதித்தன், அருண்மொழி என்ற இரண்டு சிங்கக் குட்டிகளின் தந்தை அல்லவா? ஆதித்தன் சேவூர்ப் போரில் வீரபாண்டியன் தலையைச் செண்டாடினான் என்று உலகம் புகழ்கிறது. அதை நினைக்கிறார். மட்டற்ற இன்பம். அவனை அரசனாக அரியணையில் அமர்த்தி விட்டுத் தாம் பக்தி நெறியில் இறங்கி விடலாம். ஆதித்தனும் அருண்மொழியும் இப்போது தஞ்சையில் இருக்கிறார்கள். விரைவில் தஞ்சைக்குத் திரும்பி அவ்வீரனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று நினைக்கிறார். அவையில் ஆடல் மகளிர்கள் அவரது “இராஜ பாரம்பரியத்தை”ப் பாடி ஆடுகின்றனர். சுந்தர சோழர் அவரது அமைச்சர் அன்பில் அநிருத்த பிரும்மராயருக்கு ஒரு செப்பேடு அளித்துள்ளார். அதில் உள்ள முதல் பாடலை “லக்ஷ்மீ பர்த்துஹு சரண நளின துவந்த்வம்” என்பதைத் தெய்வ வணக்கமாக்கி ஆடல் தொடங்குகிறது. லக்ஷ்மீ பர்த்து: சரணநளின துவந்த்வம் ஆதாரகம் வோ திஸ்யாத் லக்ஷ்மீம் கமலநிலயா பூததாத்ரீ கராப்ஜை: யத் ஸம்பர்க்க த்விகுண ஜனிதாம் காந்திம் உச்சை: ததானாம் யத் வா சம்போ: கரஸரஸிஜேஷு இந்து லீலாம ததாதி அதைத் தொடர்ந்து இராஜ பாரம்பரியம் (இராகம்-தோடி) காஞ்சிமா நகர்தனக்குக் கவினுறவே எழந்து பொன்னான மாளிகையின் பொற்கட்டின் மீமிசையில் வானவன் மாதேவியுடன் வண்ணமதாய மர்ந்து வானவரின் தேவரென விளங்கிடுவீர் கேண்மினோ! விஜயாலயன் (இராகம்-பைரவி) விஞ்சையரும் ஏத்துகின்ற தஞ்சைநகர் கொண்டு கஞ்சனைக் கடிந்தகரு மாயனுக் கிளையோள் அண்டமெலா மீன்றளித்த அனைத்துலக அன்னை சண்டனையும் முண்டனையும் சாய்த்த சாமுண்டி நிசிசிரனைச் சிரம் நெறித்த நிசும்ப சூதனியைக் கசிந்துளம் உருகியவள் கமலத்தாள் பற்றி அந்நகரில் அவளுக்கோ ராலயம் எடுத்து அவளருளா லவனியைப் பாவித்த மாண்பன் மெய்யெலாம் விழுப்புண்கள் விளங்கிய வீரன் விஜயாலயன் என்னும் வேந்தனையே வாழ்த்தி ஆதித்தன் (இராகம்-கீரவாணி) சைய்யமலையிற் தோன்றிச் சலசலஎன வேயோடிக் கடலலையில் புகுகின்ற பூம்புகார் வரையும் பொய்யாத பொன்னி எனப் பூதலமே போற்றும் காவிரியின் இருகரையும் கற்கோயில் கண்டோன் கோதிலாத் தேறலாம் கூத்தருடை மன்றைக் காதலால் பொன்வேய்ந்து கண்டுஉள மகிழ்ந்தோன் கோதண்ட இராமனெனத் தன்புகழ் விரித்தோன் இராஜகே சரிஎனப் பெயர்பெறும் இராஜன் காளத்தி மலையருகில் மன்னுடலை நீத்தோன் ஆதித்த சோழனது ஆற்றலையும் வாழ்த்தி பராந்தகன் (இராகம்-மோகனம்) மதுரையைக் கொண்ட கோமகள் தானாகி ஈழம்தனை எறிந்து கார் தமிழ்ப்பதியும் தந்து காகுத்தன் சேவித்த சேதுத்துறைகதனிலும் கன்னியாம் தேவியுடை குமரிக் கோடதிலும் அரங்கத்து அம்மானின் ஆலயம் தன்னிலும் அன்பினால் என்னிட்டுத் துலைதனிற் புகுந்தோன் அவைகளில் குடவோலை ஆட்சிதனை அமைத்தோன் சவைபல கண்டசீர் பராந்தகனை வாழ்த்தி இராஜாதித்தன் (இராகம்-மல்லாரி) தக்கோலக் கடும்போரில் - தந்தியின் மீதமர்ந்து இரட்டரது தானையுடன் எதிர்சமர் உழத்தி புகழ்உடல் இவண்நிறுத்தி விண்ணுலகு பாய்ந்த இராஜஆ தித்தன்எனும் தேவனையும் வாழ்த்தி கண்டராதித்தன் (இராகம்-சுருட்டி) சீர்மல்கு செம்பொற் றிருக்குன்று தன்னை கார்மல்கு கடிசோலை தஞ்சையார் கோக் கண்டன் ஆதித்தன் இசைத்திட்ட திருவிசைப்பா தன்னை ஓதியே உளம்மகிழ் பக்தியால் பாடி சுந்தரன் வாழ்த்து (இராகம்-மத்யமாவதி) ஆராத அன்பாளன் அரிஞ்சயன் அரும்புதல்வ சீரோடு நின்புகழ் சிறக்க என வாழ்த்துதுமே மாதேவ னுமையோடு மன்னியே அருள்சுரக்க கோவே நின்கொற்றம் நெடிதோங்க வாழ்த்துதுமே சங்க காலத்துக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிலைநிறுத்தியவன் விஜயாலய சோழன். ஆதலால் இங்கு இராஜ பாரம்பரியம் அவன் முதல் தொடங்குகிறது. கி.பி. 850இல் முதன்முதலில் தஞ்சாவூரைக் கைப்பற்ற அதைச் சோழர்களின் தலைநகராக்கினான். ஆதலால், “தஞ்சை கொண்ட பரகேசரி” என்பது பட்டம். அங்கு நிசும்ப சூதனிக்குக் கோயில் எடுத்தான். அகில லோக மாதா, சண்டன், முண்டன் என்ற இரண்டு அசரர்களையும் வென்று இறுதியில் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களைச் சம்ஹாரம் செய்தாள் அன்னை. ஆதலால், நிசும்பசூதனி என்றும் சண்டி, முண்டி, சாமுண்டி என்றெல்லாம் அழைக்கப்பட்டாள். விஜயாலயன் தஞ்சாவூரில் நிசும்ப சூதனியைப் பிரதிட்டை செய்து தேவர்களாலும் வணங்கப்பட்ட அத்தேவியின் அருளால் நானிலத்தை ஆண்டான் என்று “தத: பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம் சுராசுரைஹி அர்ச்சித பாத பங்கஜாம்” என்று சோழர் செப்பேடு கூறுகிறது. அச்செய்தியே இங்கே குறிக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் ஒப்பரும் வீரன். அவன் பல போர்களை வென்று உடல் எல்லாம் தொன்னூற்றாறு விழுப்புண்கள் பெற்ற தீரன் என “மீதெல்லாம் எண் கொண்ட தொன்னூற்றின் மேலும் இரு மூன்று புண் கொண்ட வென்றிப் புரவலன்” என்று உலா கூறுகிறது. அந்தச் செய்தியும் இங்கு இடம் பெறுகிறது. அவனுடைய மகன் ஆதித்தன் “சஹ்யாத்ரி” மலையில் தொடங்கிப் பூம்புகார் வரையும் ஓடும் காவிரியாற்றின் இரு கரையும் சிவபெருமானுக்குக் கற்கோயில் கட்டினான் என்று சோழர் செப்பேடு கூறுகிறது. தில்லை அம்பலத்துக்கு அவன் பொன் வேய்ந்தான். அவனுக்கு இராஜகேசரி என்றும் கோதண்டராமன் என்றும் பட்டப் பெயர்கள் உண்டு. அவன் காளஹஸ்த்தி மலைக்கருகில் தொண்டை மாநாடு என்ற இடத்தில் உயிர் நீத்தான். அவனுக்கு அங்கே பள்ளிப் படை (இறந்த இடத்தில் எடுக்கப்படும் கோயில்) எடுக்கப் பட்டது. அந்தச் செய்திகள் இங்கே கூறப்படுகின்றன. ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழன். அவன் ஈழத்தையும் மதுரையையும் வென்றான். அதனால் “மதுரை கொண்ட பரகேசரி” என்று பட்டம் கொண்டான். அவன் இராமேச்சுரத்திலும், கன்யாகுமரியிலும், ஸ்ரீரங்கத்திலும் துலாபாரம் செய்து (தன் எடைக்குச் சமமான எடை பொன் கொடுத்தல்) பொன் கொடுத்துப் பூஜித்தான் என்று அண்மையில் கிடைத்த வேலஞ்சேரி செப்பேடு கூறுகிறது. அவன் காலத்தில்தான் உத்தரமேரூர் ஊராட்சியைக் குறிக்கும் குடவோலைக் கல்வெட்டு எழுதப்பட்டது. “சவை” என்றால் புலவர்களின் சபை எனப் பொருள். அவனுக்குப் புலவர் பால் சிறந்த ஈடுபாடு உண்டு. அச்செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. பராந்தகனின் மகன் இராஜாதித்தன், இராஷ்டிரகூடர்களுடன் நடந்த போரில் யானை மீதமர்ந்து போரிட்டான். அந்தப் போரில் மாற்றான் அம்பு மார்பில் தைத்து மாண்டான். ஆதலால் “விண்ணில் பாய்ந்தான்; வீரப் புகழ் கொண்டான்” என்ப. இராஜாதித்தனுக்குப் பிறகு பராந்தகனின் இரண்டாவது மகன் கண்டராதித்தர் ஆண்டார். அவர் சிவஞானச் செம்மலாகத் திகழ்ந்து தில்லைக் கூத்தர்மீது திருவிசைப்பா இயற்றியுள்ளார். அந்தப் பாடல்களில் உள்ள சொற்கள் இங்கு இடம் பெறுகின்றன. அவருக்கும் அடுத்து அவர் தம்பி அரிஞ்சய சோழர் ஆண்டார். அரிஞ்சய சோழரின் மகனே சுந்தர சோழர். அவரது அலைக் களத்தில் ஆடும் மகளிர் அவரது முன்னோர்களின் சிறப்புக்களை வாழ்த்தி சுந்தரரையும் வாழ்த்தி ஆடுகின்றனர். சோழர் காலத்தில் இருந்த பண்பு வேறு. அதற்கும் எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கும் பிறகு ஆண்ட நாயக்கர், மராட்டிய அரசர்களின் காலத்து அரச அவையில் ஆடுகின்ற பெண்கள் அரசனையே தலைவனாக்கி, காமச் சுவை ததும்பச் சிற்றின்பத்துக்கு அழைப்பாளாக பல “வர்ணங்களை”ப் பாடி ஆடினர். “மூவரையர் வண்ணம்” போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆதலால் தற்காலம் வரை “வண்ணங்களும்” பதங்களும் காமச் சுவை மிக விள்ஙகின. ஆனால், சோழர் காலத்துச் சமுதாயம் உன்னதப் பண்பும் கலையும் மிக்கதாகத் திகழ்ந்தது. ஆதலின் “ராஜ பாரம்பரியம்” பாடி அலைய ஆடினாரென்க. இந்தப் பாடலின் தொடக்கத்தில் சுந்தர சோழரும் வானவன் மாதேவியும் பொன் மாளிகையில் அமர்ந் திருந்து “வானவரின் தேவரென” விளங்கியது. இந்திரனும் இந்திராணியும் அமர்ந்துள்ளது போல் விளங்கிற்றால். இது முதல் பொருள். இங்கே பொன் மாளிகையில் நடக்க விருக்கும் செயலால் சுந்தர சோழன் உயிரிழக்கப் போகிறார். அவ்வாறு இறப்பவர்கள் வீர சுவர்க்கம் எய்துவர் என்பதும், இருவரும் தெய்வமாய் அமர்ந்து விளங்குவர் என்பதும் நம் முன்னோரின் நம்பிக்கை. பின்னர் நடக்கவிருப்பதை இந்தப் பாடல் முன்னவதாக மறைமுகமாகத் தொனிக்கிறது. (இராகம்-நாதநாமக்கிரியை) சோழர்தம் குலமே என்றும் செவியுறாச் செயல் ஒன்றின்று சூழ்ச்சியால் விளைந்த தன்றே சொல்லவும் போமோ தேவ செழியனின் சிரத்தைப் போரில் செண்டென அடித்த சிங்கம் வழுதிதன் வஞ்சர் வாளில் வீழ்ந்துடல் சிதைந்த தந்தோ சுந்தர சோழரை வாழ்த்தி ஆடிய பெண் “இந்திரன் ஏறக் கரியளித்தார், பரியேழளித்தார், சுந்தர சோழரை யாவ ரொப்பார் இத்தொனிலத்தே” என்ற (வீர சோழியத்தில் வரும்) பாடலையும் பாடி ஆடுகின்றனர். அவ்வமயம் காவலன் நெஞ்சம் உள்ளம் பதைபதைக்க ஓடி வருகிறான். நாக்குழறுகிறது. சுந்தரரின் அருமைப் புதல்வன் ஆதித்த கரிகாலனைப் பாண்டியர்களின் கையாட்கள் வஞ்சனை யால் கொன்று விட்டனர் என்கிறான். இச்செய்தியைக் கேட்ட சுந்தரர் பேரிடி வீழ்ந்ததென மூர்ச்சிக்கிறார். கண் திறக்கிறார். உடல் பதறுகிறது. கால் தடுமாறுகிறது. ஆதித்த கரிகாலனின் மறைவு அவரை உலுக்கி விட்டது. புலம்புகிறார் (ஆதித்தன் இறந்ததால் சுந்தர சோழர் மனமுடைந்து பொன் மாளிகையில் இறந்து விடுகிறார் என்பது வரலாறு. ஆதலால் பொன் மாளிகைத் துஞ்சிய தேவர் என அவருக்குப் பெயர். அவருடன் வானவன் மாதேவியும் உடன் இறந்து விடுகிறாள்). சுந்தர சோழர் வருத்தம் (இராகம்-முகாரி) எங்கு மறைந்தானை என்னருமை மைந்த யாங்கன் இயம்புவேன் எந்தன் உயிர்துடிப்பை (எங்கு) சரணம் தஞ்சை அரியணையில் தகவுடனே அமர்ந்து தனியரசு புரிவாய் என்று நினைத்திருந்தேன் பஞ்சமா பாதகர்கள் வஞ்சனையில் வீழ்ந்து துஞ்சிடுவாய் எனத்துளியும் நினைந்திலனே (எங்கு ) ஆதித்த கரிகால அந்தோ மறைந்தனையே பாதகக் கூற்றத்தின் பாசத்தில் பட்டனையே சோதி சுடருருவில் தோன்ற நினைந்தனையோ சுரருலகும் ஆள விரைந்தனையோ மைந்த (எங்கு ) என்று கதறிய சுந்தரசோழர் இறந்து விடுகிறார். அவருடன் வானவன் மாதேவியாரும் உயிர் நீத்து விடுகிறாள். (இராகம்-பூபாளம்) தன்கொழுநன் உயிர்விடலும் தளிர்க்கரத்தால் தாங்கி தரைமகளும் சுரமகளும் அணைவதன் முன் தான்அணைந்து இன்னுயிரை உடன்நீத்து இறைமகளாய் எழந்தாளை வானவன் மாதேவியினை வாயார வாழ்த்துதுமே (இரண்டாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | மூன்றாம் அங்கம்