ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி விவேகவிளக்கம் டாக்டர் இரா. நாகசாமி அருண்மொழியின் குழந்தைப் பருவம் பொருளடக்கம் | இரண்டாம் அங்கம்
ஐங்கரன் காப்பு (இராகம்-காம்போதி) உலகெலாம் புகழ்பரப்பும் ஒப்பரும் தளியைத் தோற்றி கலைநிலா சடைமேல் பூணும் கண்ணுதல் கழல்கள் பற்றி தலைமிசைத் தாங்கி நாளும் தவமதாய்ப் பரவும் அன்பன் அருண்மொழிக் காதை கூற ஐங்கரன் காப்புத்தானே அருண்மொழித் தேவனின் புகழ் உலகெங்கும் பரவக் காரணமாவது அவன் தோற்றுவித்த திருக்கோயில். அதைச் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் எடுப்பித்தான். “பக்தியின் பண்பு திருவடி சூடல்” என்பர் தமிழ் மறையோர். ஆதலின் கண்ணுதல் கழல்களைப் பற்றித் தலைமிசை தாங்கினான். ஆதலின் “சிவபாதசேகரன்” என்று மக்கள் அழைத்து மகிழ்ந்தனர். அவனது பூத உடல் மறைந்த போதும் பக்தி உரு மறையவில்லை. சிவபெருமானின் அருகில் அமர்ந்து அவரின் அடியானாக என்றும் பரவுகிறான். ஆதலின், “பரவும் அன்பன்” என நிகழ்காலமாக்கிக் கூறியுள்ளேன். இக்கதை அருண்மொழியின் காதை. ஜய மங்களம் (இராகம்-நாட்டை) ஜய பிருகத் சதனேச ஜயத்ரிபுர விஜயேச ஜய மகாலிங்கேச ஜய ஸர்வ புவனேச (ஜய) தவ ஸ்வரூப விசித்ரானி தவ கடாக்ஷ விகாசினி தவ பாத யுகளானி ஜகத்ராண சமர்த்தானி ..... (ஜய) (இராகம்-அடாணா) சரணு சரணு நிசும்பசூதனி சரணு சங்கர தோஷணி சரணு சர்வமகேச யோகினி சரணு பைரவ பாமினி ..... (சரணு) சோழவம்ச சாம்ராஜ்ய தாயினீ சர்வ சஸ்ய சம்ருத்திதாயினி ராஜநீதி நைபுண்ய தாயின கீத நாட்யாதி கலா ப்ரதாயினி ..... (சரணு) அருண்மொழித் தாலாட்டு (சுந்தர சோழனின் தேவி அருண்மொழியின் தாய் வானவன்மாதேவி அவனைத் தாலாட்டுவது) (இராகம்-நீலாம்பரி) சீர்கொண்ட தாமரையாள் செவ்வத் திருவுருவே பார்எல்லாம் ஒளிபரப்ப வந்துதித்த வெண்சுடரே கார்பொழிய கழனியெலாம் கதிர்விளைத்த காசிபனே ஆருயிரே இளம்தளிரே அருள்மொழியே தாலேலோ சிந்தனை ஆவினது சீரிளங் கன்றினுக்காய் மைந்தனையே தேர்க்காலில் மாய்த்துகந்த மாமனுவே பந்தணையாள் பாகனுக்கு பலமாடம் எடுத்தவனே குந்தவையின் பின்பிறந்த கோமகனே! கண்வளராய் (இராகம்-ஷண்முகப் பிரியா) மாந்தாதா வாய்வந்து மண்ணுலகு புரந்தவனே மாமலையில் புலிபொறித்துப் புனற்பொன்னி யணைவகுத்தாய் காகுத்தன் குலத்துதித்துக் கடலடைத்த கண்மணியே ஆதித்தன் பின்னவனே அரும்சுடரே தாலேலோ கானவன் கரத்தி ருந்து புள்ளுயிரைக் காத்தவனே வானவன் மாதேவியரின் உதரத்தில் அவதரித்தாய் மானவிற் கூர்மாமன்னன் சுந்தரனின் திருசுசெல்வ கானவினிய எந்தன் கற்பகமே தாலேலோக சோழர் காலத்துச் செப்பேடுகளும், இலக்கியங்களும் சோழர்களது குல பாரம்பர்யத்தைக் கூறும்போது திருமாலில் தொடங்கி அவர்களது வம்சம் வந்ததாகக் கூறுவது மரபு. அதைப் பின்பற்றியே இராஜராஜனின் குலத் தொடக்கமாகத் திருமாலில் பாடல் தொடங்குகிறது. மேலும் அரசன் மக்களைக் காப்பவன். காத்தல் தொழில் திருமாலுடையது. ஆதலின் திருமாலின் அவதாரமாக அரசனைக் கூறுவது மரபு. “நாவிஷ்ணு: ப்ருத்விபதி:” என்று வடமொழியிலும், “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்று தமிழ் மொழியிலும் கூறுவர். இங்கு குழந்தை அருண் மொழி திருமாலாய் உருவகிக்கப்படுகிறான். குழந்தையைத் தாலாட்டும் போது அவனது முன்னோர்களின் சிறப்பைக் கூறி அவர்களாகவே பாவித்தல் நமது மரபு. அந்த அடிப்படையில் இத்தாலாட்டுப் பாட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவன் சூரிய குலத்து உதித்தவன் ஆதலின் உலகில் ஒளி பரப்ப வந்த வெண்சுடர் எனப்படுகிறான். சோழர் காசிப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலின் காசிபனே எனப்படுகிறான். அருண்மொழி தோன்றியதால் பல்லாயிரம் வேலி நிலங்கள் பண் செய்யப்பட்டு பயிர் நிலமாக்கப்பட்டன. அது இங்கு சுட்டப்படுகிறது. சோழர் நீதிமுறை தவறாதவர் என்பதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவன், மனுநீதி சோழன். ஒரு பசுவின் கன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்காக, தனது மைந்தனைத் தேர்க் காலில் இட்டுப் புகழ் பெற்ற மனு ஒரு சோழர்க்குலத் தோன்றல். மையல்கூர் பாம்பனாக சிந்தனை ஆவிற்கு முற்றத் திருத்தேரில் மனை மைந்தனை ஊர்ந்த மறவோன் என்று அவனை விக்ரமசோழனுலா கூறுகிறது. ஆதலின் அருண்மொழி, மாமனுவாக உருவகிக்கப்படுகிறான். சோழர் குலத்து உதித்த கோச்செங்கண்ணான் சிவபெருமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட மாடக் கோயில் எடுத்து புகழ் பெற்றான். “எண் தோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குளத்து வளச் சோழன்” என்று அவன் பாடப்பட்டுள்ளான். அருண்மொழி பெருங்கோயில் பல படைத்ததால் கோச்செங்கண்ணனாகக் கூறப்படுகிறான். கிருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களில் முதலாவதும் மிகவும் புண்ணியமே நிறைந்ததுமான கிருதயுகத்தில் ஆண்ட புகழ் பெற்ற மன்னன் மாந்தாதா என்பவன். கொடுமை என்பதே அறியாத நேர்மையாளன் என அவனுடைய ஆட்சி புகழ் பெற்றது. அவனது ஆட்சியில் கொடும் புலியும் புள்ளி மானும் ஒரே துறையில் நீர் உண்ணுமாம். அம் மாந்தாதா சக்ரவர்த்தி சோழர் குல முன்னோன் என செப்பேடுகளும் பாடல்களும் கூறுகின்றன. பைந்தடத் தாடு துறையில் அடுபுலியும் புல்வாயும் கூட நீரூற்றிய கொற்றவன் என அவனை உலாப் புகழ்கிறது. இத்தாலாட்டில் அருண்மொழி மாந்தாதாவாக உருவகிக்கப்படுகிறான். ஆட்சிச் சிறப்பால்; இமய மலையில் புலிப் பொறி பொறித்து, காவிரியாற்றுக்கு அணை கட்டிய கரிகால் பெருவளத்தானை அனைவரும் அறிவர். அம்மாபெரும் மன்னனாக அருண்மொழி உருவகிக்கப்படுகிறான். கடலை அடைத்து இலங்கை தசமுகனை சம்கரித்த காகுத்தனாகிய அண்ணல் இராமபிரான் சோழன் என இலக்கியங்களும் கல்வெட்டும் கூறும். இங்கு இராஜராஜன் காகுத்தன் என்று உருவகம் பெறுகிறான். அருண்மொழிக்கு ஆதித்த கரிகாலன் என்ற அண்ணன் இருந்தான். அது இங்கு கூறப்படுகிறது. கானத்து வேடன் ஒரு புறாவை எய்ய, அது சிபிச் சக்கர வர்த்தியின் மடியில் சரண்புக வேடன் கரத்திலிருந்து புறாவைக் காப்பாற்றினார். அவர் சோழர் குலத்தவர். அவருக்கு சிபிச்சோழர் என்றே பெயர். உலகறியக் காக்கும் சிறுபுறவுக்காக களிகூர்ந்து தூக்கும் துலைபுக்கத் தூயோனும் இங்கே அருண்மொழி “சிபி”யாக உருவகம் பெறுகிறான். அருண்மொழி சுந்தர சோழருக்கும், வானவன் மாதேவியாருக்கும் பிறந்தவன். இவை தாலாட்டில் இடம் பெற்றுள்ளன. அன்னை வானவன் மாதேவியும், பிற பெண்களும் அருண்மொழியாகிய குழந்தையின் அழகைப் பிறருக்குக் காட்டல். அருண்மொழியின் எழில் வர்ணனை (இராகம்-கேதாரம்) மாதேவடிகளான மழவரையர் மகளார் ஆதரவுடனளித்த ஆண்மைக் கழல்பூண்டு பூதலம் முழுதினையும் அளக்கவே விழைகின்ற பாதங்களின் பாங்கு காணீரே பாவைமீர் வந்து காணீரே பேரும் ..... 1 அருண்மொழி குழந்தையாக இருந்த போது அவனது ஆற்றலுக்கும் பக்திக்கும் வித்திட்டவர்களில் இருவர் குறிப்பிடத்தக்கவர். அவனது தமக்கை வந்தியத் தேவனின் தேவி குந்தவை ஒருவர்; மற்றவர் கண்டராதித்தச் சோழரின் தேவி செம்பியன் மாதேவியார். செம்பியன் மாதேவியாரைக் குறிக்கும் கல்வெட்டுகள், “கண்டராதித்த தேவர் தேவியார், மழவரையர் மகளார், உத்தமச் சோழரை திருவயிறு வாய்த்த பிராட்டியார், மாதேவடிகளான சொம்பியன் மாதேவியார்” எனக் கூறுகின்றன. ஆதலில் மாதேவடிகளான மழவரையர் மகளார் என்றது; வீரம் புகட்டியது அத்தேவியென்ப. அத்தேவி பூட்டிய கழலணிந்து பூதலம் அளந்தான் எனக் கருத்து. இராஜராஜன் தன் நாடு முழுவதையும் சீராக அளந்து வரிப் பொத்தகங்களில் எழுதி வைத்தான். ஆதலின் “உலகளந்த சோழன்” என்பது அவன் பட்டங்களில் ஒன்று. அவன் பிறந்ததும் பூதலம் அளக்க அவன் பாதங்கள் விழைந்தன என்பது தொனிப் பொருள். பூதலம் அளந்தவன் திருமால். அருண்மொழியைத் திருமாலாக உவமிப்பதும் இங்கு தொனிப் பொருளாம். ஆழ்வார் பாசுரம் இந்தப் பாடல் அமைப்பின் முன்னோடி. (இராகம்-சாரங்கா) வேள் புலத்து வேந்தரெலாம் வீரச்சபதம் விட்டு தாள் புனைந்து தம்முடைய தலைமிசை தாங்கிடவே வாளுடனே வேல்பற்றி வீரம் விளைவிக்கும் தோள்கள் இருந்தவா காணீரே தோகை மயிலனையீர் காணீரே ..... 2 “வேள்புலம்” என்பது சாளுக்கியர் நாடு. மு.இராகவையங்கார் அவர்களின் “வேளிர் வரலாற்றில்” இதை விரிவாகக் காண்க. இராஜராஜனுடன் போரிட்டவர்களில் மிகவும் வலி பொருந்தியவர்கள் சாளுக்கிய அரசர்கள். சாளுக்கியன் சத்யாச்ரயனை இராஜராஜன் போர்க் களத்தில் வென்று வாகை சூடியதை அவனது தஞ்சைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பின்னர் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை முன்னதாகவே அருண்மொழியாகிய குழந்தையின் தோள்கள் காட்டுகின்றன என முன் கூறல். (இராகம்-காபி) திருமகளும் நிலமகளும் தெரிந்தசீர் ஜயமகளும் ஒருங்கிணைந்து உடன்நிலவ ஓரிடமே வேண்டிடவும் பெருமாளும் விரும்பி உடன் பெற்றிஎன வந்துகந்த திருமார்பிருந்தவா காணீரே திருந்திழையீர் வந்து காணீரே ..... 3 ஸ்ரீதேவி, பூமி தேவி, நீளா தேவி என மூன்று தேவியரைக் கொண்டுள்ள திருமுலக்கு நிகர் இவன் என்ப. இவன் கல்வெட்டுகள் “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டவன்” எனத் தொடங்குகின்றன. (இராகம்-தன்யாசி) அய்ப்பசித் திங்கள் சதையநா ளவதரித்து ஒப்பிலை இவர்க்கு நிகர் எத்துறையும் என நிறுத்தி இப்புவியில் புகழ்மலர இன்னமுத இதழ் விரிக்கும் செம்பவள வாயினைக் காணீரே அருண்மொழி வாயினை காணீரே ..... 4 அருண்மொழி ஐப்பசி மாதம் சதைய நக்ஷத்திரத்தன்று பிறந்தவன். “சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்” என்று இவனைக் கலிங்கத்துப் பரணி போற்றும். இராஜராஜனது கல்வெட்டுகளையும் அவன் விட்டுச் சென்றுள்ள இலக்கியங்களையம் சின்னங்களையும் காணில் அவன் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்தவனாக திகழ்ந்ததோடு ஈடு இணையற்றவனாக விளங்கினான் என்பது வரலாற்று ஆசிரியர் துணிவு. அதை இப்பாடல் கூறுகிறது. அருண்மொழி வாயினைக் காணீரே என்பதைக் காண்க. (இராகம்-பைரவி) வைரும் மண்முழுதும் ஒருகொற்றக் குடையின்கீழ் ஒதுங்க விண்முழுதும் வென்றிபுகழ் விரைவினில் விளங்க எண்ணிலா எதிர்வேந்தர் வாய்புதைந்து ஏவல்கேட்க கண்விழிக்கும் எழிலினையே காணீரே கனங்குழையீர் வந்து காணீரே ..... 5 (இராகம்-மணிரங்கு) வித்தகக் கோலங்கொண்ட விண்ணவனை வேதியனை மத்தகக் கரியின் தோலை உரித்துடுத்த உத்தமனைச் சித்தர்தம் அத்தனை சென்னியின் மிசைசேர்க்கும் கைத்தலங்கள் வந்து காணீரே காரிகையீர் வந்து காணீரே ..... 6 குழவிப் பருவம் முதலே சிவபெருமானைச் சென்னியில் வைத்துப் போற்றியவன் இவன் எனக் காட்டப்படுகிறது. “சிவபாத சேகரன்” என்பது இவன் பெயர். ஆறு பாடல்களால் அருண்மொழிக் குழந்தையின் அழகு வர்ணிக்கப்பட்டது. தளிர் நடையிட்டு வருகிறான் குழந்தை. அவனை அக்கன் குந்தவைப் பிராட்டி நடை பயில்விக்கிறாள். . (இராகம்-கானடா) பல்லவி அருண் மொழியே வருக-வருக அருள் மொழியே வருக அனுபல்லவி ஆதித்தனுடன் கூடி அன்புடன் ஆடி யானையுடன் பரி ஏற்றம் அறிந்திட சரணம் பொன்னி வளநாட்டின் | பெரும்புகழ் நிலைத்திட கன்னி வளநாட்டின் காவலும் பூண்டிட மண்ணைக் குடிவரை மாப்படை செலுத்திட அண்ணனுடன் இணைந்து இளவர சாற்றிட (அருண் மொழியே) கன்னி வளநாடு என்பது பாண்டியர் நாடு. மண்ணைக் குடி என்பது இராஷ்டிரகூட அரசர்களின் தலைநகர் “மான்யகேடம்”. அருள்மொழி குழந்தையாக இருந்தபோது அவனது அக்கன் குந்தவையும், சிறிய பாட்டி செம்பியன் மாதேவியாரும் பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தனர். இராஜராஜன் சங்கப் பாடல்களில் ஈடுபட்டுப் பிற்காலத்தில் தனது கல்வெட்டையே சங்கப் பாடல் மரபில் எழுதியுள்ளான். இவனது திருக்கோயிலூர் கல்வெட்டில் சங்கப் பாடல் மரபும், கபிலரும் குறிக்கப்படுவதையும் சுட்டி, “திருக்கோயிலூர்ப் பாட்டு” என யான் எழுதியுள்ள பாடல் உரை காண்க. ஆதலின் சங்கப் பாடலும், பக்திப் பாடலும் இணைந்ததாக ஒரு பாடலைச் செம்பியன் மாதேவியர் போதிப்பதாகப் புனைந்துரை. புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாக உள்ள, கன்னி கார்நறுங் கொன்றைக் காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை என்னும் பாடலை இதற்கு எடுத்தாள்கிறோம். செம்பியன் மாதேவி கற்றுத் தந்ததாக இப்பாடலைக் கூறுகிறோம். இது கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றப்பட்டது என்பர் சிலர். இராஜராஜனுக்கும் காலத்தால் முற்பட்டது. ஆதலின் கால முரண் பாடு இல்லை (திருமுறை கண்ட காட்சி பின்னர் இவ் விலக்கியத்தில் இடம் பெறுவதால் தேவாரப் பதிகம் இங்கு எடுத்தாளப்படவில்லை ). இராஜராஜ சோழன் உணர்ச்சி மேலீட்டுடன் தமிழ் இலக்கியங்களைக் கற்றான். அதைப் பக்தி நிறைவுடன் புகட்டினார் செம்பியன் மாதேவியார். தமிழ் மொழி போல் சமஸ்கிருத மொழியையும் கற்று அவன் இருமொழி வல்லவனாகத் திகழ்ந்தான். குறிப்பாக, பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டான். அக்கன் குந்தவை பிராட்டி “சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம்” கற்றுத் தந்ததாக உரைப்பாம். (முதல் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | இரண்டாம் அங்கம்