chap12 chapter11.html chapter12.html chapter13.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 12. நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்
பொருளடக்கம் | அத்தியாயம்-11 | அத்தியாயம்-13 | அகெடமி

தொல்காப்பியத்தில் வீரமரணம் எய்திய மறவனுக்கு நடுகல் எடுக்கும் மரபு கூறப்பட்டுள்ளது. “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்தகு மரபில், பெரும்பெயர், வாழ்த்தல்” என்று நடுகல் அமைக்கும் நிலைகள் கூறப்பட்டுள்ளன. மாண்ட வீரனின் வீரத்துக்கும் புகழுக்கும் ஏற்ப பாறையிலிருந்து கல் வெட்டி எடுத்தல் ஒரு விழாவாகவே நடத்தப்படும். இதை “காட்சி” என்றனர். அது நடைபெற உள்ள விழா “கால்கோள்” நடைபெறும். பாறையிலிருந்து எடுக்கப்பெற்ற கல், பல நூற்றாண்டுகளாக வெய்யிலில் காய்ந்து கிடந்ததால் அதைச் சில நாட்கள் நீரில் படுக்க வைக்க வேண்டும். இது “நீர்ப்படை” எனப்படும். பின்னர் அவ்வீரனின் உருவமும் புகழும் எழுதி நடுவர். இவ்வாறு நடப்பட்ட இடத்தை கோயிலாகவும் நடுகல்லை தெய்வமாகவும் வாழ்த்தி வணங்குவர். இவ்வாறு நடப்பட்ட வீரனை கோயிலில் உள்ள தெய்வமாக வணங்குவது நமது மரபு. இதுபோன்ற நடுகற்கள் நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதும் கிடைத்துள்ளன. தமது கோயில்களில் தெய்வ உருவங்களைச் செய்யவும் இதே மரபுகளை ஆகம நூல்கள் கூறுகின்றன. இங்கு இளங்கோவின் சிலப்பதிகாரத்தை நினைவில் கொள்வது தகும். ஒரு பேரரசனை அவனது அரசவையிலேயே வென்ற மாபத்தினிக்கு மிக உயர்ந்த இமயமலையில் கல்லெடுத்து, தூய்மையிலும் தூய்மையான கங்கை ஆற்றில் நீர்ப்படைசெய்து, தன் தலைநகரில் அவள் உருவை நட்டு, கோயில் எழுப்பி வாழ்த்தினான் சேரன்செங்குட்டுவன். இதுதான் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தில் முழுமையாக இடம்பெறுகிறது. இதை ஆறு காதைகளில் இளங்கோ படைத்துள்ளார். இவற்றை “காட்சிக்காதை”, “கால்கோட்காதை”, “நீர்ப்படைக்காதை”, “நடுகற்காதை”, “வாழ்த்துக்காதை”, “வரம்தருகாதை” என்பதாகப் படைத்துள்ளார். இக்காதைகளின் தலைப்புகள் எல்லாம் தொல்காப்பியத்தில் குறித்துள்ள அதே தலைப்புகளாக கொடுத்துள்ளதைக் காணலாம். சிலப்பதிகாரம் தொல்காப்பியத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று அடியார்க்கு நல்லார் தமது உரையில் கூறுகிறார். அத்துடன் இதற்கும் முன்னர் சில இயல் நூல்களுக்கு இலக்கணங்கள் இருந்தன. அவையெல்லாம் வழக்கொழிந்து போயின. இளங்கோ சிலப்பதிகாரம் எழுதும்போது தொல்காப்பியம்தான் வழக்கில் இருந்த நூல் என்று கூறுகிறார். அத்துடன் சிலப்பதிகாரம் ஒரு நாடகக்காப்பியம் என்றும் அதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்றும் அடியார்க்கு நல்லார் நிறுவி உள்ளார். இந்திய மொழிகளிலேயே பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ள மிகவும் தொன்மையான முழுநாடகம் சிலப்பதிகாரம்தான். இந்த நாடகக்காப்பியத்தில் புறத்திணையில் உள்ள நடுகல் மரபு அப்படியே பின்பற்றப்பட்டு உள்ளது. புறப்பாட்டு மரபும் நாடக மரபுதான் என்பதை இது தெளிவாக்குகின்றது. இங்கு மற்றொன்றையும் அறிதல்வேண்டும். சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களில் “இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து ஆடினாள்” என்று இளங்கோ கூறுகிறார். இருவகை இலக்கணம் யாவை எனில் “அகக்கூத்து புறக்கூத்து என்றும், வேத்தியல் பொதுவியல்” எனவும் பிற கூத்துகளையும் கூறுவர். வேந்தன் சுட்டிய கூத்துகள் வேத்தியல் என்றும் பிறர் சுட்டிய கூத்துகள் பொதுவியல் என்றும் அழைக்கப்பட்டன. அதேபோல அகம், புறம் என்பவையும் இன்பச்சுவையையும் பிற சுவைகளையும் மையமாகக் கொண்டு ஆடுபவை என்று தெளியலாம். ஆகையால் இவை அனைத்தும் நாட்டிய சாத்திரத்தின் அடிப்படையில் தோன்றியவை என்று தெரிந்துகொள்ளலாம்.
பொருளடக்கம் | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அகெடமி