chap13 chapter12.html chapter13.html chapter14.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 13. தொல்காப்பியர் கூறும் அட்டாங்க யோகம்
பொருளடக்கம் | அத்தியாயம்-12 | அத்தியாயம்-14 | அகெடமி

அட்டாங்க யோகம் என்பது பதஞ்சலி முனிவர் தோற்றுவித்த நெறியாகும். முற்காலத்தில் “சாங்கிய நெறி” என்று ஒன்று இருந்தது. அதில் “தெய்வ நம்பிக்கை உள்ள பிரிவு”, “தெய்வ நம்பிக்கை இல்லாத பிரிவு” என்று இரண்டு பிரிவுகள் உண்டு. பதஞ்சலி முனிவர் தெய்வநம்பிக்கை உள்ள பிரிவைச் சார்ந்தவர். பதஞ்சலி முனிவரின் யோகமார்க்கம் புத்தருக்கும் காலத்தால் முந்தியது. புத்தர் பெருமானே அந்த யோகத்தைப் பின்பற்றித்தான் சமாதி அடைந்தார். மனிதரின் மனம் எளிதில் கட்டுப்படுத்த முடியாதது. மேலும் மேலும் ஆசையை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும். அது நிறைவடையவில்லை என்றால் கோபம் வரும். ஆங்காரம் வரும். அதனால் பல துன்பங்கள் உண்டாகும். அதனால் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்வதுதான் யோகம். விஞ்ஞான அடிப்படையில் நெறிப்படுத்தியுள்ளதால், இந்திய நாட்டிலும் கிழக்காசிய நாடுகளிலும், சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்நெறி சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் இந்நெறியை தொல்காப்பிய காலத்துக்கும் முன்பிருந்தே பின்பற்றி வந்துள்ளனர். கோயில் வழிபாட்டிலும் “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்று பிரித்து யோகத்தின் வாயிலாக ஞானம்பெறுவதை எல்லா ஆகமங்களும் கூறுகின்றன. தொல்காப்பியர் தமது நூலில் “அந்தணர்”, “அரசர்”, “வணிகர்”, “வேளாளர்” ஆகிய மக்களின் நெறிகளைக் கூறி, தாபதர், யோகிகளின் நெறிமுறைகளையும் கூறுகிறார். தாபதர் நெறி குறித்து கூறுவதைக் கண்ணுற்றால் தருமசாத்திரங்களில் கூறப்பட்டுள்ள “வானப்பிரஸ்தம்” என்கின்ற நெறிமுறையாகவே உள்ளதைக் காணலாம். அவர்களுக்கு ஊண் தின்னும் ஆசை இருக்கக் கூடாது. நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடைஇட்டு மொழிதல், வாய்வாளாமை என்று எட்டும் இன்றியமையாதவையாகும். உணவிலும் நீரிலும் செல்லும் மனத்தைத் தடுத்தல், ஐந்தீநாப்பணும் நீர் நிலையினும் நிற்றல், கடலும் காடும் மலையிலும் நிற்றல் முதலியவும், தாமரை, ஆம்பல், ஆமை முதலிய ஆசனங்களில் அமர்ந்திருத்தல், உண்ணும்போது உரையாடாமல் இருத்தல் என்பவையும் துறவியருக்கு உரிய நெறியாகும். இவை காட்டில் வாழ்வோரின் கடும் விரதமாகும். இவை தரும நூல்கள் குறிப்பிடுபவை. இவை தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாம். இதற்கடுத்து தொல்காப்பியர் யோகம் செய்வோருக்கு உரிய நெறியைக் கூறுகிறார். இயமம், நியமம், ஆசனம், வளிநிலை (பிராணாயாமம்), தொகைநிலை (பிரத்தியாஹாரம்), பொறைநிலை (தாரண), நினைவு (தியானம்), சமாதி என்று எட்டும் யோகநெறியாகும். இவற்றில், இயமம், நியமம், ஆசனம், சமாதி ஆகிய நான்கும் வட சொற்களாம். மற்ற நான்கும் தமிழ் சொற்களாகும். இவற்றைத்தான் தொல்காப்பியர், “நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்” என்று கூறுகிறார். அதனால் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பிருந்தே பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோக நூல் தமிழகத்தில் பரவி தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக இடம் பெற்றிருந்தது என்பது தெளிவு. வள்ளுவப் பேராசானின் அறத்துப்பாலில் “துறவு” என்ற இயலில் இக்கருத்துகள் நிறைந்துள்ளதையும் காணலாம். இதற்கு ஆதாரமாக புறநானூறு,புறப்பொருள் வெண்பாமாலை, குறள், திரிகடுகம் முதலிய நூல்களில் இருந்து நச்சினார்க்கினியர் செய்யுள்களை எடுத்துக் காட்டியுள்ளார். அத்துடன் தமிழ்ச்சொல், வடசொல் என்ற பாகுபாடு காணாது, நல்ல தமிழ்நயம் சிறக்க சாத்திர நூல்களை தமிழ்படுத்தியுள்ள முற்போக்கு நமக்கு சிறந்த நெறிமுறையாக விளங்குகிறது.
பொருளடக்கம் | அத்தியாயம்-12 | அத்தியாயம்-14 | அகெடமி