Tamil Arts Volume33 நாகசாமி என்னும் நல்லாசான்
சு ஜெயக்குமார் (S Jayakumar)
Contents | Naganika... | Home

நல்நிமித்தம் என்பது, வாழ்வில் நமக்கு வாய்க்கக் கூடிய அற்புதமான ஒரு தருணத்தை குறிக்கும் சொல். வித்யா வாசஸ்பதி, சிலை மீட்ட செம்மல், பத்மபூஷண் முனைவர் ஆர். நாகசாமி அவர்களை நான் சந்தித்ததும் அப்படி ஒரு நல்நிமித்தமே.
2001-ல் கலாக்ஷேத்ரா மாணவனாக ஐந்து வருடங்கள் இசை பயின்று, 2006 முதல் அங்கேயே இசை ஆசிரியராகவும், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் பிரிவிலும் பணிபுரிந்து வந்தேன். அப்போது அங்கு வருகைதரு பேராசிரியர்களாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பிக்க வந்த அறிஞர்கள் மூலம் ஆலயங்கள் குறித்தும், இசை, நடன வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் வடமொழி இலக்கியம் குறித்தும் விரிவாக ஒரு அறிமுகம் கிடைத்தது. அதே காலகட்டத்தில் ரீச் பவுண்டேஷன் (Reach Foundation) என்ற தனியார் அமைப்பு வார இறுதிகளில் நடத்திய கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பட்டறையிலும் கல்வெட்டியல் குறித்த ஆழ்ந்த பயிற்சி கிடைத்தது. எங்களுடைய கல்வெட்டு ஆசிரியராக இருந்த திரு ராமச்சந்திரன் அவர்கள், நாகசாமி அவர்களின் நேரடி மாணவர். 2009-ஆம் ஆண்டு, கலாக்ஷேத்ரா மாணவர்களின் ஆய்வுக்காக, மாணவர்களுடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தேன். மதியம் 12:30-க்கு மேல் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு சென்றால் என்ன என்று எங்களுக்கு தோன்றியது. மதிய உணவை முடித்துக் கொண்டு சுமார் இரண்டு மணிக்கு மடத்திற்கு சென்றோம். கலாக்ஷேத்ரா மாணவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி எங்களை அழைத்து பேசினார். அப்பொழுது என் கையில் இருந்த புத்தகத்தை பார்த்து, என்ன புத்தகம் என்று கேட்டார். அது முனைவர் கே.வி. ராமன் அவர்கள், வரதராஜ பெருமாள் கோயில் குறித்து எழுதிய நூல். மிகவும் மகிழ்ந்து வேறு என்னென்ன ஆய்வு நூல்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் சில நூல்களின் பெயர்களை சொன்னேன். நாகசாமி அவர்களை தெரியுமா என்று கேட்டார். நான், கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய நூல்களையும் வாசித்திருக்கிறேன் என்று கூறி நான் வாசித்திருந்த உத்திரமேரூர் மற்றும் செங்கம் நடுகற்கள் என்ற மிக முக்கியமான புத்தகங்களைப் பற்றி சொன்னேன். அவர் கலாக்ஷேத்ரா அருகில்தான் வசிக்கிறார், நீங்கள் அவரை சந்தியுங்கள் என்று கூறி, அருகில் இருந்தவர்களிடம் தொலைபேசி எண்ணை அளிக்குமாறு கூறினார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து, நான் சாரை தொலைபேசியில் அழைத்தேன். கலாக்ஷேத்ராவில் பணிபுரிகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு காஞ்சி மடத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி உங்களிடம் பேசச் சொன்னார் என்றேன். என்ன விஷயம் என்று கேட்டார். எனக்கு வரலாற்றிலும் கோயில் கட்டிடக்கலை மீதும் உள்ள ஆர்வத்தை சொன்னேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து சந்திக்க வரச் சொன்னார். நான் சற்று அச்சத்துடனும் தயக்கத்துடனும் அவரை சந்திக்க சென்றேன். சம்பிரதாயமாக இல்லாமல் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கலாக்ஷேத்ராவில் எனது பணியை பற்றி கேட்டார். கலாக்ஷேத்ராவை நிறுவிய ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களுடன் தனக்கு ஏற்பட்டிருந்த பழக்கத்தைப் பற்றியும் அங்கே சில முறை அவர் வந்து உரையாற்றியதையும் குறிப்பிட்டார். கோயில் கட்டிடக்கலை மீதும் வரலாற்றின் மீதும் எவ்வாறு எனக்கு ஆர்வம் ஏற்பட்டது என்று கேட்டார். என் சொந்த ஊர் திருவெண்காடு என்று அறிந்த போது சட்டென்று முகம் மலர்ந்து திருவெண்காட்டின் வரலாற்றை பற்றி விரிவாக பேசினார். சோழர் காலத்து செப்பு திருமேனிகள் பலவற்றில் திருவெண்காட்டைச் சேர்ந்தவை மிகச்சிறந்தவை என்று கூறி, ‘Thiruvengadu Bronzes என்ற ஆங்கில புத்தகத்தை வாசித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை சார்’ என்றேன். அந்த புத்தகத்தை அவருடைய அலமாரிலிருந்து எடுத்துக் கொடுத்து, ‘வாசித்து விட்டு திரும்ப கொடு. திருவெண்காட்டில் நாராயணன் வாத்தியார் என்று ஒருத்தர் இருந்தார். உனக்கு தெரியுமா?’ என்று கேட்டார். நான் ‘தெரியாது சார்’ என்றேன். ‘நாராயணன் அவர்களுடைய மகன்தான் தொல்லியல் துறையின் வல்லுனராகவும், தொல்லியல் துறை இயக்குனராகவும் இருந்த மதிப்பிற்குரிய டி.என். ராமச்சந்திரன். அவர் என்னுடைய ஆசிரியர்’ என்றார். ‘நீங்கள் கோயில் கட்டிடக்கலை குறித்து வகுப்புகள் எடுக்கிறீர்களா சார்?’ என்று கேட்டதற்கு, ‘அப்படி எதுவும் எடுக்கவில்லை. எடுக்கும் பொழுது உனக்கு சொல்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அன்று தொடங்கி பல சமயங்களில் அவருடன் தொடர்ந்து உரையாடவும், அவர் வகுப்புகளில் அருகமர்ந்து கற்கவும் வாய்ப்பு கிடைத்தது எனது நல்லூழ். எப்போது தொலைபேசியில் அழைத்தாலும், என்னுடைய சிறு ஐயங்களுக்கு கூட மிக விரிவாக பதில் அளித்த அவருடைய பெருங்கனிவை இன்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். 2010-ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் பொழுது அவர் ஆற்றிய பல பணிகளை நான் அருகிலிருந்து கண்டேன். அன்றுதான் பெரிய கோயிலின் சாந்தார அறையிலிருந்த சோழர்கால ஓவியங்களை அவருடன் பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைத்தது. சற்று கடுமையான வெயில் நிறைந்த மாலைப் பொழுதில் ஓவியங்களை பார்த்துக் கொண்டே வரும் பொழுது, ‘சந்தியா தாண்டவ மூர்த்தி பார்க்கிறாயா?’ என்று அவர் கேட்டார். நான், ‘சார்! இதோ இருக்கிறது. இந்த ஓவியம் தானே?’ என்றேன். ‘ஒரு நிமிடம்!’ என்று கூறிவிட்டு அங்கிருந்த தொல்லியல் துறை அலுவலரிடம் ஸ்ரீ விமானத்தின் மேற்கு திசை கதவை திறக்கச் சொன்னார். மாலை நேரத்து சூரியனின் வெளிச்சம் அந்த ஓவியத்தின் மீது விழும் தருணத்தில், ‘இதுதான் அந்த சந்தியா தாண்டவம், பார்த்தாயா?’ என்று கேட்டு சிரித்தார். இன்று நினைத்துப் பார்க்கும் போதும் மெய் சிலிர்க்கும் மகத்தான தருணம் அது. தொல்லியல் துறையின் அனுமதியுடன் அன்று ஸ்ரீ விமானத்தின் உச்சிவரை செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் அவரால்தான். அதே வருடம் தொல்லியல் துறையின் அறிஞராகிய திரு கே.ஆர். சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் 2 நாட்கள் நடந்தது. என்னுடைய வரலாற்று ஆர்வத்திற்கு காரணமான முனைவர் சித்ரா மாதவன் அவர்களுடன் அந்த நிகழ்வுக்கு சென்றேன். அங்கு நாகசாமி, காஞ்சி கைலாசநாதர் கோயில் குறித்து ஒரு அற்புதமான உரையை ஆற்றினார். உரை முடிந்தவுடன் என்னை பார்த்து, ‘சரியாக இருந்ததா?’ என்று கேட்டு சிரித்தார். நான் நமஸ்கரித்து, ‘சிறப்பாக இருந்தது சார்’ என்றேன். ‘ஊரில்தான் இருக்கியா? எங்க ஆளையே காணல?’ என்று கேட்டார். சில வாரங்கள் கழித்து அவர் வீட்டிற்கு சென்றேன். தஞ்சை பெரிய கோயிலில் அவர் கண்டறிந்த பல கல்வெட்டுக்களை குறித்து உரையாடும்போது, ‘பெரிய கோயில் கல்வெட்டுகளை வாசித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நான், ‘கொஞ்சம் வாசித்திருக்கிறேன் சார்’ என்றேன். ‘சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு எதிர் புறத்தில் உள்ள அதிஷ்டானத்தின் ஜகதியில் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் வரும் 'நாம் எடுப்பிச்ச கற்றளி ' என்ற வரி புகழ்பெற்றது. அந்த கல்வெட்டின் முதல் பகுதியில் இராஜராஜனின் சாசன சுலோகம் வடமொழியில் அமைந்துள்ளது. அதை வாசித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். ‘உங்களுடைய தஞ்சை பெருவுடையார் கல்வெட்டுக்கள் என்ற புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்’ என்றேன். உடனே அவர், ‘பொதுவாக சாசன ஸ்லோகம், செப்பேடுகளில் மட்டுமே காணப்படுவது. சுவாரஸ்யமாக தஞ்சை கோயிலில் கல்வெட்டில் உள்ளது. அத்துடன், இராஜராஜனின் நேரடியான ஆணை தாங்கிய செப்பேடுகள் எதுவும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கல்வெட்டின் வாயிலாக சாசன ஸ்லோகம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்’ என்றார். அன்று, தஞ்சை பெரிய கோயில் குறித்து விரிவாக உரையாடி, அவரது ஆய்வு நூலான ‘TANJORE BRHADISVARA TEMPLE: Form and Meaning’ -ல் கையெழுத்து பெற்றுக் கொண்டு வந்தேன். நண்பர்களுடன் வருடா வருடம் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியில் உள்ள பல தொன்மையான சோழர் காலத்து கோயில்களுக்கு சென்று கட்டிடக்கலையையும் சிற்பங்களையும் கண்டு வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய சோழர் காலத்து கோயில்கள் குறித்த புத்தகங்கள் எங்களுடைய பயணங்களுக்கு உறுதுணையாக இருந்தன. இந்த அளவிற்கு இணையத்தில் புத்தகங்கள் கிடைக்காத காலகட்டம். அதனால் நூலகங்களில் இருந்து புத்தகங்களை பெற்று அவற்றை பிரதியெடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். 2010-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு நாள் நாகசாமி அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது, அதற்கு முதல் வாரம் தஞ்சைக்கு அருகில் உள்ள புள்ளமங்கை கோயிலுக்கு சென்று வந்ததை கூறினேன். அவர், புள்ளமங்கை ஞானசம்பந்தர் பாடிய தலம், சோழர்கால கற்றளிகளுள் மிகச்சிறந்த ஒன்று என்று அதைப் பற்றி கூறிவிட்டு, ‘சிற்பங்களை பார்த்தாயா?’ என்று கேட்டார். நான், ‘பார்த்தேன் சார், அற்புதமான சிற்பங்கள்’ என்றேன். ‘துர்க்கை சிற்பம் எப்படி இருந்தது?’ ‘சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக தரைத்தளத்தில் டைல்ஸ் ஒட்டி சிறு மண்டபம் கட்டி விட்டார்கள். அதனால் அதனுடைய அழகு சற்று குறைகிறது’ என்று வருத்தத்துடன் சொன்னேன். பொறுமையாக கேட்டுக் கொண்ட அவர், ‘வேட்டுவ வரி படித்தாயா?’ என்று கேட்டார். நான் ஒன்றும் புரியாமல், ‘வேட்டுவரியா? எப்போ சார்?’ என்றேன். ‘அந்த துர்க்கை சிற்பத்தின் முன் நின்று சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில் கொற்றவையை வர்ணிக்கும் வரிகளை வாசிக்க வேண்டாமா?’ நான் அப்பொழுதுதான் சிறிது புரிந்து கொண்டு, ‘இல்லை சார். நான் வாசிக்கவில்லை’ என்றேன். ‘அதை வாசித்தால்தான் நீ ரசித்ததாக அர்த்தம்’ என்று கூறி தொலைபேசியை வைத்தார். அதற்காகவே அடுத்த ஒரு மாதத்திற்குள் புள்ளமங்கை கோயில் சென்று வேட்டு வரி பாடலை அங்கே அமர்ந்து வாசித்துவிட்டு அங்கிருந்தே அவரை அழைத்தேன். நான் மீண்டும் புள்ளமங்கை சென்று வேட்டுவ வரியை வாசித்தேன் என்று சொன்னால் பாராட்டுவார் என நினைத்தேன். அவர், ‘அப்படியா? சரி’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். இலக்கியங்கள் மற்றும் பாடல்கள் மூலம் சிற்பங்களை ரசிக்க வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து எங்கு சென்றாலும் அந்த கோயில் குறித்து ஒரு பாடல் அல்லது ஒரு இலக்கியத்தை அங்கேயே அமர்ந்து வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இன்றுவரை அதை கடைபிடித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் நாகசாமி அவர்களை நினைத்துக் கொண்டே வாசிக்கிறேன். கோயில்களை, சிற்பங்களை, ஓவியங்களை, இசை நடன நாடக மரபுகளை வரலாற்றில் எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு அவற்றை ரசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தர அவரை விட ஒரு சிறந்த ஆசிரியர் அமைவது கடினம். உத்திரமேரூர், காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில் இவை மூன்றையும் அவருடன் அவருடைய கண்ணோட்டத்தில் பார்த்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. 2012-ஆம் ஆண்டு முதல், அவர் தன்னுடைய இல்லத்திலும் பிற நிறுவனங்களுக்காகவும் நடத்திய பல கல்வெட்டு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன். வரலாறு, தொல்லியல் மாணவர்கள் மட்டுமின்றி, பிற துறைகளை சேர்ந்த மாணவர்களும், வரலாற்றில் ஆர்வம் இருப்பவர்களும் கல்வெட்டுகளை வாசிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளிடம் கூட கல்வெட்டு படிக்க கற்றுக் கொள்கிறாயா என்று கேட்பவர் அவர். ஒரு முறை என்னிடம் ‘தமிழ்நாட்டில் விரிவாக கல்வெட்டு வாசிக்கக் கூடிய ஒரு பத்தாயிரம் பேரை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு’ என்று கூறியுள்ளார். அதே ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நிகழ்ந்த சோழர்கால கலை மரபுகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரை நுட்பமான ஒன்று. அவருடன் அந்த இரண்டு நாட்களும் உரையாடி நிறைய கற்றுக் கொண்டேன். 2013-ஆம் ஆண்டு திருமழபாடி கோயிலுக்கு சென்றிருந்த பொழுது அவரை தொலைபேசியில் அழைத்தேன். கோயிலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு என்னை போக சொல்லி, அங்குள்ள கல்வெட்டு வாசகங்களை கூறி, என்னால் அதை வாசிக்க முடிகிறதா என்று கேட்டார். எவ்வளவு துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்று வியந்தபோது ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் அவருக்கு மனப்பாடமாக நினைவில் உள்ளது என்றார். மலைத்துப் போனேன். அனைத்தையும் மனனம் செய்து கற்கக் கூடிய மரபில் வந்தவர் அவர் என்பதே எனக்கு அப்பொழுதுதான் உறைத்தது. 2014-ஆம் ஆண்டு கோவையில் ஐஜிஎன்சிஏ மற்றும் இன்டக் (IGNCA & INTACH) சார்பாக நான் ஒருங்கிணைத்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து 10 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் முதல் நாள் நாகசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று தஞ்சை பெரிய கோவில் குறித்து விரிவானதொரு உரையை நிகழ்த்தி சிறப்பித்தார். 2015-ஆம் ஆண்டு இந்தியன் ஆர்ட் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian Art History Congress) சார்பில் 3 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அவர் கோவையில் தங்கியிருந்தார். அங்கு அவருடன் இருந்து பல தகவல்களை கற்றுக் கொள்ள முடிந்தது. கருத்தரங்கின் தொடக்க விழாவில் அவரை அறிமுகப்படுத்தும் பொழுது Historian என்று அறிமுகப்படுத்தினேன். என்னை உடனே நிறுத்தி மேடையிலேயே, I am not a Historian, என்று சொல்லி என்னை திருத்தினார். தன்னுடைய உரையின் பொழுதும், 'நான் தொல்லியலாளன், கல்வெட்டாய்வாளன் மட்டுமே' என்று கூறினார். அவர் எழுதி, பல விமர்சனங்களுக்கு உள்ளான ‘Mirror of Tamil and Sanskrit’ என்ற ஆங்கில நூலை அன்று எனக்கு கையெழுத்திட்டு அன்பளிப்பாக அளித்தார். 2016-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியன் அவர்களுடைய ஏற்பாட்டில் நாகசாமி சார் நடத்திய கல்வெட்டு பயிற்சி முகாமிற்கு சென்றிருந்தேன். என்னை பார்த்தவுடன், ‘உனக்குத்தான் தமிழ் பிராமி படிக்க தெரியுமே, நீ எதற்காக வந்தாய்?’ என்று என்று சிரித்துக் கொண்டே கேட்டார். நான் பதில் சொல்லாமல் நின்றேன். உடனே, ‘ஓஹோ! நான் ஒழுங்காக பாடம் நடத்துகிறேனா இல்லையா என்று பார்க்க வந்தாயா?’ என்றார். நான் சிரித்து விட்டு வகுப்பில் அமர்ந்தேன். அந்த மூன்று நாட்களும் அவர் வகுப்புகள் நடத்திய விதம் அங்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் பெரும் திறப்பாக இருந்தது. இரண்டாம் நாள் சில தமிழ் வார்த்தைகளை பிராமியில் எழுதி வரிசையாக மாணவர்களை வாசிக்கச் சொன்னார். என் முறை வந்தவுடன் ஒரு புன்னகையுடன் என்னை பார்த்துவிட்டு நீண்ட வாசகம் ஒன்றை பலகையில் எழுதினார். உனக்கு திரைப்பட பாடல்கள் பிடிக்கும் இல்லையா என்று கேட்டுவிட்டு வாசிக்கச் சொன்னார். நான் பார்த்தவுடனே பெரிதாக சிரித்து விட்டேன். சுற்றி உள்ளவர்கள் ஒன்றும் புரியாமல் எதற்கு சிரிக்கிறேன் என்று குழம்பினார்கள். நான் வாசித்தவுடன் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சார் பலகையில் எழுதிய வாசகம் ‘ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு’. அந்தப் பயிலரங்கில் இந்திய எழுத்துருக்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஒரு முழு சித்திரம் கிடைத்தது. தினமும் அனைவரும் அந்த எழுத்து வடிவங்களை பல முறை எழுதிப் பழக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்து ஆசிரியர் போல் எங்களுடைய குறிப்பேடுகளை பார்த்து பிழை திருத்தி, மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்வார். அவர் தொல்லியல் துறையில் எவ்வளவு பெரிய வல்லுனரோ அதே அளவிற்கு கற்பிப்பதிலும் பேரார்வம் கொண்டவர். கண்டிப்பாகவும், அதேசமயம் கலகலப்பாகவும் வகுப்பெடுக்கும் அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டது, மிகச் சிறந்த கற்றல் அனுபவம். 2017-ல் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை அவர் தொடர் வகுப்புகளாக எடுத்தார். தொல்லியல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர்களும் அந்த வகுப்பில் கலந்து கொண்டார்கள். ஒரு நாள், வகுப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விட்டேன். வரவேற்பறையில் உள்ள சோபாவில் அவர் அமர்ந்திருந்தார். ‘நேரம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார். ‘இல்லை சார். நான்தான் சீக்கிரம் வந்து விட்டேன்’ என்றேன். ‘நேற்றைக்கு என்ன படித்தோம்?’ என்று அவர் கேட்டவுடன் நான் முன்தின பாடத்தை சொன்னேன். ‘சரி அந்த பாடல் வரிகளை சொல்லு’ என்றார். நான் கையில் வைத்திருந்த சிலப்பதிகார புத்தகத்தை பிரித்தேன். ‘இப்பொழுது எதற்கு புத்தகத்தை எடுக்கிறாய்?’ ‘நீங்கள் தானே சார் நேற்று நடந்த பாடத்தை சொல்ல சொன்னீர்கள்?’ பதிலுக்கு உடனே, ‘இன்னும் மனப்பாடம் பண்ணலையா?’ என்று கேட்டுவிட்டு என்னை பார்த்தார். அவருக்கு சற்று கோபம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து தயங்கியவாறே, ‘இல்லை சார்’ என்றேன். ‘இதே தியாகராஜர் கீர்த்தனை என்றால் புத்தகத்தை பார்த்து பாடுவாயா?’ ‘இல்லை சார்’ ‘அப்போ சிலப்பதிகாரம்னா அலட்சியமா?’ என்றார். நான் பதில் ஏதும் சொல்லாமல் அவர் காபி குடித்து முடிப்பதற்குள் அரங்கேற்றுக் காதை வரிகளில் சிலவற்றை மனப்பாடம் செய்து சொன்னேன். வாழ்வில் சில நூறு கல்வெட்டுக்களையாவது மனனம் செய்ய வேண்டும் என்றும் பக்தி பாடல்களையும் தமிழ் இலக்கியத்தையும் சிறிதளவேனும் நினைவில் நிறுத்த வேண்டும் என்றும் அன்றைக்கு என் மனதில் வேரூன்றியது. அந்த ஐந்து நாட்களும் சிலப்பதிகாரத்தில் உள்ள நடனம், கூத்து மற்றும் நாடகம் குறித்து பல நுட்பமான விஷயங்களை கற்பித்தார். நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாடகம் மற்றும் நடனம் தொடர்பான பல குறிப்புகளை சிலப்பதிகாரத்துடன் ஒப்பிட்டு கூறினார். கலை, வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வில் ஈடுபடும் அனைவரும் தமிழும், வடமொழியும் ஆழமாக கற்றறிய வேண்டும் என்பதை முழுமையாக உணர்ந்த நாட்கள் அவை. இதுபோன்று பல நினைவுகள், சம்பவங்கள். 2018-ல் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டவுடன் பெசன்ட் நகரில் அவருடைய இல்லத்திற்குச் சென்று பழங்களை கொடுத்து நான் வாங்கிச் சென்றிருந்த அங்கவஸ்திரத்தை அவருக்கு அணிவித்தேன். அதை கையில் எடுத்து எனக்கே திருப்பி போர்த்தி, ‘நீயும் இது போன்ற விருது வாங்க வேண்டும்’ என்று சொன்னார். ‘இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா சார்!’ என்று சிரித்தேன். உடனே, ‘அப்படி சொல்லக்கூடாது. நிச்சயம் நீ பெரிய அளவில் சாதிப்பாய்’ என்றார். 2019-ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டுகள் பற்றிய தேசிய கருத்தரங்கம் சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. அதில் என்னை கலந்து கொள்ள செய்தார். பிராமி, நாகரி, கரோஷ்டி எழுத்துருக்கள் குறித்தான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மூன்று நாட்களும் பல அமர்வுகளாக அவர் வகுப்பு நடத்தினார். அப்போது உருவாகி வந்து கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நான் ஆராய்ச்சி ஆலோசகனாக பணிபுரிகிறேன் என்று சொன்ன பொழுது, மகிழ்ந்து ‘சிறப்பாக பணிபுரிய வேண்டும்’ என்று வாழ்த்தினார். தமிழக தொல்லியல் வரலாற்றை மிக விரிவாக ஆய்வு செய்து இந்நிலத்தின் தொன்மையையும் பெருமையையும் உலக அரங்கின் முன் வைத்தவர் அவர். தமிழ்நாட்டிற்கு என்று தனியே ஒரு தொல்லியல் துறை தொடங்கப்பட்ட போது அதன் முதல் இயக்குநராக பொறுப்பேற்று பல நூறு கல்வெட்டு அறிஞர்களை தம்முடைய மேற்பார்வையின் கீழ் உருவாக்கினார். பலருக்கு தாமே வகுப்புகளை எடுத்து, அவர்களை தொல்லியல் துறையில் பணியமர்த்தி, தமிழகத்தில் உள்ள பல நூறு கல்வெட்டுகளை வாசிக்க செய்து அவற்றை படியெடுத்ததுள்ளார். தன் துறையில் மாபெரும் பணிகளை செய்த கர்மயோகி அவர். தொல்லியல், இந்திய கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாணயவியல், ஓவியக்கலை, இசை, நடனம், தமிழ், வடமொழி, பண்டைய இந்திய எழுத்துக்கள், கல்வெட்டியல், வரலாறு, வேத இதிகாச புராணங்கள் ஆகியவற்றில் மாபெரும் புலமையும், ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் வழிகாட்டியாக உள்ளது. கல்வெட்டுக்கள்,தொல்லியல் சார்ந்து அவருடைய கள ஆய்வுகள், ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் நூல்கள் குறித்தும், தமிழக தொல்லியல் துறை இயக்குனராக அவர் செய்த பல்வேறு பணிகளைக் குறித்தும், அவரிடம் மாணவ மாணவியராக பயின்றவர்களும், அவருடன் தொல்லியல் துறையில் பணி புரிந்தவர்களும் விரிவாக பதிவு செய்துள்ளனர். அவர் துறை சாராது, பிற துறைகளில் இருந்து கல்வெட்டு, கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கல்வெட்டு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் மிகுதியால் விரிவான தேடலும் ஆய்வு நோக்கும் கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அவர் மிகப்பெரிய ஆதர்சமாக இருந்துள்ளார். அவர்களுள் ஒருவனாக, அந்த பேராசானின் அருகமர்ந்து கற்ற அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Contents | Naganika... | Home