Tamil Arts Volume33
சேக்கிழார் கண்ட நன்தனார்
மோகன் நாகசாமி
ஐங்கரன் காப்பு
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவராம்
செயல் உடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிந்திட
மயில்வாகனன் சோதரன்தாளே காப்பு
நன்தனார் சரித்திரம்
அம்பலத்திலாடும் ஆதியந்தமிலா பரஞ்ஜோதியை
ஆனந்தகூத்தனை மறையோர் போற்றும் மறவனை
இப்பிறவிப் பயனடைய தொழுதேத்த தினமெண்ணி
ஈசனாலயத் தொண்டு பலசெய்த ஒப்பிலா நந்தன்
உணர்வு தொடங்கியது முதல் முக்கண்ணன்பால்
ஊர்ந்த பெரும் காதலினால் செம்மைபுரி சிந்தையார்
எச்செயலும் எந்தைக்கே என்றமனம் கொண்டு
ஏற்றமுடன் அதைச் செய்து உளம் மகிழ்வாரே
ஐயரவர் கோயில் தொறும் பேரிகை முதல் முக்கருவி
ஒலிக்க நேர்த்தியாக பதன்செய்து தோல்வகையும்
ஓங்காரம் ரீங்காரம்செய் வீணைக்கும் யாழுக்கும் தந்திரியும்
ஔஷதக் கோரோசனை அர்ச்சனைக்கு அளித்து மகிழ்வாரே
திருப்புன்கூர் நாதர்
கண்குளிரக் காண வந்த அன்பர்குக்
காட்சிதந்தார் மறைத்த நந்திதனை
சற்றே விலக்கி திருப்புன்கூர் நாதரே
சாத்துவிக அன்பரும் ஆடிபாடி தொழுதாரே
தனைஉணர்ந்து வலம்போவார்பின் பொருசூழல்
தானு மடுத்ததுகண் டாதரித்துக் குளந்தொட்டார்
பனிமலை நாதர் திருவருளாற்
பார்செழிக்க குளத்தளவு சமைத்ததற்பின்
மங்கைபாகன் இடங்கொண்ட கோயில் வலங்கொண்டு
மாதவர் எண்ணம் மனம் கொண்டு விடைகொண்டு
நடங்கொண்டு தம்பதியினை அடைந்தாரே
நாதன் புகழ்பாடியே மகிழ்ந்தாரே
சிறம்பலத்தவர் ஆடல் காண ஆவல்
அண்டர்புகழ் நடங்கண்டு
ஆடவல்லான் அருள்கொண்டு
இம்மைதுயர் போகவேண்டி
ஈடிலாஆவல் கொண்டு
உயர்தில்லை போகவேண்டி
ஊனுருக நெஞ்சுருகி
என்நாளும் ஈசனடி
ஏத்திப்பாடி வாழ்ந்தாரே
ஐயன்னாடல்காண தில்லைபோவேனென்
றெண்ணம்கொண்டு துயில்வார்
பொழுதில் நாளைபோவேன் என்பார்
நாளைபோவார் என்றபெயரும் பெற்றாரே
ஒவ்வாத தன்நிலை யெண்ணி
ஓர்வழியின்றி வருந்தினாரே
தில்லை எல்லை அடைதல்
ஓர்நாள் நினைவும்கனவும் உளம்நிறைந்த தில்லைநாதர்
ஆடல்காண அவரெல்லை அடைந்தாரே
வேதியர் வேள்வியோடு கூடகோபுர மாடமளிகை
எழில்தில்லை கண்டு மகிழ்ந்தாரே
தன்னிலை எணிநாணி
எல்லைதனை வலம்வந்தாரே
வலம்வந்து வலம்வந்து
கண்துயில்கொண்டாரே
அவனருளால் அவன்தாள் அடைதல்
துயில்கொண்ட அன்பர்
கனவதினில் காட்சிதந்து
அம்பலவானர் தனைக்
காணும் வழிமொழிந்தாரே
அவ்வண்ணம் ஆயிரவர்தமக்கு அன்பரை
அழைத்துவர ஆணைதந்தாரே
தில்லைம்பலர் அருளோடு புனலாடி அனலாடி
விண்ணவர் அந்தணர் அதிசயிக்க
ஆசில் மறைமுனியாகி அம்பலவர் தாளடைந்தாரே