chap17 chapter16.html chapter17.html chapter18.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 17. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
பொருளடக்கம் | அத்தியாயம்-16 | அத்தியாயம்-18 | அகெடமி

சங்கத் தமிழ் இலக்கியங்களில் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் சிறப்பானவை. இரண்டு பாடல்களும் ஒரே பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் குடபுலவியனார் என்ற புலவர் பாடியவை. அம்மன்னன் தலையாலங்கானம் என்ற ஊரில் சோழன், சேரன் இருவருடனும், ஐந்து பெரும் வேளிர்களுடனும் கடும் போரிட்டு வென்று வாகை சூடினான். தலையாலங்கானப் போர் மிகவும் பயங்கரமான போர். ஆயிரக்கணக்கான வீரர்கள் வெட்டி வீழ்த்தப் பட்டனர். நூற்றுக்கணக்கான யானைகள் தும்பிக்கைகள் துண்டிக்கப் பட்டு தரையில் புரண்டு உயிருக்குத் துடித்தன. இந்தப் போரை நேரில் கண்ட புலவர் அம்மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்தது இரண்டவாது பாட்டு. அவர் அரசனைப் பார்த்து, “அரசே இவ்வுலகம் ஆகாயத்தில் இருந்து விழும் மழையும், ஊற்று நீரும், கடல் நீரும்” என இம்மூன்று நீரும் சூழ்ந்து விளங்குகிறது. இதை முன்னோர்கள் எல்லாம் வென்று விண்ணுலகத்தை அடைந்து புகழ் பெற்றனர். நீயும் ஆற்றல் மிகுந்தவன். உன்னுடைய கோட்டைக்கு வெளியே உள்ள அகழியைப் பார். எத்தனை எத்தனை மீன்கள் நீந்தி மகிழ்ந்து வாழ்கின்றன. சிறிய மீன், பெரிய மீன், கெண்டை மீன், வாளை என்றெல்லாம் பலவகை மீன்கள் வாழ்கின்றன. நீ இறுதியில் போகவேண்டிய சுவர்க்க லோகத்துக்குப் போக விரும்பினால் அல்லது உன் ஆற்றல்களை எல்லாம் காட்டி போரில் வெல்ல விரும்பினால், நிலையான புகழ் பெற வேண்டினால் நான் சொல்வதைக் கேள். இம்மனித உடல்களுக்கெல்லாம் நீர் மிக இன்றி அமையாதது. அந்த உடல்களுக்கு யார் உண்டி கொடுக்கிறார்களோ அவர்கள்தான் உடலையும் உயிரையும் கொடுத்தவர் ஆவார். உண்டி என்றால் என்ன? உணவின் கலவை. அந்த உணவு எனப்படுவது நிலத்தோடு சேர்ந்த நீர்தான். “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே”. இந்த நீரையும் நிலத்தையும் யார் இணைத்து உணவை உண்டாக்குகிறார்களோ அவர்கள்தாம் உடலையும் உயிர்களை தந்தோர் ஆவர். அதுவன்றி நிலத்தில் வித்துக்களை நட்டு, மழை பெய்யாதா என்று வானை நோக்கியே நின்றாலும் மழையின்றி புன்னிலமாகில், அந்நிலத்திலிருந்து ஏதும் விளையாது. அந்நிலத்திலிருந்து உனக்கு எந்த வரியும் கிடைக்காது. வரும் வரியை வருவாயாக நம்பி ஆளுகின்ற அரசனுக்கு அது எந்தவகையிலும் உதவாது. அரசனுக்கு நிலத்திலிருந்து வரும் வரியே முக்கிய வருவாய். அதனால் அரசுக்கு புன்னிலத்தால் பயனில்லை. எனவே எங்கெல்லாம் நிலம் குழித்துள்ளதோ அங்கெல்லாம் நிலைகளைத் தேக்கி உணவைப் உணவைப் பெருக்கி பெருக்கி உயிர்களையும் உடலையும் தோற்றுவோர், காப்போரே, சிறந்தோர். மற்றெல்லாரும் சிறந்தோரல்லார் என்று புலவர் பாடினார். இப்பாடலில் இரண்டு குறிப்புகள் உள்ளடங்கியுள்ளன. அரசே நீ போரில் ஏராளமான உடலையும், உயிரையும் கொன்று அழிக்கிறாய். அது சிறப்பு அல்ல. அதற்கு மாறாக உன் நாட்டிலே நீர் நிலைகளை குழிந்த இடங்களில் எல்லாம் பெருக்கி, ஏராளமான உயிர்களையும் உடலையும் காப்பாற்றினால் அது நினது புகழுக்கும், வெற்றிக்கும், மேல் உலகு செல்லும் வழிக்கும் உதவும். மூன்று நீர்களால் சூழப்பட்டதே ஆயினும் ஊர்ப்புறங்களில் எல்லாம் நீர் நிலைகள் இருந்தால் ஒழிய நாடு சிறக்காது என்பது கருத்து. எனவே ஊர் தோறும் குழிகளைத் தோண்டி நீரைச் சேமித்து அதைப் பயன்படுத்த அரசும் மக்களும் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். பெரும்பாலான நமது ஊர்ப்புறங்களில் குளங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பண்டைய காலத்தில் நம் மக்கள் பராமரித்துப் பயன்படுத்தி வந்தனர். இன்று குடியாட்சி நிறைந்த காலமெனக் குரல் கொடுக்கும் பெருமக்கள், குளங்களைத் தூர் நிறையவும், செடி கொடிகள் வளர்ந்து பாசி ஏறி, படிப்படியாகக் குறுகி வறண்டு போகவும், ஊரின் மாபெரும் குப்பைத் தொட்டியாகவும் மாற்றிவிட்டனர். கட்சி ஆட்சி சிறப்பினால், ஆளுங்கட்சியினர் அதை கைப்பற்றி பிளாட் போட்டு விற்று பெரும் பொருள் ஈட்டவும், பெரு நகருக்கு ஓடவும் ஆலோசித்து திட்டம் தீட்டலாம் எனவும் ஆலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றும் வருகின்றன என்பர். முற்காலங்களில் ஊர் சபையார் தங்கள் ஊர்ப்பணிகளை தாங்களே செய்து கொள்ளவும், அதற்கு தமக்குள்ளே ஒரு வரியை விதித்துக் கொண்டு பணி செய்வர். அதற்கு “உள்வரி” அல்லது “அந்தராயம்” அல்லது “ஏரி வரி” என்று பெயர். ஊரில் உள்ள ஒவ்வொரு குடி மகனும் தங்கள் ஊர் குளங்களை ஆண்டுதோறும் பராமரிக்க, உடல் உழைப்பும் அல்லது அதன் பங்காக பணமோ கொடுத்து, செய்துகொள்வர். குடியாட்சி என மார் தட்டி ஊராட்சி முறையே பெயருக்கு இருந்தாலும், அந்த ஆட்சியை அனுமதிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளதால் அது மனமிறங்கி என்று புரிவரோ, அறியோம். நம் நீர்நிலைகளை நாமே தூய்மை செய்ய, நாம் ஏன் பிறர் கையை எதிர்பார்க்கவேண்டும்? கான்ட்ராக்டர் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியதாகப் போய்விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் அவரவர் தொகுதிகளை மேம்படுத்த அரசு ஐந்து கோடி ரூபாய் கொடுக்கிறது. ஐந்தாண்டு பதவிக் காலத்தில் 25 கோடி ஒவ்வொரு எம்பியும் பெறுகின்றனர். தொகுதிக்கு இவர் என்ன செய்தார்? எவ்வளவு செலவு செய்தார்? என்று ஊராரே கேட்கும் நிலை வந்தால் ஏதாவது செய்வார் எம்பிக்கள். எம்பிக்களுக்கு பிற மாத சம்பளம், போக்குவரத்துச் செலவு என்ற செலவுகள் எல்லாம் அரசே மேற்கொள்வதால் அவர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டுப் பணத்தை ஊர் பக்கம் திருப்பினால், நாடே சிறக்கும் அல்லவா?. இந்த சங்கப் பாடலில் மற்றும் ஒரு சிறப்பும் உண்டு. இதில் உள்ள பல கருத்துக்கள் தைத்திரிய உபநிஷத்தில் உள்ள கருத்துக்களாகக் காணப்படுகின்றன. அந்தப் பகுதி உணவின் சிறப்புகளைக் கூறும் பகுதியாகும். உணவு என்பதை வேதம் “அன்னம்” என்று கூறுகிறது. “நிலம் என்பதுதான் உணவு. அந்நிலம் ஆகாசத்தில் திளைக்கிறது. ஆகாயத்தில் தொங்கவிட்ட பந்துபோல் சுழன்று வருகிறது. ஆகாயமானது நிலத்தின் மேல் நிற்கிறது. நிலத்தின் மேல் ஆகாயமும், ஆகாயத்தின் கீழ் நிலமும் நிற்பதுபோல் காணப்படுகின்றன. இதே போல் நீர் என்பது உணவு. நீரில் உணவைத் தோற்றுவிக்கும் சக்தி உள்ளது. அதே போல் உண்மையான ஜோதியில் நீர் நிறைந்து நிற்கிறது” என்றும் உபநிஷத் கூறுகிறது. இது ஒருவிதமான தத்துவத்தைக் குறிக்கிறது. கடல் பரப்பில் உள்ள நீரை ஜோதியான சூரியனின் வெப்பக் கதிர்கள் உறிஞ்சி ஆகாயத்துக்கு எடுத்துச் செல்கின்றன. அவைதான் ஆகாயத்தில் மேகமாகத் திகழ்கின்றன. மேகங்கள்தான் இடியோடு கூடிய மின்னல் உடன் தேஜோமயமாக விளங்குகின்றன. அவை இயங்கும்போது உராய்ந்து இடியுடன் கூடிய மழையாகப் பெய்கின்றன. கடல் நீர் கதிரவன் கதிர்களால் கவரப்பட்டு ஆகாயத்தில் சென்று மழை நீராகப் பெய்கின்றன. நீருண்ட மேகத்தில் தேஜஸ் இருப்பதால் நிலத்தில் பெய்யும்போது அச்சக்தி நிலத்தோடு இணைந்தால் நிலத்தில் பயிர்களாகவும், செடி, கொடி, மரங்களாக விளைந்து உயிர் வாழ் மக்களுக்கு உணவாக மாறுகின்றன. “ஆபோ வா அன்னம்: ஜ்யோதி: அன்னாத: அப்சு ஜ்யோதி: ப்ரதிஷ்டித: ஜ்யோதிஷ ஆப: ப்ரதிஷ்டித: தத் ஏதத் அன்னம் அன்னம் ப்ரதிஷ்டிதம்:” (அப்பு என்றால் நீர் என்பது பொருள்) “ப்ருத்வி வா அன்னம், ஆகாசோ அன்னாத: ப்ருத்வ்யாம் ஆகாச ப்ரதிஷ்டித: ஆகாசே ப்ருத்வி ப்ரதிஷ்டிதா: ததேத் அன்னம் அன்னே ப்ரதிஷ்டிதம்” என்று கூறுகிறது உபநிஷத். எவன் ஒருவன் இதை அறிகிறானோ அவன் மிகவும் புகழ் படைத்தவனாகவும், நல்ல மக்களைப் பெற்றவனாகவும், பசுக்கள் நிறைந்தவனாகவும், திகழ்வான் என்று கூறுகிறது. இந்த உபநிஷதம் உடலுக்கு நீர் தேவை. நீரில் தான் உணவு உள்ளது. நிலத்தில் உணவு உள்ளது. நீரும் நிலமும் இணைந்தால் உணவு உண்டாகிறது. ஆதலில் எங்கும் நீர் நிலைகளின் தேவையை, மனிதன் அறிய வேண்டும் என்பது கருத்து. மாற்றானை அழித்து மார் தட்டுவதைக் காட்டிலும், உணவைப் பெருக்கி உயிர்களைப் பாதுகாத்தலே அரசின் கடன் என்பர் தமிழ் புலவர். “நீரின்றி அமையா உலகு”, “யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”, “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே”, நெடும் வளமும் பொருளும் ஆட்சியும் வேண்டின் நீர் நிலைகளைப் பெருக்கி, உணவு தோற்றுவிக்கும் உழு குடி வாழ்வை உயர்த்துவதே ஆள்வோர் கடன் என்பர். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்” என்றார் வள்ளுவப் பேராசான். “வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயிரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயரும்” என்பது தமிழ் மக்களின் முதுமொழி.
பொருளடக்கம் | அத்தியாயம்-16 | அத்தியாயம்-18 | அகெடமி