chap16 chapter15.html chapter16.html chapter17.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 16. சங்கத் தமிழகத்தில் அந்தணர்கள்
பொருளடக்கம் | அத்தியாயம்-15 | அத்தியாயம்-17 | அகெடமி

சங்க நூல்களில் ஒன்றான பரிபாடலில், கோயில் விழாக்களில் ஆகம நூல்களைக் கற்றறிந்த அந்தணர்கள் குடநீராட்டு போன்ற விழாக்களை நடத்தியதாகவும் பிற அந்தணர்கள் அப்போது பொன்னாலான கலன்களில் திருஅமுது முதலியவற்றை ஏந்தி வந்தனர் எனவும் குறிப்பு உள்ளது. “விரிநூல் அந்தணர் விழவு தொடங்க புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப...” என்று இடம்பெற்று இருப்பதைக் காணலாம். ஆதலால், ஈராயிரம் ஆண்டுகளாக வந்த தமிழ் மரபு இது. ஆனால் இக்காலத்தில் “அந்தணர் என்றால் பார்ப்பனர் அல்ல” என்று வாதிடுவோரும் உண்டு. அப்படிச் சொல்வோர் தமிழ் அறிந்தவர்கள் அல்லர். எதையும் ஆதாரத்தோடு அறிவது பகுத்தறிவாளர் நெறி, கடமையும்கூட! தமிழர் தம் மரபுகளை அறிய பெரிதும் உதவுவது தொல்காப்பியம் என்னும் மிகத் தொன்மையான நூலாகும். அதில் அந்தணர், அரசர், வணிகர், வேளாண்மாந்தர், பாணர், விறலியர் ஆகிய ஆடல் மகளிர், பொருநர் போன்ற பல குடிமக்களைப்பற்றியும், அவர்களது வாழ்க்கை முறைகளைப்பற்றியும் விரிவாக செய்திகள் உள்ளன. அவர்கள் கல்வி தொழில்முறைபற்றியும் செய்திகள் உள்ளன. அவரவர் தொழில்களில் போட்டி போட்டுக்கொண்டு வென்றவர் வாகை சூடியதாகக் கூறும் சூத்திரங்கள் உள்ளன. அந்தணர் தொழில் ஆறு வகைப்படும்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கோடல், கொடுத்தல் என்ற அறுதொழில்கள் உடையோர் அந்தணர் ஆவர். இவர்கள் ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் என்ற மூன்று வேதங்களுக்கும் முதலிடம் கொடுத்துக் கற்றனர். இவை வேள்வி முதலிய செய்வதற்கான இலக்கணமாகவும் வியாகரணத்தால் ஆராயப் படுவதால் இலக்கியமாகவும் கருதப்பட்டன. இதைக் கூறும் நச்சினார்க்கினியர், இவற்றை அடுத்து அந்தணர் அதர்வண வேதத்தையும், ஆறு அங்கங்களையும், தரும நூல்களையும் படித்தனர். இவை இரண்டாம் நிலையாகக் கருதினர் என்கிறார். ஆறு அங்கங்களில் நிருக்தம் என்பது வேதத்தில் வரும் சொற்களை ஆராயும் கல்வி. வேதச்சொற்களையும், உலகியற் சொற்களையும் ஆராய்வது ‘வியாகரணம்' எனப்பட்டது. இது ஐந்திரம் முதலிய நூலாகும். (ஐந்திரம் என்பது பிராதிசாக்கியம் என்று அழைக்கப் பட்டது. அக்காலத்தில இந்நூல் கற்கப்பட்டதால் தொல்காப்பியர் தமது நூலை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம் எழுதினார் என்று அறிகிறோம். இது சொல் குறித்த ஆராய்ச்சி. இதையே “வியாகரணம்” என்றனர்.) இத்துடன் போதாயனீயம், பாரத்வாசம், ஆபத்தம்பீயம், ஆத்ரேயம் முதலிய கல்ப நூல்களையும் நாராயணீயம், வாராகம் முதலிய எழுத்தாராய்ச்சி ஆகிய பிரம்மமும், செய்யுள் இலக்கணமாகிய சந்தமும் கற்றனர். ஆக, நிருக்தம், வியாகரணம், கல்பம், பிரம்மம், கணிதம், சந்தம் என்பவை “ஆறங்கம்” ஆகும் (அந்தணர் கல்வியில் எழுத்தாய்வு கிடையாது என்றும் அவர்கள் எழுத்தாய்வுத் துறை சார்ந்த அறிவு அற்றவர் என்றும் ஒரு தவறான கருத்து உண்டு. ஆனால் எழுத்தாராய்ச்சி என்று ஒரு தனிப் பிரிவையே இவர்கள் கற்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அதனால் எழுதாக்கிளவி என்பது வேதங்களை மட்டும் குறிக்கும். ஜோதிடம் என்னும் பிரிவு கணிதத்தில் அடங்கும்.) தருமநூல் என்பது உலகியலைப்பற்றி ஆராயும் சட்டநூல் ஆகும். இதில் தலையாயது மனுவின் நூலாகும். மனு நூலுடன் சேர்த்து 18 தர்ம நூல்கள் சிறப்புற்றிருந்தன. இவற்றை “வேதத்தின் அங்கம்” என்று கொண்டனர். இவற்றுடன் இதிகாச புராணங்களும் கற்கப்பட்டன. அத்துடன் வேதங்களுக்கு மாறுபட்ட கருத்து களையும் அவற்றை மறுக்கும் நூல்களையும் கற்றனர். இவை எல்லாம் கடைசி கட்டமாகக் கற்றனர். இவை அனைத்தும் வடநூல்களாகும். இவை தவிர அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய தமிழ் நூல்களையும் சிறப்பாகக் கற்றனர். இவை எழுத்து, சொல், பொருள் ஆகிய இம்மைக்குப் பெரும் பயன் அளிப்பவை. அதனால் வேதங்களுக்கு அடுத்து ஆறு அங்கங்களுக்கு சமமாகக் கற்றனர். இதிகாச புராணங்களுக்கும் முன்னமாக தமிழ் இலக்கண நூல்கள் கற்றுள்ளனர் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவை தவிர, தமிழ்ச்செய்யுட்களும் இறையனார், அகத்தியர், மார்க்கண்டேயனார். வான்மீகனார், கௌதமனார் போன்ற சங்கப் புலவோர் பாடல்களையும் கற்றனர் எனவும் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். அதனால், சங்க காலத் தமிழ் அந்தணர் தமிழ் கற்கவில்லை, தமிழை அழித்தார்கள் என்பது கற்பனைப் புரட்டர் கூறும் கடும்பொய்யாகும்.
பொருளடக்கம் | அத்தியாயம்-15 | அத்தியாயம்-17 | அகெடமி