aRimukavurai aNintuRai.html chapter1.html chapter2.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி அறிமுகவுரை
பொருளடக்கம் | அணிந்துரை | அத்தியாயம்-1 | அகெடமி

இந்நூலில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தினமலர் நாளிதழில் பல காலகட்டங்களில் வெளியிடப்பட்டவை. இதுபோன்ற கருத்துகள் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவை தினமலர் நாளிதழில் இடம்பெற வேண்டும் என்றும் எனக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து எழுதும்படி உற்சாகமூட்டிப் பெருமைப்படுத்திய நிர்வாகி திரு. கோபால்ஜி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரே இந்தக் கட்டுரைகளின் தொகுப்பை ஒரு நூலாக வெளியிடவும் ஏற்பாடு செய்துள்ளார். 'யான் இதற்கு இல்லேன் ஓர் கைம்மாறே'. நான் எழுதியவற்றை, வாரம்தோறும் பிழையின்றி மின்அச்சு செய்து உதவிய என் நண்பர் முரளி அவர்களுக்கு நன்றிகள். வாரம் தோறும் தவறாது இக்கட்டுரைகளை கேட்டுப் பெற்று, அதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் உரிய ஓவியங்களை தேர்வு செய்து, வடிவமைத்த தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள். இந்நூலில், முதலில் செந்தமிழ்நாடு எனில் யாது என பண்டைய இலக்கண ஆசிரியர்களின் உரை கொண்டும், வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் காவிரி பள்ளத்தாக்கு என காட்டியுள்ளேன். தமிழ் மக்களின் திருமண மரபு தொன்றுதொட்டு இன்றுவரை எவ்வாறு உள்ளது என்பதை இலக்கிய சான்றுகளுடன் அன்றிருந்த அறிஞர், தெய்வப்புலவோர் வாயிலாக நாட்டியுள்ளேன். சங்க காலந்தொட்டு தமிழ்த் திருமண மரபு வேதமுறைப்படி நடந்து வந்துள்ளது என்பதைக் காட்டியுள்ளேன். தொல்காப்பியத்துக்கும் பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அதேபோல தொல்காப்பியத்தில் பதஞ்சலி முனிவரின் யோக மார்க்கமும் கௌதம புத்தர் போதித்த யோக சாத்திரத்தையும் குறித்து விளக்கியிருக்கிறேன். ஈராயிரம் ஆண்டுகளாக, தமிழகத்தை அறநெறிப்படுத்தும் நூலாக மனுவின் தர்மசாத்திரம் இருந்து வந்திருப்பதை பெரியபுராணத்தின் வாயிலாகவும், திருவாரூரில் நீதிகேட்ட பசுவுக்கு கோயில் எடுத்த இரண்டாம் குலோத்துங்க சோழனையும், மனு நெறி தழைத்தோங்க அவர்கள் ஆண்ட சீர்மையை சோழர்கால கல்வெட்டுகள் வாயிலாகவும் விவரித்துள்ளேன். தமிழ் மக்களின் அன்றைய ஏற்றத்தையும் வாழ்க்கை நெறியையும் விளக்கும் இக்கட்டுரைகள், பொய்யுரை கேளாது மெய்யுரை விரும்பும் அன்பர்களுக்கு பயனளிக்கும் என்ற எண்ணத்துடன், 90 வயது கடந்த எனது அனுபவங்களின் அச்சு வடிவமாக வெளிவருகிறது. இரா. நாகசாமி
பெசன்ட் நகர், சென்னை

பொருளடக்கம் | அணிந்துரை | அத்தியாயம்-1 | அகெடமி