aNinturai nUl.html aNintuRai.html aRimukavurai.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி அணிந்துரை
பொருளடக்கம் | நூல் | அறிமுகவுரை | அகெடமி

அன்பான வாசகர்களுக்கு, வரலாற்றை மீள்பார்வை செய்வதென்பது நிகழ்கால வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. கடந்த காலத்தின் அறிவையும் அனுபவத்தையும் திரும்பிப் பார்க்கின்றபோது, மானுடத்தின் பெருமையும் அதன் தவறுகளும் சேர்ந்தே புலப்படும். அத்துடன், இதுநாள்வரை நம்மிடம் சொல்லப்பட்டு வந்திருக்கின்ற வரலாற்றுத் திரிபுகளும் அம்பலமாகும். இத்தகைய வரலாற்றுத் திரிபுகளை அவ்வப்போது அம்பலப்படுத்தி, சமூகம் தடம் மாறாமல் செல்வதற்கு வழிகாட்டுபவர்கள் காலம் தோறும், அடர்வனத்தில் ஒற்றையடிப்பாதைபோல, நமக்கு மௌனமாக வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய தமிழ்ச்சமுதாயத்தில் அத்தகைய வழிகாட்டிகளில் ஒரு நூறு பேரை பட்டியலிட்டால், அதில் இடம்பெறும் சான்றோர்களில் ஒருவராக இருப்பவர் - தொல்லியல் அறிஞர் பத்மபூஷண் இரா. நாகசாமி அவர்கள். தமிழ்கூறும் நல்லுலகுக்கு அவர் செய்துள்ள சேவை அளப்பரியது. இன்றைய தலைமுறை அறியாதது. கொடுமுடியில் சிறிய பள்ளியில் படித்து, சென்னை விவேகானந்தர் கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்று, புனே பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலை வரலாறு பற்றிய ஆய்வுக்கு டாக்டர் பட்டம் பெற்றவர். 1959 ம் ஆண்டு சென்னை அருங்காட்சியத்தின் கலைத்துறை தலைவராக பணியாற்றியபோது, முதல்முறையாக சுப்ரமண்ய பாரதியாரின் கவிதைகளின் மூலப்பிரதிகளை மக்கள் பார்வைக்கு வைத்தார். எட்டயபுரம் பாரதியாரின் வீடு நினைவுக்கூடமாக மாறியது இவரது முயற்சியால்தான். 1963 பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பை ஏற்று தொல்லியல் ஆய்வு படிக்க இங்கிலாந்து சென்றவர், பாரீஸ், லண்டன் அருங்காட்சியங்களைப் பார்த்தவர் என்பதால், மதுரை நாயக்கர் மகாலில் அரசு அலுவலகம் இயங்குவதைவிட, அதை நினைவு மண்டபமாக மாற்றி, தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம் என்ற யோசனையை அரசுக்குத் தெரிவித்தார். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனே அதை நிறைவேற்றினார். இன்றளவும் மதுரை நாயக்கர் மகால் ஒரு நினைவுக்கூடமாகத் திகழ்கிறது. இப்போது சிதம்பரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தவர் இவர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் நாடகத்தை பிரிட்டிஷ் மியூசியத்தில் நடத்தியவர். தமிழக அரசு தனியாக ஒரு தொல்லியல் துறையை உருவாக்கிய போது அதற்கு தலைமை ஏற்றார். தமிழ் கல்வெட்டுத் துறையை உருவாக்கினார். தமிழ்க்கல்வெட்டியல் இன்றைய தினம் இளநிலை பாடத்திட்டமாகவே உள்ளது. 1960களில் தமிழர்களின் கோயில் கட்டடக் கலை குறித்து, ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்த கண்காட்சி, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ஓர் அரங்காக அமைந்து, பாராட்டுகள் பெற்றது. பத்தூர் நடராஜர் சிலையை லண்டனில் இருந்து மீட்டு வந்த வழக்கில் அரசு சார்பில் இவர் அளித்த சாட்சி வரலாற்றுப் பூர்வமானது. நீதிபதி அயான் கென்னடி என்பவர் தனது தீர்ப்பில், “இந்திய கலைச்செல்வங்களைக் கண்டறிவதில் ஈடுஇணையற்ற வல்லுனர்” எனப் பாராட்டி, இவரது சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழக்கினார். இன்றும்கூட வெளிநாடு கலைச்செல்வம் திரும்பி வர, சிலைத்திருட்டுத் தடுப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அறிவுரை, சான்றுகள் கொடுத்து வருகிறார். மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் அயோத்தி ராமர் கோயில் பற்றிய இவர் எழுதிய கட்டுரைகளும் உலக தொல்லியல் அறிஞர்களால் பாராட்டப்பட்டவை. யுனெஸ்கோ சார்பில் தஞ்சைப் பெருங்கோவில் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட்டபோது இவரைத்தான் ஆலோசகராக நியமித்தனர். தமிழகத்தில் கிராம தேவதை வழிபாடு பற்றி இவர் எழுதிய கட்டுரை, யுனெஸ்கோ கூரியர் இதழில் வெளியாகி, 30 மொழிகளில் உலகம் முழுதும் சென்று சேர்ந்திருக்கிறது. தமிழக சிற்பங்கள், கோயில்கள் குறித்து இவர் நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சென்ற ஆண்டு “Tamil Nadu - The Land of Vedas” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதை “வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று தமிழிலும் கொண்டு வர முயன்று வருகிறார். 90 வயதான போதும் ஓர் இளைஞனின் உத்வேகத்துடன் எழுதி வருகிறார். “செந்தமிழ் நாடும் பண்பும்” என்ற இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும், தமிழர் பெருமையையும், மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட தமிழர் வாழ்வியல் மற்றும் இலக்கிய உண்மைகளையும் பேசுகின்றன. திரு. இரா. நாகசாமி அவர்களது கட்டுரைகளை, தொடர்ந்து தினமலரில் வெளியிட்டதை எமக்குக் கிடைத்த வாய்ப்பாகவும், கடமையாகவும், நற்பேறாகவும் கருதுகிறோம். திரு கோபால்ஜி
நிர்வாகி, தினமலர்

பொருளடக்கம் | நூல் | அறிமுகவுரை | அகெடமி