ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி முகவுரை பொருளடக்கம் | முன்னுரை
தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் தலையாயவன் முதலாம் இராஜராஜ சோழன். இவனது இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இவன் முடிசூடியது வரலாற்று ஆண்டு 985ஆகும். முப்பது ஆண்டுகள் ஆண்டான். அவனது கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவன் தஞ்சையில் மாமேருவென மாபெரும் கற்கோயிலைக் கட்டுவித்து அதைத் தக்ஷிண மேரு என்று அழைத்தான். இது தவிர பிற இடங்களிலும் பல கோயில்களைக் கட்டியுள்ளான். கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியம், செப்புத் திருமேனிகள், அணிகலன்கள், பொன்னாலான கலங்கள், இசை, நாட்டியம், நாடாண்ட பாங்கு, இலக்கியத் தொண்டு என எல்லாத் துறைகளிலும் ஈடு இணையற்ற தனிச் செம்மலாகத் திகழ்ந்துள்ளான். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டியதாலும் ஈடிலா சிவபக்தியாலும், “சிவபாத சேகரன்” என்றழைக்கப் பெற்றான். இன்றைக்குச் சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்போல் அவன் வாழ்ந்திருக்கிறான். 1985ஆம் ஆண்டில் அவன் முடிசூடிய ஆயிரமாவது வருடம், நான் இரு கவிதைகளைப் புனைந்தேன். அவனது ஆற்றலையும் வரலாற்றையும் கலைப் பணியையும் போற்றி “அருள்மொழியே நீ ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் புகழொடு நிற்பாய்” என “அருள் மொழி ஆயிரம்” என்ற கவிதையை எழுதினேன். பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம் அவர்கள் அவரது சக்தி இதழில் வெளியிட்டார்கள். அது மீண்டும் பல பதிப்புகளில் இடம் பெற்றுள்ளது. அதனை கோயில் கட்டிய ஆயிரமாவது ஆண்டில் மீண்டும் இந்நூலில் நினைவு கூர்கிறேன். இரண்டாவதாக அதே ஆண்டு “இராஜராஜேச்வர விஜயம்” என்ற நாட்டிய இலக்கியம் ஒன்று படைத்தேன். அது பண்டைய இலக்கிய மரபில் எழுதப்பட்ட புதிய நாட்டிய நாடக இலக்கியமாம். அதை நாட்டிய நாடகமாக தஞ்சைப் பெருங்கோயிலிலேயே 1985இல் அவன் முடிசூடிய ஆயிரம் ஆண்டு விழாவில் படைத்தேன். அன்று அறத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிக இராம. வீரப்பன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்நாட்டிய நாடகத்தை சென்னைத் தொலைக்காட்சி நிலையம் படம் எடுத்து பலமுறை ஒளிபரப்பினார்கள். அந்நாட்டிய நாடகம் பல இடங்களில் நடத்தப்பட்டது. கனடா, இங்கிலாந்து (லண்டன்), அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடிக்கப்பட்டது. அந்நூல் முழுவதையுமே படித்து, காஞ்சி மகா பெரியவர்கள் என்னை “நீ ஒரு கவியாகி விட்டாய்” என்று வாழ்த்தி ஆசி அருளினார்கள். அது நல்ல இலக்கியமாகவே மலர்ந்ததால் அதை இந்நூலில் இணைத்துள்ளேன். இராஜராஜனின் கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு மிகச் சிறப்புடையது. திருக்கோயிலூரில் வீரட்டானம் கோயிலில் உள்ள அக்கல்வெட்டு, சங்கத் தமிழ் மரபில் பத்துப் பாட்டுப் போல எழுதப்பட்டுள்ளது. அதில் இராஜராஜன் சங்கப் புலவன் கபிலனைக் கூறியுள்ளான். இராஜராஜன் தாய் மலையமான் குலத்துதித்தவள். அவளைப் புகழ்ந்துள்ளது ஒரு ஈடிலா கவிதையாகும். “இராஜராஜன் என்னும் புலியைப் பயந்த பெண்மான்” என்று அவனே கூறியுள்ளான். அக்கவிதைக் கல்வெட்டை மேலை நாட்டறிஞர்கள் எல்லாம் போற்றுகின்றனர். அதை ஆய்ந்து நான் எழுதிய கட்டுரையும் இந்நூலில் இடம் பெறுகிறது. தஞ்சைக் கோயிலில் இராஜராஜன் தீட்டிய ஓவியங்கள் எல்லாம் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை என்று அண்மையில் ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதினேன். அதைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு உரையாக ஆற்ற துணை வேந்தர் டாக்டர். மு. இராஜேந்திரன் ஏற்பாடு செய்து சிறப்பு செய்தார். தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அக்கட்டுரையை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளார்கள். என்னை ஊக்குவித்த அத்தனை பெரியார்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிப் பெருக்கைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேறு சில கட்டுரைகளும் இதில் இடும் பெற்றுள்ளன. இந்நூல் பயனுடையதாக மலர தமிழ்மக்கள் படித்து மகிழ வேண்டுகிறேன்.
25.09.2010
விதயாவாசஸ்பதி, கலைமாமணி
டாக்டர் இரா. நாகசாமி

பொருளடக்கம் | முன்னுரை